வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிகளில் வெற்றி பெற்ற புளூ ஈகல்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் கொழும்பு கால்பந்து கழகம் என்பன தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
வியாழக்கிழமை கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்ற இந்த இரண்டு அரையிறுதிகளினதும் விபரம் கீழே….
கொழும்பு கா.க எதிர் ரெட் ஸ்டார் கா.க
இரவு 7.15 இற்கு ஆரம்பமான இந்தப் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் கொழும்பு அணி வீரர்கள் சிறந்த பந்துப் பரிமாற்றங்கள் மூலம் கோலுக்கான முயற்சிகளை எடுத்தனர்.
பலம் கொண்ட மோதலாக அமையவுள்ள FFSL தலைவர் கிண்ண அரையிறுதி
அதன் பயனாக, 13ஆவது நிமிடத்தில் சர்வான் ஜோஹர் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தினை இளம் வீரர் சபீர் கோலாக்கினார். இன்னும் 10 நிமிடங்கள் கடப்பதற்குள் மொஹமட் ஆகிப் மூலம் அடுத்த கோலையும் பெற்ற கொழும்பு கால்பந்து அணி, முதல் பாதியில் இரண்டு கோல்களினால் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதி ஆரம்பித்தது முதல் ரெட் ஸ்டார் அணியின் ஆட்டம் முதல் பாதியை விட மிகவும் வேகமாக இருந்தது. ஓரிரு வாய்ப்புக்களை தவறவிட்ட அவ்வணிக்கு 55ஆவது நிமிடத்தில் ரஹ்மான் முதல் கோலை பெற்றுக்கொடுத்தார்.
அதன் பின்னர் ஆட்டம் மேலும் சூடு பிடிக்க தொடங்கியது.
தொடர்தும் வேகமான ஆட்டத்தை காண்பித்த ரெட் ஸ்டார் அணிக்கு 73 ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக்கின்போது உள்வந்த பந்தை சுபுன் தனன்ஜய ஹெடர் மூலம் கோலாக்கினார்.
போட்டியின் 82 ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் அணியின் தலைவர் ரமீஸ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
எனினும், எஞ்சிய நிமிடங்களை 10 பேருடன் ஆடிய ரெட் ஸ்டார் அணியினர் போட்டியின் இறுதி நிமிடம் வரை கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், யாரும் வெற்றி கோலை பெறாமையினால் தலா இரண்டு கோல்களுடன் சமனிலையாக, ஆட்டம் பெனால்டி சூட் அவுட்டிற்கு சென்றது.
Video – தமது முன்னாள் வீரராலேயே தோற்ற PSG !| FOOTBALL ULLAGAM
அதன் முடிவில் 3 – 2 என வெற்றி பெற்ற கொழும்பு கால்பந்து கழகம் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
முழு நேரம்: கொழும்பு கா.க 2(2) – 2(0) ரெட் ஸ்டார் கா.க
பெனால்டி முடிவு: கொழும்பு கா.க 3 – 2 ரெட் ஸ்டார் கா.க
கோல் பெற்றவர்கள்
கொழும்பு கா.க – சபீர் ரசூனியா 13’, மொஹமட் ஆகிப் 22’
ரெட் ஸ்டார் கா.க – மொஹமட் ரஹ்மான் 55’, சுபுன் தனன்ஜய 73’மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
கொழும்பு கா.க – ஷரித ரத்னாயக்க 7’, சர்வான் ஜோஹர் 67’, அஹமட் சஸ்னி 72’
ரெட் ஸ்டார் கா.க – ஜானக சமிந்த 27’, மொஹமட் ரமீஸ் 48’ & 82’சிவப்பு அட்டை பெற்றவர்கள்
ரெட் ஸ்டார் கா.க – மொஹமட் ரமீஸ் 82’
ஜாவா லேன் வி.க எதிர் புளூ ஈகல்ஸ் வி.க
பலம் மிக்க டிபென்டர்ஸ் அணியை காலிறுதியில் வீழ்த்திய ஜாவா லேன் அணிக்கு அதே சுகததாச அரங்கில் மாலை ஆரம்பமாகிய இந்த போட்டியின் முதல் 15 நிமிடங்களில் புளூ ஈகல்ஸ் வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.
ஐந்தாவது நிமிடத்தில் கவிந்து இஷான் கோல் நோக்கி உதைந்த பந்து மேல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.
ஒன்பதாவது நிமிடத்தில் ஜாவா லேன் பின் கள வீரர் தமது கோல் காப்பாளர் அஷ்பாக் அயூபிற்கு வழங்கிய பந்தை அவர் அங்கிருந்து வெளியேற்றும்போது புளூ ஈகல்ஸ் வீரர் நெத்ம மல்ஷானின் உடம்பில் பட்டு பந்து கோளுக்குள் செல்ல, புளூ ஈகல்ஸ் வீரர்கள் முன்னிலை பெற்றனர்.
நியூ ஸ்டாரின் வெற்றி பறிப்பு: புளூ ஈகல்ஸ் அரையிறுதியில்
அடுத்த 3 நிமிடங்களில் கவிந்து இஷான், நெத்ம மல்ஷான் மற்றும் ஷலன ப்ரமந்த ஆகியோரிடையே இடம்பெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் கவிந்து இஷான் புளூ ஈகல்ஸ் அணிக்கான அடுத்த கோலையும் பெற்றார்.
அதன் பின்னர் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலையும் பெறவில்லை.
இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்களில் புளூ ஈகல்ஸ் கோல் காப்பாளர் ருவன் அருனசிரி, எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் வீழ்த்த ஜவா லேன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை மாலக பெரேர இலகுவாக கோலாக்கினார்.
போட்டியின் 85 நிமிடங்கள் கடந்த நிலையில் நவீன் ஜூட் எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து கோலின் ஒரு திசையினால் பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார்.
எஞ்சிய நிமிடங்களில் கோல்கள் எதுவும் பெறப்படாமையினால் ஆட்டம் சமனிலையாக, வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி வழங்கப்பட்டது.
அதன் முடிவில் ஜாவா லேன் வீரர்கள் 2 உதைகளை வெளியே அடிக்க, புளூ ஈகல்ஸ் அணியின் ஒரு வீரர் வெளியே உதைந்தார். எனவே, 4-3 என பெனால்டியில் வெற்றி பெற்ற புளூ ஈகல்ஸ் அணி வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது
முழு நேரம்: ஜாவா லேன் வி.க 2(0) – 2(2) புளூ ஈகல்ஸ் வி.க
பெனால்டி முடிவு: ஜாவா லேன் வி.க 3 – 4 புளூ ஈகல்ஸ் வி.க
கோல் பெற்றவர்கள்
ஜாவா லேன் வி.க – மாலக பெரேரா 48’, நவீன் ஜூட் 87’
புளூ ஈகல்ஸ் வி.க – நெத்ம மல்ஷான் 9’, கவிந்து இஷான் 12’மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
ஜாவா லேன் வி.க – அலீம் லதீப் 77’ லக்மால் பெரேரா 87’
புளூ ஈகல்ஸ் வி.க – ஷலன ப்ரமந்த 72’
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<