சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை 10,000 ஓட்டங்களை பெற விராட் கோஹ்லிக்கு இன்னும் ஒரே ஒரு ஓட்டம் தேவை. மேற்கிந்திய தீவுகள் அணியின் (2வது ஒருநாள் போட்டி) 36வது ஓவரை அஷ்லி நர்ஷ் வீச, முதலாவது பந்தில் ஒரு ஓட்டத்தைப் பெற்று சிரேஷ்ட வீரர் டோனி, விராட் கோஹ்லிக்கு வாய்ப்பை வழங்கினார். இரண்டாவது பந்தை கோஹ்லி தவறவிட, ரசிகர்கள் மற்றும் வீரர்களின் காத்திருப்பு நீடித்தது. எனினும் மூன்றாவது பந்தில் இலகுவான ஒரு ஓட்டத்தை பெற்ற கோஹ்லி, ஆகாயத்தை பார்த்து, தனது திருமண மோதிரத்துக்கு கொடுத்த ஒரு முத்தத்துடன், வேகமான 10,000 ஓட்டங்கள் என்ற சாதனை மைல்கல்லை கொண்டாடினார்.
விறுவிறுப்பான ஆட்டத்தை பௌண்டரி மூலம் சமப்படுத்திய மேற்கிந்திய தீவுகள்
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு …
சர்வதேச கிரிக்கெட்டின் ஓட்ட இயந்திரம் (ரன்–மெசின்) என வர்ணிக்கப்படும் விராட் கோஹ்லி, பெயருக்கு ஏற்றப்படி யாரும் நினைத்திருக்காத வகையில் வெறும் 205 இன்னிங்ஸ்களில் 10,000 ஓட்டங்களை கடந்தார். சச்சின் டெண்டுல்கரின் வேகமான 10,000 ஓட்டங்களை (259 இன்னிங்ஸ்கள்) விடவும் 54 இன்னிங்ஸ்கள் இடைவெளிக்கு முன் பெறப்பட்ட இந்த ஓட்ட மைல்கல்லானது, தற்போதைய கிரிக்கெட்டின் துடுப்பாட்ட நாயகன் விராட் கோஹ்லிதான் என்பதை பரைசாற்றியது.
ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ஓட்டங்களை கடந்த வீரர்கள்
- விராட் கோஹ்லி – 205 இன்னிங்ஸ்கள் (இந்தியா)
- சச்சின் டெண்டுல்கர் – 259 இன்னிங்ஸ்கள் (இந்தியா)
- சௌரவ் கங்குலி – 263 இன்னிங்ஸ்கள் (இந்தியா)
- ரிக்கி பொண்டிங் – 266 இன்னிங்ஸ்கள் (அவுஸ்திரேலியா)
- ஜெக் கல்லிஸ் – 272 இன்னிங்ஸ்கள் (தென்னாபிரிக்கா)
ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தில் தடுமாறுவது மிகக் குறைவு. 10,000 ஓட்டங்களுக்கு 81 ஓட்டங்கள் என்ற நிலையில், விசாகப்பட்டினம் மைதானத்தில் விராட் கோஹ்லிக்கு இந்த இலக்கு பெரிதாக தெரிந்தி்ருக்கவில்லை. காரணம், இந்த மைதானத்தில் கோஹ்லி பெற்றிருந்த குறைந்த ஓட்ட எண்ணிக்கை 61 என்பது அவருக்கு மேலும் நம்பிக்கையை அளித்திருந்தது.
ஆடாமல் இருந்து அணியின் வெற்றிக்கு பங்களித்த மாலிங்க
இலங்கை கிரிக்கெட் அணியானது தனக்காக …
எத்தனை நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இருந்தாலும், அதிர்ஷடம் என்பது வேண்டும் என்ற கூற்றுக்கு அமைய, கோஹ்லிக்கும் அதிர்ஷடம் கைகொடுத்திருந்தது. கோஹ்லி 44 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மெக்கோய் வீசிய பந்து வீச்சில், பிடிக்க வேண்டிய பிடியெடுப்பை ஜேசன் ஹோல்டர் தவறவிட்டமை கோஹ்லியின் சாதனைக்கு மற்றுமொரு வாய்ப்பை ஏற்படுத்தியது. எனினும், அதன்பின்னர் தனது தனிப்பட்ட துடுப்பாட்ட திறமையுடன் கோஹ்லி இந்த பிரமாண்ட சாதனையை எட்டினார்.
