இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 13ஆவது பாராளுமன்றத்துக்கு தேர்வாகிய 225 உறுப்பினர்களில் 9 பேர் இலங்கை கரப்பந்தாட்ட விளையாட்டுடன் தொடர்பு வைத்தவர்களாக காணப்படுகின்றனர்.
இதன்படி, இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் குறிப்பிட்டதொரு சங்கத்தைச் சேர்ந்த அதிகளவான நபர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கையின் தேசிய விளையாட்டு கரப்பந்தாட்டமாகும். எனினும், தேசிய அளவில் இந்த விளையாட்டானது பெரிதளவில் பேசப்படாவிட்டாலும், இலங்கை பூராகவும் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இந்த விளையாட்டானது வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபயல்மாக காணப்படுகின்றது.
இலங்கை விளையாட்டில் நாமல் ராஜபக்ஷ எனும் புது அவதாரம்
அதுமாத்திரமின்றி, இலங்கையில் உள்ள பாடசாலைகளில் சுமார் 6 ஆயிரம் கரப்பந்தாட்ட அணிகள் உள்ள ஒரேயொரு விளையாட்டு இதுவாகும்.
இவ்வாறான ஒரு நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த பாராளுமன்றத் தேர்தலில் கரப்பந்தாட்ட விளையாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய 9 பேர் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் என்றே சொல்லலாம்.
இதன்படி, 13ஆவது பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய உறுப்பினர்களில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தில் அதிக காலம் தலைவராகச் செயற்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா காணப்படுகின்றார்.
இதனிடையே, கொழும்பு பல்கலைக்கழகத்தில் கரப்பந்தாட்டத்துக்கான வர்ணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளவரும், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய தலைவருமான கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கரப்பந்தாட்ட குடும்பத்தின் முக்கிய உறுப்பினராக உள்ளார்.
கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய சுதர்ஷனி பெர்னாந்து புள்ளே, நிமல் லன்சா ஆகிய இருவரும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தில் நீண்டகாலமாக உப தலைவர்களாக செயற்பட்டுள்ளனர்.
இதில் சுதர்ஷனி பெர்னாந்து புள்ளே, பாடசாலை காலம் முதல் கரப்பந்தாட்ட விளையாட்டில் செயற்பட்டிருந்ததுடன், பாடசாலைக் கல்வியின் பிறகு வைத்திய கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்ட போதும் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தார்.
இந்த நிலையில், கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய திலும் அமுனுகம, களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷான்த, மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல்தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய தென் மாகாணத்தின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான வீரசுமன திஸாநாயக்க ஆகியோர் கரப்பந்தாட்ட விளையாட்டு மற்றும் நிர்வாகத்தில் இருந்துள்ளார்கள்.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்டுத்தி பாராளுமன்றத்துக்கு மீண்டும் தேர்வாகியுள்ள முன்னாள் அமைச்சரான பழனி திகாம்பரமும் நீண்ட காலமாக இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்.
எனவே, சுமார் 100 வருடங்கள் வரலாற்றைக் கொண்ட, இலங்கையின் தேசிய விளையாட்டாக உள்ள கரப்பந்தாட்ட விளையாட்டுடன் தொடர்புடைய நிறைய அரசியல்வாதிகள் இலங்கையில் காணப்படுகின்றமை பெருமைப்படுகின்ற விடயமாகும். அதில் பெரும்பாலானோர் கரப்பந்தாட்ட வீரர்களாகவும், சிறந்த நிர்வாகிகளாலும் இருந்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்தப் பட்டியலில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க ப்ரேமதாச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் வி.ஏ சுகததாச, முன்னாள் அமைச்சர்களான பீட்டர் கேமன், காமினி ஜயசூரிய, டி.பி விக்ரமசிங்க, அசோக்க வடிகமன்காவ, ரெஜி ரணதுங்க, மர்வின் ஜே குரே, ஜெயராஜ் பெர்னாந்து புள்ளே, எம்.எஸ் செல்லசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஹலீம் இஷாக்கும் கரப்பந்தாட்ட விளையாட்டுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர்.
Video – மஹேலவின் வார்த்தைக்காக அகில, குசல் ஆகியோரை அணியில் இணைத்த அசந்த!
இலங்கையைப் பொறுத்தமட்டில் கரப்பந்தாட்டமானது ஏழைகளின் விளையாட்டாகும். இந்த நாட்டில் கரப்பந்தாட்ட விளையாட்டுடன் தொடர்புடைய பெரும்பாலான அரசியல்வாதிகள் சாதாரண குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனவே இம்முறை பாராளுமன்றத்துக்கு தேர்வாகிய 9 பேரும் கரப்பந்தாட்ட விளையாட்டுடனும், இலங்கை வலைப்பந்தாட்ட நிர்வாகத்துடனும் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள். இலங்கை தேசிய விளையாட்டாக கரப்பந்தாட்டம் காணப்பட்டாலும், போதுமான அவதானம் அந்த விளையாட்டுக்கு செலுத்தப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது.
உண்மையில் இலங்கையில் உள்ள 90 சதவீதமான இரசிகர்களின் மனதை வென்ற விளையாட்டாக கிரிக்கெட் காணப்படுகின்றது.
ஏனெனில் 1996 ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2014 T20i உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றி சாதனை படைத்தது. இதன் காரணமாகவே இலங்கை இரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிக்கிறார்கள்.
Video – இலங்கையின் விளையாட்டுக்கு கைகொடுக்கத் தயார்! Kumar Sangakkara
எனவே கிரிக்கெட் விளையாட்டுக்கு கிடைத்த பணத்தில் ஒரு சிறிய தொகையையாவது இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்துக்கு ஒதுக்கினால் நிச்சயம் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள திறமையான வீரர்களை சர்வதேச அரங்கில் ஜொலிக்க வைக்க முடியும். அதுமாத்திரமில்லாமல் இலங்கைக்கு பல வெற்றிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
அதுமாத்திரமின்றி, இம்முறை பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய கரப்பந்தாட்ட விளையாட்டுடன் தொடர்புடைய 9 பேரும், இலங்கையின் இளம் வயது விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷவுடன் கைகோர்த்து விரைவில் இதற்கான உரிய தீர்வினை மிக விரைவில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<