வன்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின், காத்தான்குடி கால்பந்து லீக் சம்பியனாக ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகம் நாமம் சூடியுள்ளது.
காத்தான்குடி விக்டோரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (5) நடைபெற்ற காத்தான்குடி எப்.ஏ. கிண்ண கால்பந்து லீக்கின் இறுதிப் போட்டியில் பாலமுனை நெஷனல் விளையாட்டுக் கழகத்தினை 4-2 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்தே ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகம் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
எப்.ஏ. கிண்ண மட்டக்களப்பு லீக் சம்பியனாக ஏறாவூர் இளந்தாரகை
இந்தப் பருவகாலத்திற்கான (2019) வன்டேஜ்…
இந்த எப்.ஏ. கிண்ண லீக் இறுதிப் போட்டிக்கு அரையிறுதி போட்டிகளில் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம், காத்தான்குடி மொஹிடீன்ஸ் விளையாட்டு கழகத்தினை 3-2 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்தும், நெஷனல் விளையாட்டுக் கழகம் காத்தான்குடி விக்டோரி விளையாட்டு கழகத்தினை 4-2 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்தும் தெரிவாகியிருந்தன.
அதிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பமான இறுதிப் போட்டியில், பதினொராவது நிமிடத்திலேயே மொஹமட் அப்ராஸ் ஏறாவூர் லக்கி ஸ்டார் அணிக்காக முதல் கோலினை பெற்றார். இதனால், லக்கி ஸ்டார் அணி சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொண்டது.
எனினும், முதல் கோல் பெறப்பட்டு சிறிது நேரத்திலேயே ஆஷிக் இலாஹி அடுத்தடுத்து கோல்கள் பெற்று நெஷனல் விளையாட்டுக் கழகத்தினை பலப்படுத்தினார். இதில், ஆஷிக் இலாஹி தனது முதல் கோலை போட்டியின் 21 ஆவது நிமிடத்திலும், அடுத்த கோலை 29 ஆவது நிமிடத்திலும் லக்கி ஸ்டார் அணியின் பின்களத்தினை (Defence) தகர்த்து பெற்றுக் கொண்டார். இதனால், நெஷனல் விளையாட்டுக் கழகம் போட்டியின் ஆதிக்கத்தையும் தம்வசம் எடுத்துக் கொண்டது.
தொடர்ந்து இரு அணிகளும் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இரு அணிகளாலும் போட்டியின் முதல் பாதியில் மேலதிக கோல்கள் எதுவும் பெறப்படவில்லை.
முதல் பாதி: லக்கி ஸ்டார் வி.க. 1 – 2 நெஷனல் வி.க.
போட்டியின் இரண்டாம் பாதி மெதுவாக ஆரம்பித்த போதும் ஏறாவூர் லக்கி ஸ்டார் அணி, வேறு விதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. அதன்படி லக்கி ஸ்டார் அணிக்காக இரண்டாவது கோலை போட்டியின் 68 ஆவது நிமிடத்தில் மொஹமட் முஹர்ரம் பெற்றார்.
இதன் பின்னர் நளீம், மொஹமட் றிபாஸ் ஆகியோரும் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகத்திற்காக கோல்கள் பெற்றுக் கொடுத்தனர். இவர்களில் நளீம் 76 ஆவது நிமிடத்திலும், மொஹமட் றிபாஸ் போட்டியின் மேலதிக நேரத்திலும் (90+2’) தமது கோல்களை பெற்றிருந்தனர்.
ஏறாவூர் நகரசபை அணியை வீழ்த்தி சம்பியனான மண்முனை வடக்கு அணி
மட்டக்களப்பு மாவட்ட பிரதேச…
அத்தோடு இந்த இரண்டு வீரர்களின் கோல்களோடும் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகம் போட்டியில் முன்னிலை பெற்றுக் கொண்டது.
இதேநேரம் போட்டியின் இரண்டாம் பாதியில் நெஷனல் விளையாட்டுக் கழகத்தினால் எந்தவித கோல்களும் பெறப்படவில்லை.
இதனால், லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் 4-2 என்ற கோல்கள் கணக்கில் போட்டியின் வெற்றியாளர்களாக ஆகியதோடு, எப்.ஏ. கிண்ண காத்தான்குடி லீக் சம்பியன்களாகவும் மாறியது.
முழு நேரம்: லக்கி ஸ்டார் வி.க. 4 – 2 நெஷனல் வி.க.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<