ஒருநாள் போட்டிகளில் இதுவரையில் 13 வீரர்கள் 10,000 ஓட்டங்களை கடந்துள்ளனர். இதில் அதிக இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்ட இலங்கை அணியின் மஹேல ஜயவர்தனவை (333) விட, 128 இன்னிங்ஸ்களுக்கு முன்னர் கோஹ்லி 10,000 ஓட்டங்களை கடந்துள்ளார் எனும் போது, அவரின் துடுப்பாட்டத் திறமையின் பலம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதையும் எம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது.
அத்துடன், வேகமான 10,000 ஓட்டங்கள் என்ற சாதனையை நேற்று முன்தினம் வரை கைவசம் வைத்திருந்த சச்சின் டெண்டுல்கரின் துடுப்பாட்டத்திற்கும், கோஹ்லியின் சாதனை ஓட்டங்களுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளிகள் இருப்பதை புள்ளிவிபரங்கள் மூலம் எம்மால் தெளிவாக கண்டுகொள்ள முடிகிறது.
முதலில், சச்சின் 10,000 ஓட்டங்களை 259 இன்னிங்ஸ்களிலும், கோஹ்லி 205 இன்னிங்ஸ்களிலும் என 54 இன்னிங்ஸ் இடைவெளி என்ற சாதனை நிலைநாட்டப்பட்டது. வருட வித்தியாசத்தை பார்க்கும் போது கோஹ்லி வெறும் 10 வருடங்கள், 67 நாட்களில் பத்தாயிரம் ஓட்ட சாதனையை கடந்துள்ளதுடன், சச்சின் 11 வருடங்கள் 103 நாட்களை எடுத்துக் கொண்டார். கோஹ்லிக்கு அடுத்தப்படியாக ராஹுல் ட்ராவிட் 10 வருடங்கள், 317 நாட்களில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைப் பெற எடுத்துக் கொண்ட வருடங்கள்
- விராட் கோஹ்லி – 10 வருடங்கள் 67 நாட்கள் (இந்தியா)
- ராஹுல் ட்ராவிட் – 10 வருடங்கள் 317 நாட்கள் (இந்தியா)
- சச்சின் டெண்டுல்கர் – 11 வருடங்கள் 103 நாட்கள் (இந்தியா)
சச்சின் டெண்டுல்கர் அவரது 10,000 ஓட்ட சாதனையை நெருங்கிய போது, 28 சதங்கள் மற்றும் 50 அரைச்சதங்கள் என்ற ரீதியில் அவரது ஓட்ட வேகம் 42.63 ஆக காணப்பட்டது. மிகவும் துள்ளியமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோஹ்லி 37 சதங்கள் மற்றும் 48 அரைச்சதங்கள் என 59.62 என்ற ஓட்ட சராசரியுடன், 29 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். எனினும், குறித்த காலப்பகுதியில் சச்சின் டெண்டுல்கர் 38 ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருந்தார்.
விராட் கோஹ்லி 29 வயதில் 10,000 என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் போது அவரின் வயது முப்பத்தொன்பது. கோஹ்லியின் கிரிக்கெட் முடிவுக்கு குறைந்தது இன்னும் 10 வருடங்கள் காத்திருக்கிறது.
இதற்கிடையில் சச்சினின் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை (18426) கோஹ்லியால் முறியடிக்க முடியுமா? என்பதே கேள்வியாக முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போது கோஹ்லியின் ஒருநாள் ஓட்ட சராசரி 59.62 என்பதால், இதே வேகத்தில் சென்றால் சச்சினின் சாதனை கட்டாயமாக முறியடிக்கப்படும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…