காரணம் குறிப்பிடாமல் விராட் கோலிக்கு அபராதம்

IPL 2023

310

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் தலைவரும் முன்னணி துடுப்பாட்ட வீரருமான விராட் கோலி மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தெரிவித்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 24ஆவது லீக் ஆட்டம் திங்கட்கிழமை (17) இரவு பெங்களூர் சின்னசுவாமி அரங்கில் இடம்பெற்றது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த விறுவிறுப்பான போட்டியின் முடிவில் முன்னாள் சம்பியன்களான சென்னை சுபர் கிங்ஸ் அணியிடம் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

குறித்த போட்டியின் போது இந்தியன் பிரீமியர் லீக் நடத்தை விதி 2.2 இன் கீழ் முதலாம் தர குற்றத்தை கோலி புரிந்துள்ளதாக BCCI குறிப்பிட்டுள்ளது. மேலும், கோலி இந்த குற்றத்தை ஒப்புக் கொண்டமையினால் அவரது போட்டி சம்பளத்தில் இருந்து அவருக்கு 10 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  எனினும், கோலி புரிந்த குற்றம் என்ன என்பது தொடர்பில் BCCI எந்தவொரு தெளிவான தகவலையும் வெளியிடவில்லை.

போட்டியின் முதலில் துடுப்பாடிய சென்னை அணி டெவொன் கொன்வெ (83) மற்றும் இளம் வீரர் சிவம் டூபே ஆகியோரது அபாரத் துடுப்பாட்டத்தினால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்களைப் பெற்றது. இதன் போது மிக வேகமாக ஆடிய சிவம் டூபே 27 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளுடன் 52 ஓட்டங்களை குவித்தார்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மிகவும் முக்கியமாக இருந்த சிவம் டூபேயின் விக்கெட், சென்னை அணி 178 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் வீழ்த்தப்பட்டது. பார்னெலின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜிடம் பிடி கொடுத்து அவர் ஆட்டமிழந்திருந்தார். குறித்த விக்கெட்டைக் கைப்பற்றிய மகிழ்ச்சியை விராட் கோலி ஆக்ரோசமாக கொண்டாடினார். இதனால்தான் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

பின்னர் 227 என்ற அபார வெற்றியிலக்கை அடைய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்த கோலி 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆகாஷ் சிங்கின் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

போட்டியின் வெற்றிக்காக அணித் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் மற்றும் கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்த போதும் பெங்களூர் அணியினால் வெற்றி பெற முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்றதொரு அபராதம் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹிரிதிக் சொகீன் மீதும் விதிக்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் நிடிஷ் ரானாவின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் அந்த மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக கொண்டாடியமைக்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டமை இங்கு நினைவுகூறத்தக்கது.

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<