முடிவுக்கு வந்தது மொயீன் அலியின் இந்திய வீசா சிக்கல்

Indian Premier League 2022

312
Moeen Ali

இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலியின் வீசா பிரச்சினைகள் நிறைவுக்குவந்துள்ள நிலையில், அவர் இன்று மாலை (24) சென்னை சுபர் கிங்ஸ் அணியுடன் இணைந்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சகலதுறை வீரரான மொயீன் அலி இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL), சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக தக்கவைக்கப்பட்டிருந்தார். அணியின் முக்கிய வெளிநாட்டு வீரரான இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இந்திய வீசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்.

>> சங்கக்கார, சச்சினின் சாதனையை முறியடித்தார் ஸ்மித்

எவ்வாறாயினும், அவருடைய வீசா அனுமதி இழுபறி நிலையை அடைந்ததன் காரணமாக அவர் அணியுடன் சரியான நேரத்துக்கு இணைந்துக்கொள்வாரா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதுமாத்திரமின்றி சென்னை சுபர் கிங்ஸ் நிர்வாகம் குறிப்பிட்ட இந்த வீசா சிக்கல் காரணமாக தங்களுடைய அதிருப்தியையும் வெளியிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் (23) மொயீன் அலி வீசாவுக்கான பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ளார் எனவும், அவர் இன்று மாலை நேரடியாக மும்பைக்கு வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு செல்வார் எனவும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மொயீன் அலி விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என காசி விஸ்வநாதன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

IPL தொடர் நாளை மறுதினம் (26) ஆரம்பமாகவுள்ளதுடன், தொடரின் முதல் போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<