15ஆவது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி (யூரோ) பிரான்சில் நடைபெற்று வருகிறது.
‘பி’ பிரிவில் கடைசி ‘லீக்’ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து – சுலோவாக்கியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதனால் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்து வீரர்கள் கோல் அடிக்கும் பல வாய்ப்புகளை வீணடித்தனர். இதேபோல் சுலோ வாக்கியா வீரர்களும் வாய்ப்புகளை கோலாக மாற்றத் தவறினர்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வேல்ஸ் – ரஷியா அணிகள் மோதின. இதில் ரஷியா 0-3 என்ற கோல் கணக்கில் மோசமாகத் தோற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
U17 மற்றும் U19 கால்பந்து சம்பியனானது மெரிஸ் ஸ்டெலா கல்லூரி
வேல்ஸ் அணியில் ஆரோன் ராம்ஷே (11-வது நிமிடம்), டெய்லர் (20-வது நிமிடம்), பாலே (67-வது நிமிடம்) கோல் அடித்தனர்.
‘பி’ பிரிவில் வேல்ஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், இங்கிலாந்து 1 வெற்றி, 2 சமநிலை முடிவுடன் 5 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்தையும் பிடித்தன. முதல் 2 இடங்களைப் பிடித்த வேல்ஸ், இங்கிலாந்து அணிகள் 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
சுலோவாக்கியா 1 வெற்றி, 1 சமநிலை முடிவு , 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தைப் பிடித்தது. அந்த அணி மற்ற பிரிவுகளில் 3ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளின் முடிவுக்காகக் காத்திருக்கிறது.
தற்போதுள்ள நிலையில் சுலோவாக்கியா முன்னிலையில் இருக்கிறது. இதனால் வாய்ப்பைப் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 பிரிவுகளில் உள்ள 3ஆவது இடத்தைப் பிடிக்கும் 6 அணிகளில் இருந்து ‘டாப் 4’ அணிகள் ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். ரஷியா 1 சமநிலை முடிவு, 2 தோல்வியுடன் 1 புள்ளி பெற்று ‘பி’பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் ‘சி’பிரிவில் உள்ள உக்ரைன் – போலந்து, ஜெர்மனி – வடக்கு அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஜெர்மனி போலந்து அணிகள் தலா 4 புள்ளியுடனும், வடக்கு அயர்லாந்து 3 புள்ளியுடனும் உள்ளன. உக்ரைன் புள்ளி எதுவும் பெறவில்லை.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்