இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கவாஸ்கர் யுகம், சச்சின் யுகம், தோனி யுகமெல்லாம் முடிந்து கிரிக்கெட்டில் இது கோஹ்லி யுகம். கிரிக்கெட் பார்க்கும் இன்றைய இளம் தலைமுறையின் முதல் நாயகன் விராட் கோஹ்லி என்று சொல்லலாம். இதற்குக் காரணம் அவரது சாதனைகள். கிரிக்கெட் உலகின் ஓட்ட இயந்திரம் என வர்ணிக்கப்படுகின்ற கோஹ்லி, இலங்கை அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் சாதனைக்கு மேல் சாதனைகளை நிகழ்த்தி கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி, 4975 ஓட்டங்களை 51.82 சராசரியுடன் பெற்றுக்கொண்டுள்ளார். 235 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டுள்ள அவர், 14 அரைச்சதங்களையும், 19 சதங்களையும் குவித்துள்ளார். இதில் 5 இரட்டைச்சதங்களும் அடங்கும்.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தை பரபரப்பாக மாற்றியதில் விராட் கோஹ்லிக்கு முக்கிய பங்குண்டு. தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் சதம் அடித்ததுடன் இலங்கை அணிக்கு தோல்வி பயத்தையும் உருவாக்கினார்.
எமது மோசமான துடுப்பாட்டமே தோல்விக்குக் காரணம்: சந்திமால்
இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 50 சதங்கள் அடித்து விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்தார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்த கோஹ்லி, 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லியின் 18 ஆவது சதம் இதுவாகும். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 50 சதம் அடித்து அசத்தியுள்ளார். இதில் ஒரு நாள் போட்டிகளில் 32 சதங்கள் அடித்துள்ளார்.
அத்துடன், முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி அதன் பின்னர் 2 ஆவது இன்னிங்ஸில் சதம் விளாசிய முதல் இந்தியத் தலைவர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுக்கொண்டார்.
இப்பட்டியலில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் 71 சதங்களுடன் 2 ஆவது இடத்திலும், இலங்கையின் குமார் சங்கக்கார 63 சதங்களுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளனர். இதில் 50 சதங்களைக் குவித்த விராட் கோஹ்லி உலக வரிசையில் 8 ஆவது இடத்தில் உள்ளார். அத்துடன், 50 சதங்களை விரைவாகக் கடந்தவர்களின் பட்டியலில் தென்னாபிரிக்காவின் ஹஷிம் அம்லாவுடன் கோஹ்லி இந்த சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 348 இன்னிங்சுகளில் இந்த சாதனையை படைத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனையடுத்து நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் அதிரடி காட்டிய கோஹ்லி, 19 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்ததுடன், 267 பந்துகளுக்கு முகங்கொடுத்து 213 ஓட்டங்களுடன் இரட்டைச் சதம் கடந்து பிரம்மிக்க வைத்தார். அத்துடன், டெஸ்ட் அரங்கில் பல சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார்.
தலைவராக 10 சதங்கள்
சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் விராட் கோஹ்லி தலைவராக மொத்தம் 10 சதங்களை (டெஸ்ட் – 4 சதங்கள், ஒரு நாள் போட்டி – 6 சதங்கள்) ருசித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சர்வதேச சதங்களை விளாசிய தலைவர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரரானார். இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (2005 மற்றும் 2006ஆம் ஆண்டு), தென்னாபிரிக்காவின் கிரேம் ஸ்மித் (2005ஆம் ஆண்டு) ஆகியோர் தலைவர்களாக ஓர் ஆண்டில் தலா 9 சதங்கள் பெற்றுக்கொண்டமை சாதனையாக இருந்தது. அச்சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார்.
பிரெட்மெனை பின்தள்ளிய கோஹ்லி
அண்மைக்காலமாக டெஸ்ட் அரங்கில் 50 ஓட்டங்களைக் கடந்த பிறகு அதை சதங்களாக மாற்றுவதில் கெட்டிக்காரராக கோஹ்லி திகழ்கிறார். குறைந்தது 10 சதங்கள் அடித்த தலைவர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால், அதில் இடம்பெறும் 18 பேரில் கோஹ்லி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அதாவது தலைவராக அவர் இதுவரை 16 தடவைகள் அரைச்சதங்களைக் கடந்து அதில் 12–ஐ சதங்களாக மாற்றியுள்ளார். இந்த வகையில் அரைச்சதங்களை, சதங்களாக மாற்றுவதில் அவரது சராசரி 75 சதவீதம் ஆகும். இதற்கு அடுத்து அவுஸ்திரேலியாவின் டொன் பிரெட்மென் (67 சதவீதம்), மைக்கல் கிளார்க் (67 சதவீதம்) உள்ளனர்.
கவாஸ்கரை முந்திய கோஹ்லி
அதிக சதங்களைக் குவித்த இந்தியராகவும் விராட் கோஹ்லி வலம் வருகிறார். தலைவராக அவரது டெஸ்ட் சதங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு இச்சிறப்பைத் தக்க வைத்திருந்த சுனில் கவாஸ்கர் 11 சதங்களுடன் 2 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார்.
