பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ விலகியுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சட்டக்ரொமில் நடைபெற்றுவருகின்றது.
>> மெதிவ்ஸின் அபார துடுப்பாட்டத்துடன் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை
போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த விஷ்வ பெர்னாண்டோவின் தலையில் பந்து தாக்கியிருந்தது. சொரிபுல் இஸ்லாம் வீசிய ஓவரில், விஷ்வ பெர்னாண்டோவின் ஹெல்மட்டில் பந்து தாக்கியது.
இதன்காரணமாக நீண்ட நேரம் சிகிச்சைகளை பெற்றுக்கொண்ட விஷ்வ பெர்னாண்டோ, நேற்றைய தினம் தேநீர் இடைவேளை வரை துடுப்பெடுத்தாடியிருந்தார். எனினும், தேநீர் இடைவேளையின் பின்னர் அசித பெர்னாண்டோ களமிறங்க, இவர் ஆட்டமிழந்த பின்னர் மீண்டும் விஷ்வ பெர்னாண்டோ துடுப்பெடுத்தாட களமிறங்கினார்.
அதேநேரம், நேற்றைய தினம் இலங்கை அணிக்காக ஓவர்களையும் வீசியிருந்த இவர், இன்றைய தினமும் மதியபோசன இடைவேளை வரை பந்து ஓவர்களை வீசியிருந்தார். இவர் மொத்தமாக 8 ஓவர்கள் பந்துவீசி 42 ஓட்டங்களை வழங்கியிருந்தார்.
எவ்வாறாயினும், பந்து தலையைில் தாக்கியமை காரணமாக இவரால் தொடர்ந்தும் இந்த போட்டியில் விளையாட முடியாது என்ற காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விஷ்வ பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனவே ஐசிசியின் விதிமுறைப்படி பந்து தலையில் தாக்கினால், அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை அணியில் இணைக்கமுடியும். அதன்படி, வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.
நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியை பொருத்தவரை இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 397 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் அணி இன்றைய தினத்தின் மதியபோசன இடைவேளை வரை விக்கெட்டிழப்பின்றி 157 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<