இலங்கை குழாத்தில் நுவன் பிரதீப்புக்கு பதில் விஷ்வ பெர்னாண்டோ

364

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளார்.

உபாதைக்கு உள்ளான வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப்புக்கு பதிலே பெர்னாண்டோ டெஸ்ட் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். நுவன் பிரதீக் ஹோர்பார்டில் கடந்த வாரம் நடைபெற்ற பயிற்சிப் போட்டியின்போது தொடை பகுதியில் தசைப்பிடிப்புக்கு உள்ளானார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு எதிரான அந்தப் பயிற்சிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர் இரண்டு ஓவர்கள் மாத்திரம் வீசிய நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.  

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்

இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப்…

அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் பிரிஸ்பானில் நாளை (ஜனவரி 24) ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், விஷ்வ பெர்னாண்டோ தொடருக்காக வரும் வெள்ளிக்கிழமை இலங்கை அணியுடன் இணையவிருப்பதோடு, கன்பராவில் நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்டுக்கான அணித் தேர்வில் அவர் கருத்தில் கொள்ளப்படவுள்ளார்.    

பெர்னாண்டோ தனது இடது கை பந்துவீச்சு பாணி மூலம் இலங்கை பந்துவீச்சு குழாமில் சில மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016 மற்றும் 2017இல் முறையே அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி 34.33 என்ற பந்துவீச்சு சராசரியை பெற்றுள்ளார்.  

காயம் காரணமாக நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறி இருந்த பெர்னாண்டோ தற்போது நடைபெற்று வரும் கழகங்களுக்கு இடையிலான பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடி வருகிறார். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமில்லாத ஆடுகளத்தில் அவர் இந்தப் பருவத்தில் இதுவரை 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வரை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<