இந்தியாவில் முதல் வெற்றியை சுவைத்த இலங்கை இளம் அணி
அத்துடன், டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்துள்ள இந்திய தலைவர்களின் பட்டியலில் 3 ஆவது இடம் வகித்த மொஹமட் அசாருதீனை (47 டெஸ்ட்டில், 2,856 ஓட்டங்கள்) தற்போது விராட் கோஹ்லி (31 டெஸ்ட்டில், 2,877 ஓட்டங்கள்) பின்தள்ளியுள்ளார். இத்தகைய சாதனையில் முதல் இரு இடங்களில் தோனி (60 டெஸ்ட்டில் 3,454 ஓட்டங்கள்), சுனில் கவாஸ்கர் (47 டெஸ்ட்டில் 3,449 ஓட்டங்கள்) உள்ளனர்.
5ஆவது இரட்டைச்சதம்
டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லியின் 5ஆவது இரட்டைச்சதமாக இது அமைந்தது. இந்திய வீரர்களில் விரெந்தர் ஷெவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 6 இரட்டை சதத்துடன் முதலிடத்தில் உள்ளனர். 2 ஆவது இடத்தை விராட் கோஹ்லி, ராகுல் டிராவிட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அத்துடன், இந்த 5 இரட்டைச் சதங்களையும் கோஹ்லி தலைவராக இருந்து பெற்றுக்கொண்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். எனவே தலைவராக அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாராவை (கோஹ்லி 5) சமன் செய்துள்ளார். அடுத்த வரிசையில் டொன் பிரெட்மென், மைக்கல் க்ளார்க், கிரேம் ஸ்மித் (தலா 4 இரட்டை சதம்) ஆகியோர் உள்ளனர்.
அதிக வெற்றிகள் கண்ட தலைவர்கள்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்தது. இதன்படி இந்திய அணி 2017 இல் பெற்றுக்கொள்ளுகின்ற 32 ஆவது சர்வதேச வெற்றி இதுவாகும். அத்துடன், 31 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு அதிக வெற்றிகள் கண்ட தலைவர்களில் கோஹ்லி 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (23 வெற்றிகள்), அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் வோஹ் (21 வெற்றிகள்), இந்தியாவின் விராட் கோஹ்லி (20 வெற்றிகள்), இங்கிலாந்தின் மைக்கல் வோன் (19 வெற்றிகள்) என வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளனர்.
2006 ஆம் ஆண்டு முதல்தரப் போட்டிகளில் அறிமுகமாகிய கோஹ்லி, 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணியின் தலைவராகச் செயற்பட்டதோடு, சம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார். அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு 2008 இல் ஒரு நாள் போட்டிகளிலும், 2010 இல் டி20 போட்டிகளிலும் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட கோஹ்லி, 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார். இதில் இந்திய ஒரு நாள் அணியின் தலைவராக 2012 இலும், டெஸ்ட் அணியின் தலைவராக 2014 இலும் நியமிக்கப்பட்ட கோஹ்லி, உலக கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வீரராக மாத்திரமல்லாது சிறந்த தலைவராகவும் பல சாதனைகளைப் படைத்து வலம் வந்துகொண்டிருக்கின்றார்.
இந்நிலையில், கோஹ்லியின் சாதனைப் பட்டியலை எடுத்துக்கொண்டால், டி20 போட்டிகளில் அதிவேகமான ஆயிரம் ஓட்டங்கள், ஒரே வருடத்தில் அதிக ஓட்டங்கள், அதிக அரைச்சதங்கள், இந்தியா சார்பில் ஒரு நாள் போட்டிகளில் அதிவேக சதம், அதிவேக 5000 ஓட்டங்கள் உள்ளிட்ட பல சாதனைகளுக்கும் அவர் சொந்தக்காரராக உள்ளார். அத்துடன், டெஸ்ட் அணித்தலைவராக முதல் மூன்று இன்னிங்சுகளிலும் சதம் விளாசிய கோஹ்லி, டெஸ்ட் தலைவராக முதல் இரட்டைச் சதத்தையும் பதிவுசெய்த பெருமையையும் அவரையே சாரும்.
டெஸ்ட் முதல் டி20 போட்டிகள் வரை இந்திய அணியின் அனைத்து வெற்றிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய் நிற்பது கோஹ்லிதான். இதனாலேயே அவரை கவாஸ்கர், டிராவிட், சச்சின் மற்றும் தோனிக்கு அடுத்தபடியாக ஒரு சிறந்த தலைவராக இதுவரை மனதில் வைத்துக் கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் சபை செயல்படுகிறது. ஆனால் பசி அடங்காத சிங்கம் போல அதிரடியை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கும் கோஹ்லி, கிரிக்கெட் உலகில் இன்னும் பல சாதனைகளைப் படைத்து உச்சத்தை தொடுவார் என்பதில் சந்தேகமில்லை.