யூரோ கிண்ணக் கால்பந்து தொடரில் மற்றுமொரு காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் பெல்ஜியம் மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் சர்வதேச அளவில் 12 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பெல்ஜியம் 5 ஆட்டத்திலும், வேல்ஸ் 4 ஆட்டத்திலும் வெற்றிபெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் சமநிலையில் முடிவடைந்திருந்தன. இந்த நிலையில் தான் விறுவிறுப்பான காலிறுதிப் போட்டி நடைபெற்றது.
இன்றைய ஆட்டம் நடைற்ற லில்லி நகரம் பெல்ஜியம் நாட்டில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது. இதனால் வேல்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தை பெல்ஜியம் அணி தனது சொந்த நாட்டில் நடைபெறும் போட்டியாகவே கருதி விளையாடியது.
போட்டி ஆரம்பித்து 13ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ரெட்ஜா நைங்கொலன் அணிக்காக முதலாவது கோலைப் போட்டார். இதன் பின் இன்னுமொரு கோலைப் போட்டு போட்டியில் முன்னிலை பெறும் நோக்கில் பெல்ஜியம் விளையாடியது. ஆனால் வேல்ஸ் வீரர்களோ போட்டியை இலகுவாக விடவில்லை. விடாப்பிடியாக எவ்வாறாவது ஒரு கோலைப் போட்டு முதலில் போட்டியை சமம் செய்யவேண்டும் என்ற முனைப்போடு விளையாடியது. அந்த முனைப்பின் பிரதிபலனாக வேல்ஸ் அணியின் அஷ்லி வில்லியம்ஸ போட்டியின் 31ஆவது நிமிடத்தில் “ஹெடிங்” முறை மூலம் முதலாவது கோலைப் போட்டார்.
இதனால் முதல் பாதி முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் வீதம் போட்டு போட்டி சமநிலையில் காணப்பட்டது.
பின் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்தது. அது ஆரம்பித்து 10 நிமிடங்களிலேயே பெல்ஜியம் அணிக்கு தலையிடி ஆரம்பித்தது. வேல்ஸ் அணி வீரர் ஹால் ரொபின்சன் காணு போட்டியின் 55ஆவது நிமிடத்தில் தமது அணி சார்பாக இரண்டாவது கோலைப் போட்டு தனது அணியைப் போட்டியில் முன்னிலைக்கு செல்ல உதவினார்.
இதன் பின் பெல்ஜியம் வீரர்கள் போட்டியை சமநிலைப்படுத்த ஒரு கோலை போட்டாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் பெரிதும் போராடியது. மறுபக்கம் போட்டியின் முழுப் போக்கை தமது பக்கம் திருப்ப வேல்ஸ் அணி இன்னமொரு கோலைப் போட வேண்டும் என்ற புத்துணர்ச்சியோடு விளையாடியது.
இரு அணிகளும் கோல்களைப் போட போராடியது அதன் பிரதிபலன் வேல்ஸ் அணியையே சார்ந்தது. போட்டி முடிய 4 நிமிடங்கள் இருக்கும் போது 86ஆவது நிமிடத்தில் வேல்ஸ் வீரர் சம் வொக்ஸ் தனது அணியின் வெற்றியை உறுதிசெய்யும் கோலைப் போட்டார். இதன் மூலம் போட்டியின் முழு நேர முடிவில் வேல்ஸ் அணி 3-1 என்ற ரீதியில் போட்டியை வெற்றிகொண்டு யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணி முதன்முறையாக அரையிறுதிக்குத் தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்