பாகிஸ்தான் வீரர்களுக்கு வீடியோ மூலம் உடற்தகுதி பரிசோதனை!

178

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போதும், வீரர்கள் தொடர்ந்தும் தங்களுடைய உடற்தகுதியை தக்கவைத்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தெரிவித்துள்ளது.  

அதன் பொருட்டு பாகிஸ்தான் தேசிய அணியில் ஒப்பந்தம் பெற்றுள்ள வீரர்கள் மற்றும் முதற்தர போட்டிகளில் விளையாடும் வீரர்கள் உட்பட 200 கிரிக்கெட் வீரர்களுக்கு வீடியோ லிங் மூலமாக உடற்தகுதி பரிசோதனை நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த உடற்தகுதி பரிசோதனை எதிர்வரும் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

விஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை …..

கொவிட்-19 தொற்று காரணமாக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கடந்த மாதம் 15ம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டது. அத்துடன், கடந்த மாதம் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவிருந்த உடற்தகுதி பரிசோதனையும் இடைநிறுத்தப்பட்டது.  

எனினும், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் நிறுத்தப்பட்ட இந்தக் காலப்பகுதியில் வீரர்கள், தங்களுடைய உடற்தகுதியை எவ்வாறு பேணுகின்றனர் என்பதை அறிந்துக்கொள்ளும் முகமாக இந்த உடற்தகுதி பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

வீரர்கள் தங்களுடைய உடற்தகுதியை முறையாக பேணுமாறு பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிஷ்பா-உல்-ஹக் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் யசீர் மாலிக் ஆகியோர் வீரர்களுக்கு கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தனர். இந்த தகவலில், “உங்களின் உடற்தகுதியை சரியாக பேணுவதற்கு ஒழுக்கமாக இருப்பதுடன், கடினமாகவும் உழைக்க வேண்டும். 

“எம்மிடம் இப்போது இருக்கும் வசதிகளுடன் அனைத்து வீரர்களுக்கும் புதிய முறைமையிலான உடற்தகுதி பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளோம்.  இதில், அனைவருக்கும் சமமான வாய்ப்பை கொடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அதேநேரம், மனரீதியாக மற்றும் உடல் ரீதியாக தயாராகுவதற்காக வீரர்களுக்கு காலம் வழங்கப்படுகிறது. உங்கள் அணியின் உடற்தகுதி நிபுணர்கள் வீடியோ லிங் மூலமாக பரிசோதனையை மேற்கொள்வர்” என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

“இங்கிலாந்து தொடர் நிறுத்தப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது” – மிக்கி ஆர்தர்

இலங்கை அணிக்கு எதிரான இங்கிலாந்து கிரிக்கெட் ….

பாகிஸ்தானில் உள்ள  6 மாகாண அணிகளில், ஒரு அணியில் தலா 32 வீரர்கள் உள்ளனர். இவர்களுக்கான உடற்தகுதி பரிசோதனை அணியின் உடற்தகுதி நிபுணர்களால் மேற்கொள்ளப்படும். அதேநேரம், தேசிய அணியில் உள்ள 19 வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனை தேசிய அணியின் உடற்தகுதி நிபுணரால் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பரிசோதனையில் பல்வேறு உடற்தகுதிக்கான உடற்பயிற்சிகள் வழங்கப்படும் என்பதுடன், அதன் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த பரிசோதனைகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து அடுத்த சுற்று உடற்தகுதி பரிசோதனை எதிர்வரும் ஜூன் மாத முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் உடற்தகுதி தொடர்பில் அதிகமான கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனால், இப்போது அணி வீரர்களின் உடற்தகுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<