இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் மயிரிழையில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி பிளே ஓப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை தவறவிட்டிருந்ததோடு 16ஆவது முறையாகவும் தமது கன்னி IPL கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பினை இழந்திருக்கின்றது.
இந்த நிலையில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சிரேஷ்ட வீரரும், முன்னாள் தலைவருமான விராட் கோலி தனது தரப்பு IPL தொடரின் பிளே ஒப் வாய்ப்பினை தவறவிட்ட விடயம் தொடர்பில் மனம் திறந்திருக்கின்றார்.
சதங்களில் சாதனை படைத்த விராட் கோஹ்லி
பெங்களூர் அணி இந்த ஆண்டுக்கான IPL தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் தொடரின் நடப்புச் சம்பியன்களான குஜராத் டைடன்ஸ் உடன் மோதியிருந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஓப் வாய்ப்பு என்ற நிலைமைகள் காணப்பட்ட போதும் இறுதி ஓவர் வரை போராடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனதுடன், பிளே ஓப் வாய்ப்பினை பறிகொடுக்க வேண்டிய இக்கட்டான நிலையும் ஏற்பட்டது.
எனவே, இந்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் கணக்கு வாயிலாக கருத்து வெளியிட்ட கோலி, தமக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருந்த போதும் சிறிய இடைவெளி ஒன்றினால் இலக்கினை அடைய முடியாமல் போனதாக கூறியுள்ளார்.
இன்னும் இந்த விடயம் தொடர்பில் மேலும் பேசியிருந்த அவர் தம் வீரர்கள் பெருமையுடன் இருக்க வேண்டும் என சுட்டிக் காட்டியதோடு, கடந்த காலங்களில் தமக்கு ஆதரவு வழங்கிய அனைத்து இரசிகர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
விராட் கோலியின் RCB அணி இம்முறை IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லாது போயினும் கோலி இம்முறை பல சாதனைகளை நிலை நாட்டியிருந்தார். இந்த சாதனைகளில் ஒன்றாக கோலி IPL போட்டிகளில் அதிக சதங்களை பெற்ற வீரராக கிறிஸ் கெயிலின் சாதனையினை முறியடித்தமையினை குறிப்பிடலாம். இந்த IPL பருவத்தில் இரண்டு சதங்களை விளாசிய கோலி அதன் மூலம் மொத்தமாக 7 IPL சதங்களை விளாசியே, கெயிலின் சாதனையினை (6 IPL சதங்கள்) முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.
LPL தொடருக்காக நேரடி ஒப்பந்தம் செய்யப்பட்ட 20 வீரர்களின் விபரம் வெளியானது
மறுமுனையில் இந்தப் பருவத்தில் மொத்தமாக 14 IPL போட்டிகளிலும் விளையாடிய விராட் கோலி 53.25 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 639 ஓட்டங்களை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இம்முறை இடம்பெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<