இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிய FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடர் 2020 இன் ஆரம்பப் போட்டியில் மொரகஸ்முல்ல அணியை 3 – 1 என வெற்றி கொண்ட புளூ ஸ்டார் அணி தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க, அப் கண்ட்ரி லயன்ஸ் மற்றும் ஜாவா லேன் அணிகளுக்கு இடையிலான மோதல் 3 – 3 என சமநிலையடைந்தது.
இந்த இரண்டு ஆட்டங்களும் இந்த தொடரில் குழு B இல் அங்கம் வகிக்கும் அணிகளுக்கான மோதலாக அமைந்தன.
புளூ ஸ்டார் வி.க எதிர் மொரகஸ்முல்ல வி.க
சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த மோதலில் எடிசன் பிகுராடோ, கஜகோபன், இளம் வீரர் செனால் சந்தேஷ் போன்றோர் புளூ ஸ்டார் அணிக்காக தமது கன்னிப் போட்டியில் ஆடினர்.
போட்டி ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் மந்தமான முறையிலேயே விளையாடின. குறிப்பாக, இரு அணியின் முன்கள வீரர்களும் சோர்வான ஆட்டத்தைக் காண்பித்தனர்.
>>கால்பந்தில் நியாயமான வாய்ப்பு கிடைக்கவில்லை – உசைன் போல்ட்<<
போட்டியின் 42ஆவது நிமிடத்தில், புளூ ஸ்டார் அணிக்காக தனது கன்னிப் போட்டியில் ஆடிய இளம் வீரர் செனால் சந்தேஷ் மைதானத்தின் மத்தியில் இருந்து சிறந்த முறையில் வழங்கிய பந்தைப் பெற்ற வெளிநாட்டு வீரர் உவன்கா மத்திய களத்தில் இருந்து தனியே பந்தை எடுத்துச் சென்று, கோல் காப்பாளரையும் தாண்டி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.
முதல் பாதி: புளூ ஸ்டார் வி.க 1 – 0 மொரகஸ்முல்ல வி.க
இரண்டாம் பாதியில், புளூ ஸ்டார் வீரர்கள் முதல் பாதியை விட சற்று வேகமான ஆட்டத்தைக் காண்பித்தனர். அதற்கு பலனாக 56ஆவது நிமிடத்தில் எடிசன் பிகுராடோ மத்திய களத்தில் இருந்து வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்மூலம் உவன்கா தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.
எனினும், அடுத்த 10 நிமிடங்களில் மொரகஸ்முல்ல அணிக்கு முதல் கோல் கிடைத்தது. அவ்வணியின் டிலான் மதுசங்க மத்திய களத்தில் இருந்து வழங்கிய பந்தை எரந்த பிரசாத், புளு ஸ்டார் கோல் காப்பாளர் கவீஷைத் தாண்டி உயர்த்தி உதைந்து கோலாக்கினார்.
முதல் பாதியில் மஞ்சள் அட்டை பெற்றிருந்த புளூ ஸ்டார் வீரர் தரிந்த எரங்க இரண்டாம் பாதியிலும் மற்றொரு மஞ்சள் அட்டை பெற்று, சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
>>Video – இலங்கையில் புதிய தொடர் ; புதிய அனுசரணையாளர் ! | FOOTBALL ULLAGAM<<
ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் வீரர்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை, அவ்வணிக்காக தனது கன்னிப் போட்டியில் ஆடிய தேசிய அணியின் முன்னாள் வீரர் எடிசன் கோலாக்கி அணியின் மூன்றாவது கோலையும் பதிவு செய்தார்.
போட்டி நிறைவில் 3 – 1 என வெற்றி பெற்ற புளூ ஸ்டார் அணி வீரர்கள் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.
முழு நேரம்: புளூ ஸ்டார் வி.க 3 – 1 மொரகஸ்முல்ல வி.க
கோல் பெற்றவர்கள்
புளூ ஸ்டார் வி.க – I.C உவன்கா 42’& 56’, எடிசன் பிகுராடோ (P) 81’
மொரகஸ்முல்ல வி.க – எரந்த பிரசாத் 66’
சிவப்பு அட்டை
புளூ ஸ்டார் வி.க – தரிந்து எரங்க 82’
அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க எதிர் ஜாவா லேன் வி.க
குதிரைப் பந்தயத் திடல் (ரேஸ் கோர்ஸ்) அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் ஜாவா லேன் வீரர்கள் தமது ஆதிக்கத்தை அதிகமாக வைத்திருந்தாலும், கோலுக்கான நிறைவுகளை செய்வதில் பெரிதும் தவறு விட்டனர்.
எனினும், தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய அப் கண்ட்ரி லயன்ஸ் அணி இளம் வீரர்களான மொஹமட் நசார், ஹிரூஷ சம்பத் ஆகியோர் மூலம் அடுத்தடுத்து கோல்களைப் பெற்றது.
எனினும், ஜாவா லேன் அணி பெனால்டி வாய்பின்மூலம் மாலக பெரேரா பெற்றுக் கொடுத்த கோல் மூலம் முதல் பாதியை 1 – 2 என நிறைவு செய்தது.
முதல் பாதி: அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க 2 – 1 ஜாவா லேன் வி.க
இரண்டாம் பாதி ஆரம்பமாகி முதல் 10 நிமிடங்களுக்குள் ஜாவா லேன் வீரர்கள் ஆட்டத்தை சமப்படுத்தினர். மொஹமட் அலீம் மத்திய களத்தில் இருந்து பல வீரர்களைத் தாண்டி பந்தை எடுத்துச் சென்று கோலுக்கு அண்மையில் இருந்து பந்தை கம்பங்களுக்குள் செலுத்தினார்.
>>FFSL தலைவர் கிண்ண மோதல்கள் எவ்வாறு உள்ளன?<<
மேலும் 10 நிமிடங்களுக்குள் மாலக பெரேரா தனது இரண்டாவது கோலையும் பெற ஜாவா லேன் 3 – 2 என முன்னிலை பெற்றது.
எனினும், போட்டியின் 90 நிமிடங்கள் கடந்து உபாதையீடு நேரத்தில் ஜாவா லேன் பின்கள வீரர், தமது பெனால்டி எல்லையில் வைத்து எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் வீழ்த்த, அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்களுக்கு இறுதி நேரத்தில் பெனால்டி கிடைத்தது. அதனை இப்ராஹிம் உலெடிமஜி கோலாக்கி போட்டியை 3 – 3 என சமப்படுத்தினார்.
முழு நேரம்: அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க 3 – 3 ஜாவா லேன் வி.க
கோல் பெற்றவர்கள்
அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க – மொஹமட் நசார், ஹிரூஷ சம்பத், இப்ராஹிம் உலெடிமஜி
ஜாவா லேன் வி.க – மாலக பெரேரா (P),
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<