வடக்கின் கில்லாடி யார்? பெனால்டியில் றோயலை வென்ற பாடும்மீன் இறுதிப்போட்டிக்கு

354
Vadakkin killadi Yaar

Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது  அரையிறுதிப்போட்டி இன்றைய தினம் (04) அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றிருந்தது.

குருநகர் பாடும்மீன்  விளையாட்டுக் கழகம் எதிர் ஊரெளு றோயல் விளையாட்டுக் கழகம்

நடப்புச் சம்பியன்கள், யாழின் கில்லாடி பட்டத்தின் உரித்தாளர்கள் குருநகர் பாடும்மீன் அணியினர் இருதயராஜா அணிக்கு எதிரான இலகு வெற்றியுடனும், ஊரெளு றோயல் அணியினர் பெனால்டியில் கலைமதி அணியை வெற்றிகொண்டும் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தனர்.

>> ”வடக்கின் கில்லாடி யார்?” இறுதிப் போட்டியில் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ்

6 ஆவது நிமிடத்தில் விசோத் இலகுவான சந்தர்ப்பத்தினை கோல் காப்பாளரின் கைகளுள் உதைந்தார்.

10 ஆவது நிமிடத்தில் றோயல் அணிக்கு எடிசன் உள்ளனுப்பிய பந்தினை தேனுஜன் நேர்த்தியா ஹெடர் செய்யத் தவறினார்.

14 ஆவது நிமிடத்தில் சாந்தன் மத்திய கோட்டிலிருந்து கோலாக்கும் முயற்சியினை மேற்கொண்ட போதும் கோல்காப்பாளர் அதனை தடுத்தார்.

16 ஆவது நிமிடத்தில், எதிரணி வீரரின் கைகளில் பந்து பட்டமையினால் றோயல் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. எடிசன் உதைந்த பந்து கோல் கம்பத்திற்கு அருகால் வெளியேறியது.

25 ஆவது நிமிடத்தில், முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக றோயல் அணிக்கு மேலும் ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. எடிசன் கோலினை நோக்கி உதைந்த பந்து கம்பத்தின் இடது பக்க விளிம்பில் பட்டு வெளியேறியது.

34 ஆவது நிமிடத்தில் றோயலின் கோல் பரப்பினை நோக்கி அனுப்பப்பட்ட பந்தினை, றோயலின் பின்கள வீரரின் தடுப்பில் பட்டு பந்து முன்னேற விரைந்து செயற்பட்ட விசோத் கோலை நோக்கி உதைந்தார். கோல்காப்பாளர் அதனை லாவகமாக தடுத்தார்.

மேலும் ஒரு ப்ரீ கிக் றோயல் அணிக்கு கிடைக்கப்பெற, பந்தினை கோல் கம்பத்தின் வலது பக்கத்திற்கு உதைந்தார். கோலாக்குவதற்கு ஏனைய முன்கள வீரர்கள் முன்னேறியிருக்காததால் அந்த வாய்ப்பும் நழுவியது.

39 ஆவது நிமிடத்தில் சாந்தன் கோலை நோக்கி உதைந்த பந்தினை கஜந்தன் தடுக்க, வலது பக்கத்தினை நோக்கி வந்த பந்தினை நேர்த்தியாக கோலை நோக்கி விசோத் உதைய, பந்தினை சிறப்பாக சேகரித்தார் றோயல் கோல்காப்பாளர்.

44 ஆவது நிமிடத்தில் பாடும்மீனிற்கு கிடைத்த ப்ரீ கிக்கினை காஸ்ரோன் கோலை நோக்கி உதைந்தார், சாந்தன் ஹெடர் செய்ய கோல்காப்பாளர் அதனை தடுத்தார்.

இரு அணிகளும் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை வீணடிக்க கோல்கள் ஏதுமின்றி முதல் பாதி ஆட்டம் நிறைவிற்கு வந்தது.

முதல் பாதி: பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 0 – 0 றோயல்  விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே ஹெய்ன்ஸ் பரிமாறிய பந்தினை சாந்தன் கோலினை நோக்கி உதைய கோல்காப்பாளர் அதனைப் பற்றிப்பிடித்தார்.

இரண்டாவது பாதியின் 11 ஆது நிமிடத்தில் பாடும்மீனிற்கு கிடைத்த ப்ரீ கிக்கினை சாந்தன் இடது பக்கத்திற்கு உதைய பந்தினை கோல்காப்பாளர் தடுக்க, ஹெய்ன்ஸ் கோல் கம்பத்திற்கு மேலால் உதைந்து வீணடித்தார்.

இரண்டாவது பாதியின் 26 ஆவது நிமிடத்தில் கீதன் உதைந்த பந்து கோல் கம்பத்தின் விளிம்பில் பட்டு வெளியேறியது.

>> இறுதி வரை போராடியும் அரையிறுதி வாய்ப்பை இழந்த யாழ் ஏஞ்சல்

றோயல் அணியின் கபில் அடுத்தடுத்து மேற்கொண்ட இரு முயற்சிகளையும் கோல் காப்பாளர் தடுத்தார்.

ஹெய்ன்ஸ் எடுத்துச் சென்ற பந்தினை சன்சஜன் வெளியேற்றினர்.

41 ஆவது நிமிடத்தில் றோயல் அணிக்கு மத்திய கோட்டிற்கு அருகில்  கிடைத்த ப்ரீ கிக்கினை எடிசன் உதைய கோல்காப்பாளர் பாய்ந்து தடுத்தார்.

42 ஆவது நிமிடத்தில் கமில் மேற்கொண்ட கோல் முயற்சியினை கோல்காப்பாளர் கைகளில் பட்டு நழுவிய போதும் மீண்டும் அதனை சேகரித்தார்.

இரண்டாவது பாதியில் இரு இரு அணியினராலும் கோல் முயற்சிகளை சாதகமாக நிறைவு செய்ய முடியாது போக, போட்டி கோல்கள் ஏதுமின்றி நிறைவிற்கு வந்தது.

முழு நேரம்: பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 0 – 0 றோயல்  விளையாட்டுக் கழகம்

வெற்றியாளரைத் தீர்மானிக்க தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற நடப்புச் சம்பியன் குருநகர் பாடும்மீன் அணியினர் இம்முறை “வடக்கின் கில்லாடி யார்” பட்டத்தினை தமதாக்குவதுடன், அரியாலை சரஸ்வதியின் கிண்ணத்தினை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் அனுபவ வீரர்களைக் கொண்ட இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (7) எதிர்கொள்ளவுள்ளனர்.

சனிக்கிழமை(6) இடம்பெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில், ஊரெளு றோயல்அணியினை எதிர்த்து கிளிநொச்சி உருத்திரபுரம் அணி மோதவுள்ளது.

ஆட்டநாயகன் – பிரதீபன் (பாடும்மீன்  வி.க)

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<