V.T மகாலிங்கம் அவர்களது ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட “வி.ரி.மகாலிங்கம் பிரீமியர் லீக் T-20” கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை 24 ஓட்டங்களால் வீழ்த்திய திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் தொடரின் சம்பியன்களாக முடிசூடியது.
முதலாவது முறையாக இவ்வருடம், யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கம் வி.ரி.மகாலிங்கம் அவர்களது சகோதரர் வி.ரி.சிவலிங்கத்தின் அனுசரணையுடன் நடாத்திய இந்த கிரிக்கெட் சுற்றுத்தொடர் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட 24 கழகங்களின் பங்கெடுப்புடன் இடம்பெற்றிருந்தது.
மகாலிங்கம் ஞாபகார்த்த இறுதிப் போட்டியில் திருநெல்வேலி – யாழ் பல்கலை அணிகள்
யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கம் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடாத்தி வரும் V.T மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ண T-20…
அரையிறுதிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணியை எதிர்த்து சென்றலைற் விளையாட்டுக் கழகமும், திருநெல்வேலி ரி.சி.சி அணியை எதிர்த்து அரியாலை மத்திய விளையாட்டுக் கழக அணியும் மோதியிருந்தன. அவற்றில் வெற்றி பெற்ற யாழ். பல்கலைக்கழக அணியும் திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணியும் தொடரின் இறுதியாட்டத்துக்கு தெரிவாகியிருந்தன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற திருநெல்வேலி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தனர்.
முதல் ஓவரிலேயே 5 ஓட்டங்களை சேகரித்திருந்த திருநெல்வேலி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தர்சிகன், அசோக்கினை அடுத்தடுத்து மைதானம் விட்டு அனுப்பினார் பல்கலையின் பந்துவீச்சாளர் ஜெனந்தன்.
பின்னர் 3ஆவது விக்கெட்டிற்காக இணைந்த ஜசிந்தன், லவகாந்த் ஜோடி அரைச்சத இணைப்பாட்டத்தினை பகிர்ந்திருந்த வேளையில் ஜசிந்தன், லோகதீஸ்வரால் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து துவாரசீலன் வீசிய 13ஆவது ஓவரில் சைலேஸ்வரன் 14, சுரேந்திரன் ஆகியோர் ஆட்டமிழக்க 81 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது திருநெல்வேலி அணி.
தொடர்ந்து வந்த சிவாராஜ் 14, சுரேஷ் 08, பிரபாவன் 08 மற்றும் கிருத்திகனின் பெறுமதியான 10 ஓட்டங்களுடன் 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது திருநெல்வேலி தரப்பு.
பந்து வீச்சில் ஜெனந்தன் 23 ஓட்டங்களிற்கு 04 விக்கெட்டுக்களையும், சிக்கனமாகப் பந்து வீசிய துவாரகசீலன் 10 ஓட்டங்களிற்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இலங்கை அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிப்பு
இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின்…
தொடர்ந்து 130 என்ற இலகுவான இலக்கினை நோக்கி களம்புகுந்த பல்கலையின் ஆரம்பத் துடுப்பாட்ட விரர்களான கபில்ராஜ், கல்கோகன் இணை முதல் ஓவரிலேயே இரண்டு சிக்சர்கள், ஒரு பௌண்டரி உள்ளடங்கலாக 19 ஓட்டங்களை சேகரித்து.
அடித்தாடிக்கொண்டிருந்த கல்கோகனை பிரபாவன் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த ஓவரிலேயே சுரேஷின் பந்து வீச்சில் கபில்ராஜ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த செந்தூரனையும் பிரபாவன் ஆட்டமிழக்கச் செய்ய 33/3 எனும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது பல்கலை அணி.
நான்காவது விக்கெட்டிற்காக துவாரகசீலன் மற்றும் குருகுலசூரிய ஆகியோர் 26 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியினை தம்பக்கம் ஈர்த்துக்கொண்டிருந்த வேளையில் தூவாரகசீலன் (14) சுரேந்திரனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சுரேந்திரன் வீசிய 10ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் அடித்தாடி 6 ஓட்டம்பெற்ற கஜேந்திரன் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். குருகுலசூரிய 14, பண்டார ஆகியோரது விக்கெட்டுக்களை அடுத்த ஓவரில் அனுருத்தன் வீழ்த்தினார்.
அதன் பின்னர் 9ஆவது விக்கெட்டிற்காக நிதர்சன் மற்றும் சுபேந்திரன் 30 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்த வேளையில் சுபேந்திரன் ஆட்டமிழந்தார். 19ஆவது ஓவரில் லோகதீஸ்வர் ரன் அவுட் முறை மூலம் ஆட்டமிழக்க, 19 ஓட்டங்களுடன் நிதர்சன் களத்திலிருந்தார்.
இதன் காரணமாக, 24 ஓட்டங்களால் யாழ். பல்கலைக்கழக அணியினை வெற்றிகொண்ட திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணி V.T மகாலிங்கம் பிரீமியர் லீக்கின் முதலாவது கிண்ணத்தினை தமதாக்கியது.
திருநெல்வேலி அணியின் பந்து வீச்சினைப் பொறுத்தவரையில் சுரேந்திரன் 10 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் அனுரதன், பிரபாவன், சுரேஷ் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
போட்டி சுருக்கம்
திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 129/09 (20) – லவகாந்த் 35,சைலேஸ்வரன் 14, சிவராஜ் 14, உதிரிகள் 21, ஜெனந்தன் 4/23, துவாரகசீலன் 3/10
யாழ் பல்கலைக்கழகம் 105/10 (18.2) – நிதர்சன் 19*, துவாரகசீலன் 14, குருகுலசூரிய 14, சுரேந்திரன் 03/10, அனுரதன் 02/18, பிரபாவன் 02/19
போட்டி முடிவு: 24 ஓட்டங்களால் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் வெற்றி
மூன்றாம் இடத்திற்கான போட்டி
யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் – அரியாலை சென்றல் ஆகிய அணிகள் மோதியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது சென்றலைட்ஸ்.
BPL தொடரில் முதற்தடவையாக களமிறங்கவுள்ள மாலிங்க
ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) டி20 தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர…
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணியின் சார்பாக ஜூலியஸ் 49, அலன்ராஜ் 34, செல்ரன் 23, டார்வின் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜரோசன், ஜெனன்ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுபெடுத்தாடிய அரியாலை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அரியாலை அணி சார்பாக கிருபாகரன் 53, பிரிசங்கர் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர். பந்துவீச்சில் அதிரடி காண்பித்த ஜெரிக் 25 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை விழ்த்தியிருந்தார். சென்றலைட்ஸ் அணியினர் 51 ஓட்டங்களால் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தினைத் தமதாக்கினர்.
விருதுகள்
இறுதிப் போட்டிக்கான விருதுகள்
சிறந்த துடுப்பாட்டவீரர் – லவகாந்த் – திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்
சிறந்த களத்தடுப்பாளர் – கிருத்திகன் – திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்
சிறந்த பந்து வீச்சாளர் – ஜெனந்தன் – யாழ் பல்கலைக்கழகம்
ஆட்ட நாயகன் – சுரேந்திரன் – திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்
தொடர் விருதுகள்
சிறந்த துடுப்பாட்ட வீரர் – தர்சிகன் – திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்
சிறந்த பந்து வீச்சாளர் – லோகதீஸ்வர் – யாழ் பல்கலைக்கழகம்
தொடர் நாயகன் – துவாரகசீலன் – யாழ் பல்கலைக்கழகம்