IPL இல் புதிய மைல்கல்லை எட்டிய கோஹ்லி, ஹர்ஷல்

Indian Premier League – 2021

379
IPL

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணித் தலைவர் விராத் கோஹ்லி T20 போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்து சாதனை படைக்க, வேகப் பந்துவீச்சாளரான ஹர்ஷல் பட்டேல் தனது முதலாவது IPL ஹெட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.

IPL தொடரில் இன்று டுபாயில் நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாயண சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை எடுத்துது.

IPL இல் ரோஹித் சர்மா புதிய சாதனை

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி 51 ஓட்டங்கள் எடுத்தார். இதில், ஜஸ்பிரித் பும்ரா வீசிய 4ஆவது ஓவரில் பந்தை சிக்ஸருக்கு அடித்து 13 ஓட்டங்களைக் கடந்தபோது, T20 கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களைக் (சர்வதேச, உள்ளூர், T20 லீக் போட்டிகள்) கடந்து புதிய சாதனை படைத்தார்.

மேலும் , T20 கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இந்தியர் எனும் சாதனையையும் விராட் கோஹ்லி படைத்துள்ளார். அத்துடன், இந்த மைல்கல்லை எட்டிய 5ஆவது சர்வதேச வீரரானார். இதுவரை 314 போட்டியில் 5 சதங்கள், 74 அரைச் சதம் உட்பட 10,038 ஓட்டங்களை கோஹ்லி எடுத்துள்ளார்.

ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் (14,275), கிரென் பொல்லார்ட் (11,195), பாகிஸ்தானின் சொஹைப் மலிக் (10,808), அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் (10,019) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

சஞ்சு சம்சனுக்கு மீண்டும் அபராதம்

பின்னர், குறித்த போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற, பெங்களூர் அணி 54 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

பெங்களூர் அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுக்களையும், யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுக்களையும், கிளென் மெக்ஸ்வெல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அசத்தினர்.

அத்துடன், இதில் 17ஆவது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் மும்பை வீரர்களான ஹர்திக் பாண்டியா, கிரென் பொல்லார்ட் மற்றும் ராகுல் சஹார் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

IPL வரலாற்றில் பெங்களூர் அணிக்காக ஹெட்ரிக் சாதனை படைத்த மூன்றாவது வீரராக இடம்பிடித்த அவர், IPL போட்டிகளில் ஹெட்ரிக் சாதனை படைத்த 20ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

2021 IPL முதல் பாதியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள்

முன்னதாக இந்த ஆண்டு முற்பகுதியில் இந்தியாவில் நடைபெற்ற IPL தொடரின் முதல்பாதி ஆட்டத்தில் இதே மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் ஹர்ஷல் பட்டேல் பதிவுசெய்தார்.

இதனிடையே, இந்தப் போட்டியில் நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதனால் ஹர்ஷல் பட்டேல், இம்முறை IPL தொடரில் 23 விக்கெட்டுக்களுடன் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்களில் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை IPL போட்டியில் மும்பை அணிக்கெதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகளையும் பெங்களூர் அணி வெற்றிகொண்டதுடன், ஒரே பருவத்தில் முதல்தடவையாக மும்பை அணியை இரண்டு தடவைகள் வீழ்த்தி பெங்களூர் அணி புதிய சாதனை படைத்தது.

மறுபுறத்தில், இந்த வெற்றியின்மூலம் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3ஆவது இடத்துக்கு பெங்களூர் அணி முன்னேறியது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<