தமிழகத்தைச் சேர்ந்த மாய சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் கட்டாயமாக்கப்பட்டுள்ள உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததன் காரணமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ICC யின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரரானார் அஷ்வின்
வருண் சக்கரவர்த்தி வாய்ப்பை இழக்கும் பட்சத்தில், தற்போது இந்திய அணியின் வலைப் பந்துவீச்சாளராக செயற்பட்டுவரும் சுழல் பந்துவீச்சாளர் ராஹுல் சஹார் அணியில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்திய கிரிக்கெட்டானது வீரர்கள் யோ யோ (yo-yo) பரிசோதனை அல்லது 2 கிலோ மீற்றர் தூரத்தை 8.15 நிமிடங்களில் பந்துவீச்சாளர்களும், 8.30 நிமிடங்களில் ஏனைய வீரர்களும் கடக்க வேண்டும் என்ற விதிமுறையை வழங்கியுள்ளது.
குறித்த இந்த உடற்தகுதி பரிசோதனைகளில் எந்த பரிசோதனையில் வருண் சக்கரவர்த்தி தோல்வியடைந்தார் என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை. வருண் சக்கரவர்த்தி ஏற்கனவே, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I தொடருக்கான குழாத்தில் இடம்பிடித்திருந்தார்.
வருண் சக்கரவர்த்தியின் ஐ.பி.எல். பிரகாசிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. எனினும், அவருக்கு ஏற்பட்ட தோற்பட்டை உபாதை காரணமாக, அவர் அணியுடன் இணையவில்லை. அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் இணைக்கப்பட்டதுடன், அவர் இந்திய அணியின் மூன்றுவகையான போட்டிகளிலும் அறிமுகமாகியிருந்தார். தற்போது, இரண்டாவது தடவையாக தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை வருண் சக்கரவர்த்தி இழக்க நேரிட்டுள்ளது.
வருண் சக்கரவர்த்தி உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியுற்றிருக்கும் அதேவேளை, முதன்முறையாக இந்திய குழாத்துக்கு அழைக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் ராஹுல் தேவாட்டியாவும் உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளார். அதிரடி துடுப்பாட்ட வீரர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் என்ற வகையில், இவருக்கு மீண்டுமொரு உடற்தகுதி பரிசோதனை வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும், இல்லையென்றால் வலைப் பந்துவீச்சாளராக தொடர்ந்தும் செயற்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் நாளை மறுதினம் (12) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க