ஜகார்த்தா மெய்வல்லுனர் தொடரில் இலங்கைக்கு 3 தங்கப் பதக்கங்கள்

254

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டு மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தோனேஷிய அழைப்பு மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகின. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பங்குபற்றலுடன் இடம்பெறும் இந்தப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையிலிருந்து 24 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில், போட்டிகளின் முதல் நாளில் குறுந்தூர ஓட்ட வீரரான வினோஜ் சுரன்ஞய டி சில்வா, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் குறித்த போட்டியை 10.30 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். இந்தோனேஷிய வீரர் மொஹமட் சொஹ்ரி, 10.32 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் வடிவேலு கண்ணதாசன் 10.38 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

ஆசிய விளையாட்டு விழா முன்னோடிப் போட்டிகளில் 24 இலங்கையர்

இந்தோனேஷிய தலைநகரம் ஜகார்த்தாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள…

எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் கலந்துகொண்ட சுரன்ஞய டி சில்வா, போட்டியை 10.28 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தையும், இந்தோனேஷியாவின் சொஹ்ரி, போட்டியை 10.25 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட 20 வயதான தரூஷ தனஞ்சய, போட்டித் தூரத்தை 46.83 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அவர் தனது தனிப்பட்ட சிறந்த காலத்தையும் பதிவுசெய்தார்.

இதே போட்டியில் கலந்துகொண்ட இலங்கையின் அனுபவமிக்க வீரரும், தேசிய சம்பியனுமான திலிப் ருவன், 46.97 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன், 47.67 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இலங்கையின் மற்றுமொரு வீரரான காலிங்க குமார 5ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இலங்கைக்கான 3ஆவது தங்கப் பதக்கத்தை பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட தில்ஹானி லேகம்கே நேற்று பெற்றுக்கொடுத்தார். குறித்த போட்டியில் தில்ஹானியுடன், சீன தாய்ப்பே வீராங்கனையான லீ ஹுய் ஜுன் மாத்திரம் போட்டியிட்டிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது. இதன்படி, தில்ஹானி 55.13 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்ய லீ ஹுய் ஜுன் 52.79 மீற்றர் தூரத்தை பதிவு செய்தார்.

எனினும், கடந்த மாத இறுதியில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியில் கலந்துகொண்ட நதீஷா, 58.41 மீற்றர் தூரத்தை எறிந்து தனது சிறந்த தூரத்தைப் பதிவுசெய்ததுடன், பொதுநலவாய நாடுகள் போட்டிகளுக்கும் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 81.22 மீற்றர் தூரத்தை எறிந்து தனது சிறந்த தூரத்தைப் பதிவு செய்து தகுதியை பெற்றுக்கொண்ட சம்பத் ரணசிங்க, இப்போட்டித் தொடரில் 75.39 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதில் 75.87 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த இந்திய வீரரான சிங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அத்துடன், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட உபமாலிகா ரத்னகுமாரி, 54.89 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதில் இந்திய வீராங்கனைகளான சோனியா பாசியா(53.53 செக்கன்கள்), ஷாரி ஆனந்தா(54.34 செக்கன்கள்) ஆகியோர் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அதேபோல பெண்களுக்கான முப்பாய்ச்சலில் தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விதூஷா லக்ஷானி வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், ஹசினி பிரபோதா வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். குறித்த வீராங்கனைகள் முறையே 13.28 மீற்றர் மற்றும் 12.98 மீற்றர் தூரங்களை பதிவு செய்திருந்தனர். அத்துடன், 13.33 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த இந்திய வீராங்கனையான ஷினா நெலிக்கால் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியை 14 நிமிடங்களும் 34.86 செக்கன்களில் நிறைவுசெய்ய, இந்திய வீரரான லக்ஷ்மன் கோவிந்தன், 13 நிமிடங்களும் 56.30 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

அத்துடன், பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட நிலானி ரத்னாயக்க, 4 நிமிடங்கள் 19.25 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். இதே போட்டியில் கலந்துகொண்ட சம்பிகா தில்ருக்ஷி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் இன்று கேலாகலமாக ஆரம்பம்

இந்தோனேஷிய தலைநகரம் ஜகார்த்தாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள …

மேலும், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் இலங்கை சார்பாக 3 வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் ஜானக விமலசிறி 7.82 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும், தனுக லியனபத்திரன, 7.62 மீற்றர் தூரம் பாய்ந்து 5ஆவது இடத்தையும், 7.22 மீற்றர் தூரம் பாய்ந்த அமில ஜயசிறி 10ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக பெண்களுக்கான 800 மீறறர் ஓட்டப்போட்டிகளில் ஆசிய மட்டத்தில் பதக்கங்களை வென்று வருகின்ற வீராங்கனைகளாக நிமாலி லியனாரச்சி மற்றும் கயன்திகா அபேரத்ன ஆகியோர் இன்றைய தினம்(14) நடைபெற்ற 800 மீற்றர் போட்டியில் கலந்துகொண்டு 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 2 நிமிடங்கள் 06.37 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த ஜப்பான் வீராங்கனை கிதமுரா யுமி தங்கப் பதக்கத்தையும், 2 நிமிடங்கள் 07.95 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த நிமாலி லியனாரச்சி வெள்ளிப் பதக்கத்தையும், 2 நிமிடங்கள் 08.27 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த கயன்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, மெய்வல்லுனர் போட்டிகளுக்கான பதக்கப்பட்டியலில் 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களுடன் இலங்கை அணி, 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. எனினும், பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் இந்தோனேஷியா(16 தங்கம்), இந்தியா(12 தங்கம்) மற்றும் தாய்லாந்து(05) ஆகிய நாடுகள் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.