கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைசிறந்த வீரர்கள் இருப்பது வழக்கம். அந்தவகையில் இந்த காலகட்டத்தில் இந்திய அணியின் தலைசிறந்த ஜோடியாக விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா இருக்கிறார்கள் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார கூறியுள்ளார்.
>> உலகில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக கோஹ்லி இடம்பெறல்
இந்திய கிரிக்கெட் அணிக்காக 3 வகைப் போட்டிகளிலும் விராட் கோஹ்லி – ரோகித் சர்மா ஜோடி 36,000 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
இதற்கு முன் இந்திய அணிக்காக இருபதாம் நூற்றாண்டில் ராகுல் டிராவிட் – சவுரவ் கங்குலி ஜோடி சிறப்பாக விளையடியதாக சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“விராட் கோஹ்லி – ரோஹித் சர்மா ஜோடி பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட் போட்டியில் விதிகள் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்களைக் குவிப்பது மிகவும் எளிதாக உள்ளது.
இருந்தாலும், இந்திய அணி வீரர்கள் நம்ப முடியாத அளவிற்கு தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா மீது கிரிக்கெட் ரசிகர்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.
அனைவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், கிரிக்கெட் வீரர்கள் கடினமாக உழைத்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே பெயரும் புகழும் சம்பாதிக்க முடியும்.
கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிறந்த ஜோடி உருவாகிக்கொண்டே இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் நிச்சயம் விராட் கோஹ்லி – ரோஹித் சர்மா இணைக்கு வேறு எந்த இணையும் ஈடாக இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
மேலும், ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலியின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்த சங்கக்கார, “துடுப்பாட்ட வீரர்கள் தங்களின் தனித்துவத்தை நிலைநாட்டினால் மட்டுமே சிறந்த வீரர் என்ற பெயரைச் சம்பாதிக்க முடியும். ஆனால், ஒருசிலரால் மட்டுமே இதை சரியாக செய்ய முடியும்” என்று கூறினார்.
“ராகுல் டிராவிட் – குங்குலி ஜோடியின் ஆட்டத்தைப் பார்த்தால் அவர்கள் மரபு வழி துடுப்பாட்ட வீரர்களைப் போல களத்தில் பிரகாசிப்பார்கள். அவர்கள் பந்தை எதிர்கொள்ளும் முறை தனித்துவமானது.
>> உமிழ்நீர் தடைக்கு மாற்றுவழி வேண்டும் என்கிறார் ஜஸ்ப்ரிட் பும்ரா
தொழில்நுட்ப ரீதியாக இருவரும் தேர்ந்தவர்கள். டெஸ்ட் போட்டிகளில் ட்ராவிடின் ஆட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இவரின் ஆட்டம் பலரையும் கவரக்கூடிய வகையில் இருக்கும்.
எனவே, தற்போதைய காலகட்டத்தில் பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியை விராட் கோஹ்லி – ரோஹித் சர்மா ஜோடியின் ஆட்டம் உறுதி செய்கிறது.
இதன் காரணமாகவே இந்திய அணி நவீன கிரிக்கெட் உலகில் மிகவும் தலைசிறந்த அணியாகத் திகழ்கிறது” என்று குமார் சங்கக்கார கூறினார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<