மூன்று நிமிடங்களில் ஜாவா லேனின் எதிர்பார்ப்பை உடைத்த கொழும்பு அணி

674

ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட கொழும்பு கால்பந்துக் கழகம் வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்குத் தெரிவாகியது.

இந்த தொடரின் முன்னைய சுற்றில் ஜாவா லேன் அணியினர் கிறேட் ஸ்டார் அணியை 5-1 என்ற கோல்கள் கணக்கிலும், கொழும்பு கால்பந்துக் கழக வீரர்கள் புத்தளம் விம்பில்டன் விளையாட்டுக் கழகத்தினரை 4-0 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றி கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மிகப் பெரிய ரசிகர்களைக் கொண்ட இவ்விரு கழகங்களுக்கும் இடையிலான காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கான இந்த ஆட்டம் கொழும்பு சுகததாஸ அரங்கில் இன்று (04) மாலை இடம்பெற்றது.

ஜாவா லேன் முதல் பதினொருவர்

மொஹமட் ரிஸ்கான் (அணித் தலைவர்), மொஹமட் அலீம், மாலக பெரேரா, மொஹமட் நஜீப்டீன், நவீன் ஜூட், ரெமின் குமார், லக்மால் பெரேரா, மொஹமட் பரூட், மொஹமட் நவ்மான், ராஜவன்ச, தம்மிக்க செனரத் (கோல் காப்பாளர்)

கொழும்பு முதல் பதினொருவர்

ரௌமி மொஹிடீன் (அணித் தலைவர்), கவீஷ் பெர்னாண்டோ (கோல் காப்பாளர்), ஷரித்த ரத்னாயக்க, அபீல் மொஹமட், நிரான் கனிஷ்க, ஷலன சமீர, சஸ்னி அஹமட், மொஹமட் ரிப்னாஸ், பசால் மொஹமட், டிலான் கௌஷல்ய, சர்வான் ஜோஹர்,

போட்டியின் முதல் முயற்சியாக, ஜாவா லேன் அணியின் எல்லையில் இருந்து பந்தைப் பெற்ற சர்வான், அதனை நெஞ்சினால் நிறுத்தி கோலுக்கு செலுத்தியபோது பந்து கம்பங்களை அண்மித்த வகையில் வெளியேறியது.

கசுனின் ஹெட்ரிக் கோலுடன் எவரெடியை இலகுவாக வீழ்த்திய சௌண்டர்ஸ்

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றில் எவரெடி விளையாட்டுக் கழகத்தை 6-2 என்ற கோல்…

அடுத்த நிமிடம் டிலான் கௌஷல்ய கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தை ஜாவா லேன் கோல் காப்பாளர் தம்மிக்க செனரத் பிடித்தார்.

தொடர்ந்தும் சர்வான் ஜோஹர் பெனால்டி எல்லையில் இருந்து பந்தைப் பெற்று, பின்கள வீரரிடமிருந்து தன்னை தனிமைப்படுத்தி கோல் நோக்கி உதைந்த பந்தையும் தம்மிக்க சிறந்த முறையில் பாய்ந்து பிடித்தார்.

20ஆவது நிமிடத்தில் ஜாவா லேனின் பின்கள வீரர் தனது இடத்தில் இருந்து பந்தை எதிரணியின் கோல் திசை வரை எடுத்து வந்து கோல் நோக்கி உதைய, பந்து கம்பங்களை விட உயர்ந்து வெளியேறியது.  

மேலும் 5 நிமிடங்களில் மைதானத்தின் மத்திய பகுதியில் கிடைத்த ப்ரீ கிக்கை பெற்ற அலீம், மிக நீண்ட தூர உதையாக கோல் நோக்கி உதைந்தார். அதனை கோல் காப்பாளர் கவீஷ் தடுக்க முயற்சிக்கையில் அவரது கைகளில் பந்து பட்டு மைதானத்தில் இருந்து வெளியேறியது.

போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்தியில் இருந்து பந்தை எடுத்து வந்த மொஹமட் அப்துல்லா பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் இருந்து வேகமாக கோலுக்குள் உதைந்த பந்தை கோல் காப்பாளர் கவீஷ் பாய்ந்து வெளியே தட்டி விட்டார்.

அடுத்த நிமிடங்களில் மீண்டும் ஜாவா லேன் வீரர்கள் ஹெடர் மூலம் கோலுக்குள் செலுத்திய பந்தையும் கவீஷ் கம்பங்களுக்கு மேலால் தட்டி விட்டார்.

Photos: Police SC vs Negombo Youth | Round of 16 | Vantage FA Cup 2018

ThePapare.com | Viraj Kothalawala | 04/11/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be…

40 நிமிடங்கள் கடந்த நிலையில் நிரான் கனிஷ்க பந்தை ஜாவா லேன் அணியின் கோலுக்கு அருகில் கொண்டு சென்று பரிமாற்றம் செய்தபோது, அங்கே பந்து எந்தவொரு வீரரின் கால்களிலும் படாமல் வெளியே சென்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியினரும் மிகவும் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் ஆட, எந்த கோல்களும் இன்றி குறித்த பாதி நிறைவுக்கு வந்தது.

