எமது மோசமான துடுப்பாட்டமே தோல்விக்குக் காரணம்: சந்திமால்

1400

இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததற்கு அணியின் துடுப்பாட்ட வீரர்களே காரணம் என இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

நாக்பூர் டெஸ்ட்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாக இது அமைந்தது. முன்னதாக, 2001ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 229 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி, 1993இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 208 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 201 ஓட்டங்களினாலும் மோசமான தோல்விகளைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக இந்திய அணிக்கு மற்றொரு வரலாற்று வெற்றி

நாக்பூரின் VCA மைதானத்தில் இன்று (27)…

அத்துடன், 1982ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்ற இலங்கை சந்தித்த 100ஆவது டெஸ்ட் தோல்வியாகவும் இது அமைந்ததுடன், வருடமொன்றில் 7 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்த 2ஆவது தடவையாகவும் இது அமைந்தது. முன்னதாக 2005இல் இலங்கை அணி தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் சந்திமால் மாத்திரம் அரச்சதங்களைக் குவித்து அணிக்காக சிறப்பாக விளையாடியிருந்தார். எனினும், அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் இந்திய பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியிருந்தமை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

குறித்த போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

நாணய சுழற்சியில் வெற்றிபெற்றது எமக்கு சாதகத்தைக் கொடுத்தது. ஆனால் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக ஆடுகளத்தில் துரதிஷ்டவசமாக முதல் நாளிலேயே நாங்கள் மோசமாக விளையாடி விட்டோம். எங்களது துடுப்பாட்டம் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பிரபல இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது 350 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க வேண்டும். இந்த தொடருக்கு முன்னதாக நாங்கள் திட்டம் தீட்டியிருந்தோம். ஆட்டத்தை சிறப்பாக தொடங்குபவர்கள் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என கூறியிருந்தோம்.

பெரேராவின் அதிரடியால் இறுதிப் பந்தில் ராங்பூர் அணிக்கு த்ரில் வெற்றி!

ஆனால் 50 முதல் 60 ஓட்டங்களை கடந்ததுமே வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து விடுகின்றனர். இது துரதிஷ்டவசமானது. எனவே எமது அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெற்றுக்கொண்ட இந்த மோசமான தோல்வி குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை வெற்றிகொண்ட பிறகு இத்தொடரிலும் சிறப்பாக விளையாடி வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் நாம் இங்கு வந்தோம். ஆனால் எமது எதிர்பார்ப்பு வீணாகிப் போனது. எனினும் இளம் வீரர்கள் இதில் இருந்து வலுவாக மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

எங்களது துடுப்பாட்ட வரிசையில் சிரேஷ்ட வீரராக அஞ்செலோ மெதிவ்ஸ் உள்ளார். அவர் ஓட்டங்களைக் குவிக்காத சந்தர்ப்பங்களில் அணி சரிவை சந்தித்து வருகின்றது. மூத்த வீரர்கள் முன்னின்று சிறப்பாக செயல்படும்போது இளம் வீரர்கள் நிச்சயம் அதை பின் தொடர்வார்கள். எனவே எதிர்வரும் போட்டிகளில் மெதிவ்ஸ் சிறப்பாக செயல்படுவார் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. இவ்வாறான டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் ஓட்டங்களை குவிப்பது குறித்து 2 தடவைகள் சிந்திக்க வேண்டும். போதியளவு ஓட்டங்களைக் குவிக்காவிட்டால் எஞ்சிய போட்டிகளிலும் வெற்றிபெறுவது கடினம்தான்என அவர் தெரிவித்தார்.

அத்துடன், எமது பந்துவீச்சாளர்கள் தமது பொறுப்பை சிறப்பாக முன்னெடுத்திருந்தனர். முதல் 3 நாட்களிலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தும் எமது பந்துவீச்சாளர்கள் இந்திய அணி வீரர்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்திருந்தனர். ஆனால் துடுப்பாட்ட வரிசையில் நாங்கள் மோசமாக செயற்பட்டதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது எனவும் அணித் தலைவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாக்பூரில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட தோல்வி குறித்து அனைத்து வீரர்களும் வெட்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் நிக் போதாஸ் தெரிவித்துள்ளார்.

இப்போட்டியின் முடிவு எவ்வாறாக இருந்தாலும், 6 மாதங்களுக்குள் தொடர்ச்சியாக 2 தடவைகள் பிரபல இந்திய அணியுடன் விளையாட கிடைத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் இலங்கை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தியிருந்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையுடனான ஒரு நாள் தொடரில் கோஹ்லி இல்லை : அணிக்கு புதிய தலைவர் 

நான் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ஒருபோதும் ஆலோசனை வழங்கவில்லை. இந்தியா போன்ற பிரபல அணிக்கெதிராக அவ்வாறு ஓட்டங்களைக் குவிப்பது இலகுவான காரியமல்ல. அவ்வாறு விளையாடினால் எமக்கு பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

இதில் இந்திய அணி 610 ஓட்டங்களைக் குவித்தது. அவர்கள் அந்த ஓட்ட எண்ணிக்கையை குறைந்தளவு பௌண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடித்துத்தான் பெற்றுக்கொண்டார்கள். எனவே உங்களுக்கு அனைத்து விடயங்களையும் பற்றி குறிப்பிட்டுச் சொல்லமுடியும். பல திட்டங்களுடன் களமிறங்கியிருக்க முடியும். ஆனால் குறித்த தினத்தில் அதை சிறப்பாக முடிவுக்கு கொண்டுவருவதில் தான் முழு அவதானத்துடன் விளையாட வேண்டும். நீங்கள் விரும்பியதை செய்யலாம். ஆனால் நீங்கள் அதை சரியாக உற்பத்தி செய்யாவிட்டால் அதால பதாளத்துக்குச் சென்றுவிடுவீர்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.

உண்மையில் இந்த தோல்வியின் பிறகு நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நாங்கள் 100 சதவீதம் அணியின் வெற்றிக்காக உழைக்கின்றோம். உண்மையில் இந்த தோல்வி வெட்கப்பட வேண்டிய விடயமாகும். வீரர்கள் தமது கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் கவலைப்பட வேண்டும். நீங்கள் வலைப்பயிற்சியில் ஓட்டங்களை குவித்தால் மாத்திரம் போதாது. அதை மைதானத்துக்குச் சென்றும் நிரூபித்துக்காட்ட வேண்டும்.

இந்தியா போன்ற அணியொன்றுடன் கிரிக்கெட் விளையாடுவதென்பது செஸ் விளையாட்டைப் போன்றது. ஒரு அணி ஒரு படி முன்னே சென்றால் அதைவிட முன்னுக்குச் சென்றால்தான் மற்றைய அணிக்கு வெற்றி கிட்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நீங்கள் பஸ்ஸிலிருந்து கீழே தள்ளிவிடப்படுவீர்கள். எனவே அடுத்த போட்டிக்கு முன்னர் அணியில் ஒருசில மாற்றங்களை செய்ய வேண்டும் என நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம். அதை விரைவில் முன்னெடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.