இலங்கை மெய்வல்லுனரின் பிதாமகன் யோகானந்த விஜேசுந்தர காலமானார்

184

இலங்கையின் பிரபல மெய்வல்லுனர் பயிற்சியாளரும், தேசிய விளையாட்டு ஆய்வு நிறுவகத்தின் ஆரம்பப் பணிப்பாளருமான யோகானந்த விஜேசுந்தர நேற்று (14) தனது 75 ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில காலங்களாக சுகவீனமுற்றிருந்த அவர், பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமாகியுள்ளார்.

தேசிய விளையாட்டு வைத்திய நிறுவகத்தின் ஆரம்பப் பணிப்பாளரான யோகானந்த விஜேசுந்தர இலங்கை மெய்வல்லுனரின் பிதாமகன் என அழைக்கப்பட்டார். 

விளையாட்டு நிர்வாகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவங்களைக் கொண்ட இவர், இந்த நாட்டின் விளையாட்டுத்துறைக்காக மிகப் பெரிய சேவையாற்றிய நபர்களில் முக்கியமானவராக கருதப்படுகின்றார்.

ஆரம்பத்தில் ஒரு கரப்பந்தாட்ட வீரராக தனது விளையாட்டுத்துறை வாழ்க்கையை ஆரம்பித்த யோகானந்த விஜேசுந்தர, பிறகு 110 மீற்றர் சட்டவேலி ஓட்டம் மற்றும் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டிகளுக்கு பிரவேசித்து பதக்கங்களை வென்று வந்தார். 

1964 ஆம் ஆண்டில் மெய்வல்லுனர் விளையாட்டுக்கு பிரவேசித்த அவர், அந்த வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனால் 1965 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு விழாவுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்திலும் இடம்பிடித்தார். 

இதனையடுத்து, 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று தேசிய சம்பியனாகவும் தெரிவானார். 

எனினும், அதே வருடம் எவரும் எதிர்பாராத வகையில் யோகானந்த விஜேசுந்தர மெய்வல்லுனர் விளையாட்டுக்கு விடைகொடுத்து பயிற்சியாளராக அவதாரம் எடுத்தார்.

இலங்கையின் முன்னணி பயிற்சியாளராக வலம்வந்த அவர், 40 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகளை தேசிய மட்ட பயிற்சியாளராக உருவாக்கிய பெருமையையும் பெற்றுக் கொண்டார். 

இவரது பயிற்றுப்பின் கீழ் எட்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு இலங்கை சார்பாக வீரர்கள் பங்கேற்றிருந்தனர். அதிலும் குறிப்பாக, இலங்கையில் உருவாகிய முன்னணி 10 மரதன் ஓட்ட வீரர்களில் 6 பேர் இவரது மாணவர்கள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தற்போதைய பயிற்சியாளரான திலகா ஜினதாச, ஜயமினி இலேபெரும, சாந்தனி ஜயவீர, டிலீமா பீட்டர்சன், ஐ.பி சுமித்ரா, தம்மிகா மெனிகே, பெட்ரீஷியா க்ளெமண்ட், பத்மகுமார அமரசேகர, மஞ்சுள ராஜகருணா உள்ளிட்ட வீரர்கள் யோகானந்தா விஜேசுந்தரவின் மாணவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அரங்கில் முரளிதரனுக்கு இணையான சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஷ்வின்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட்….

1962 ஆம் ஆண்டு பண்டாரவளையில் ஒரு விளையாட்டுத்துறை அதிகாரியாக தனது தொழிலை ஆரம்பித்த அவர், சுமார் 40 வருடங்களுக்கு மேலாக விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய விளையாட்டு வைத்திய நிறுவகத்தில் பணியாற்றினார்.

அத்துடன், தேசிய விளையாட்டு வைத்திய நிறுவகத்தின் ஊடாக பல டிப்ளோமா பட்டதாரிகளை உருவாக்கிய அவர், தேசிய விளையாட்டு பாடசாலையை தேசிய விளையாட்டு ஆய்வு நிறுவகமாக தரமுயர்த்துவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார். 

இதனையடுத்து 1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய விளையாட்டு ஆய்வு நிறுவகத்தின் முதலாவது பணிப்பாளராக யோகானந்தா விஜேசுந்தர நியமிக்கப்பட்டார். 

மூன்று பிள்ளைகளின் தந்ததையான யோகானந்தா விஜேசுந்தரவின் இறுதிக் கிரியை எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பிலிமதலாவ, அரபேகம பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<