முதல் பாதி: ஜாவா லேன் வி. 0 – 0 கொழும்பு கா.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 4 நிமிடங்களில் தமது எல்லையில் இருந்து பந்தைப் பெற்ற ஜாவா லேன் அணித் தலைவர் ரிஸ்கான், அதனை எதிரணியின் எல்லைக்குள் எடுத்துச் சென்று பரிமாற்றம் செய்து மீண்டும் பெற்று கோல் நோக்கி செலுத்துகையில் அது வலது பக்க கம்பத்தை அண்மித்த வகையில் சென்றது. மீண்டும் அதனைப் பெற்ற நவீன் ஜூட் கோல் நொக்கி உதைகையில் தடுப்பில் இருந்த வீரரின் உடம்பில் பட்டு வெளியேறியது.

போட்டியின் 60 நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில் கொழும்பு கால்பந்து கழகத்தின் கோல் எல்லையின் இடது புறத்தில் இருந்து அப்துல்லாஹ் உள்ளனுப்பிய பந்தை தடுக்கும்பொழுது ஷலன சமீரவின் கைகளில் பந்து பட, ஜாவா லேன் அணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை மாலக பெரேரா கோலாக்கி அணியை முன்னிலைப்படுத்தினார்.

அடுத்த 15 நிமிடங்களும் இரு அணியினரும் மிகவும் ஆக்ரோசமாக ஆடினர். எனினும், ஜாவா லேன் வீரர்கள் கொழும்பு அணியின் எல்லையில் கோலுக்கான அதிக வாய்ப்புக்களை உருவாக்கினாலும், சிறப்பாக நிறைவுகளை பெறத் தவறினர்.

எனினும், கொழும்பு அணிக்கு மாற்று வீரராக வந்த இளம் வீரர் மொஹமட் ஆகிப் ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில் போட்டியை சமப்படுத்தினார். மத்திய களத்தில் பந்தைப் பெற்ற அவர் ஜாவா லேன் பின்கள வீரரையும் தாண்டி பந்தை எடுத்துச் சென்று பெனால்டி எல்லையில் இருந்து கோல் காப்பாளரின் தடைக்கு மத்தியில் பந்தை கோலுக்குள் புகுத்தினார்.

விமானப்படைக்கு எதிராக வித்தை காண்பித்த இளம் ரினௌன் காலிறுதியில்

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றில் விமானப்படை அணிக்கு எதிரான போட்டியை 4-0 என்ற…

அதன் பின்னர் தமது ஆட்டத்தை மேலும் வேகப்படுத்திய கொழும்பு வீரர்கள் 84 ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லையில் தம்மை ஆக்கிரமித்தனர். தன்னிடம் உயர்ந்து வந்த பந்தை மொஹமட் சஸ்னி நெஞ்சால் நிறுத்தி அதேவேகத்தில் கோலுக்குள் செலுத்துகையில், தம்மிக்க செனரத் கோல் எல்லையில் வைத்து பந்து பாய்ந்து பற்றினார்.

மேலும் 2 நிமிடங்கள் கடந்த நிலையில் ஜாவா லேன் வீரர்களின் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் கிடைத்த ப்ரீ கிக்கை அணித் தலைவர் ரௌமி முஹிடீன் பெற்றார். கோல் நோக்கி உதைந்த பந்தை தம்மிக்க செனரத் தடுக்க, மீண்டும் சஸ்னி ஹெடர் செய்த பந்து கம்பங்களை விட உயர்ந்து சென்றது.

90 நிமிடங்கள் கடந்த நிலையில் ரிப்னாஸ் உதைந்த பந்தை தம்மிக்க செனரத் பாய்ந்து தடுத்தார். எனினும், அவரிடமிருந்து வந்த பந்தை ஜாவா லேன் பின்கள வீரர் தடுப்பதற்குள் அங்கு வந்த கொழும்பு அணியின் மாற்று வீரர் புத்திக பெரேரா அணியை முன்னிலைப் படுத்துவதற்காக பந்தை கம்பங்களுக்குள் புகுத்தினார்.

அடுத்த மூன்று நிமிடங்களுக்குள் ஜாவா லேன் எல்லையின் ஒரு திசையில் இருந்து ஷலன சமீர உள்ளனுப்பிய பந்தை கோலுக்கு அண்மையில் இருந்து பெற்ற பசால், கோல் காப்பாளர் இல்லாத திசையினூடாக வலைக்குள் செலுத்தி மூன்றாவது கோலையும் பதிவு செய்தார்.

இறுதி நிமிடங்களில் மாற்று வீரர்களால் அடுத்தடுத்து பெறப்பட்ட 2 கோல்களினால் போட்டி நிறைவில் கொழும்பு கால்பந்து கழகம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வென்று தொடரின் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது.

முழு நேரம்: ஜாவா லேன் வி. 1 – 3 கொழும்பு கா.

ThePapare.com இன் போட்டியின் ஆட்ட நாயகன்- மொஹமட் ஆகிப் (கொழும்பு கால்பந்துக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

ஜாவா லேன் வி.மாலக பெரேரா 62′   

கொழும்பு கா.மொஹமட் ஆகிப் 77′, புத்திக பெரேரா 90+1′, மொஹமட் பசால் 90+4′

போட்டியை மீண்டும் பார்வையிட