வளர்மதி கழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்த யங் ஹென்றீசியன்ஸ்

863

Thepapare.com ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் காலிறுதிப்போட்டி நேற்றைய (28) தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றிருந்தது.

யாழின் முன்னணி அணிகளுள் ஒன்றான இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் அணியினை எதிர்த்து பலம் வாய்ந்த சென். மேரிஸ் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்திருந்த அச்செழு வளர்மதி அணி மோதியிருந்தது.

“வடக்கின் கில்லாடி யார்?” அரையிறுதிக்கு முன்னேறிய பாடும்மீன்

போட்டியின்  ஆரம்ப நிமிடத்தில் மின்றோன் உதைந்த கோணர் கிக்கினை செந்தூரன் ஹெடர் மூலம் ஞானரூபனிற்கு வழங்க,  ஞானரூபன் அதனை உதைய பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.

6ஆவது நிமிடத்தில் வளர்மதி கழகத்தின் றொபின்சன் உதைந்த கோணர் உதையை முன்கள வீரர்கள் கோலாக்கத் தவறினர்.

16ஆவது நிமிடத்தில் ஞானரூபன் சுமனிற்கு லாவகமாக பந்தை வழங்க வளர்மதியின் பின்கள வீரர்கள் பந்தை தடுத்து வெளியேற்றினர்.

அடுத்த நிமிடத்தில் மரிய நிரோசன் மத்திய களத்திலிருந்து ஞானரூபனிற்கு பந்தை வழங்க, ஞானரூபன் இடது பக்கத்திற்கு உதைந்த பந்தினை கோலாக்குவதற்கு மற்றைய முன்கள வீரர்கள் இருக்கவில்லை.

22ஆவது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து தனேஸ் கோலை நோக்கி உதைந்த பந்து கோல் கம்பத்திற்கு மேலால் சென்றது.

32ஆவது நிமிடத்தில் வளர்மதியின் தேனுஜன் வழங்கிய பந்தினை முன்கள வீரர் வலது பக்கத்திலிருந்து கோலை நோக்கி உதைய பந்து மயிரிழையில் கம்பத்திற்கு மேலால் சென்றது.

அடுத்த நிமிடத்தில் வளர்மதியின் கோல் பரப்பினுள் கிடைத்த ப்ரீ கிக்கினை தனேஷ் கோலை நோக்கி உதைய, கோல் காப்பாளர் தடுத்தார்.

41ஆவது நிமிடத்தில் பந்தை விரைவாக மின்றோன் எடுத்துச் செல்ல வளர்மதியின் பின்கள வீரர் லாவகமாக அதனை வெளியேற்றினார்.

வளர்மதியின் பவிதாஸ்  உதைந்த பந்தும் கம்பத்திற்கு மேலால் செல்ல இரு அணியினரும் தமக்கு கிடைத்த கோல் வாய்ப்புக்களை தவறவிட முதல் பாதி கோலேதுமின்றி நிறைவிற்கு வந்தது.

முதல் பாதி: யங் ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 வளர்மதி விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே பவிதாஸ் பின் களத்திலிருந்து உதைந்த பந்தை றொபின்சன் கோல்காப்பாளரின் கைகளுக்குள் உதைந்தார்.

பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே இருந்து ஹென்றீசின் மதுசன் உதைந்த பந்து மயிரிழையில் கோல்கம்பத்திற்கு மேலால் சென்றது.

இரண்டாவது பாதியின் 5ஆவது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து கிடைத்த பந்தை தனேஸ் சிறந்த முறையில் கோலாக்கினார்.

இரண்டாவது பாதியின் 13ஆவது நிமிடத்தில் பின்களத்திலிருந்து உதையப்பட்ட பந்தினை பவிதாஸ் இடது பக்கத்திலிருந்து கோல் கம்பத்தின் மத்தியிலிருந்த பவிசனிற்கு வழங்க, கோல் காப்பாளரின் கைகளினுள் ஹெடர் செய்து கிடைக்கப்பெற்ற இலகு வாய்ப்பை வளர்மதி அணியினர் நழுவ விட்டனர்.

போட்டியின் 68ஆவது நிமிடத்தில் மத்திய கோட்டிற்கு அருகில் ஹென்றீசியன்ஸ் அணிக்கு கிடைத்த பிரீ கிக்கை ஞானரூபன், தனேஸை நோக்கி பந்தை உதைய, தனேஸ் அதனை  கோலாக்கி வளர்மதி கழகத்தின் கோல் கணக்கை இரட்டிப்பாக்கினார்.

இரண்டு கோல்களின் பின்னர் ஹென்றீசியன்ஸ் வளர்மதியின் கோல் பரப்பினை அடுத்தடுத்து ஆக்கிரமித்தனர்.

மலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி

ஜீட் சுமன், மின்றோனினை நோக்கி நேர்த்தியான பந்து பரிமாற்றத்தை மேற்கொள்ள கம்பத்திற்கு மேலால் மின்றோன் பந்தை உதைந்து ஏமாற்றினார்.

80ஆவது நிமிடத்தில் ஞானரூபன் கோலை நோக்கி பந்தை  வேகமாக எடுத்துச் சென்றவேளை பெனால்டி எல்லையினுள் அவரை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக ஹென்றீசியன்சிற்கு பெனால்டி உதை வழங்கப்பட்டது.

அதனை கோல் கம்பத்திற்கு மேலால் தனேஸ் உதைந்து கிடைத்த வாய்ப்பை வீணடித்தார்.

போட்டியின் 89ஆவது நிமிடத்தில் வளர்மதியின் மத்தியகள வீரர் ஹென்றீசியன்ஸின் கோல் பரப்பினை நோக்கி உதைந்த பந்தினை கோல்காப்பாளர் அமல்ராஜ் பாய்ந்து சேகரிக்க, அவர் மீது முறையற்ற விதத்தில் பாய்ந்தமைக்காக மனோஜன் சிவப்பு அட்டை மூலம் வெளியேற்றப்பட்டார்.

முழு நேரம்: யங் ஹென்றீசியன்ஸ  விளையாட்டுக் கழகம் 2 – 0 வளர்மதி விளையாட்டுக் கழகம்

  • ஆட்டநாயகன் – அல்பிரட் தனேஸ் (யங் ஹென்றீசியன்ஸ் வி.க)

கோல் பெற்றவர்கள்

யங் ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகம் – அல்பிரட் தனேஸ் 50′ & 68′

“வடக்கின் கில்லாடி யார்?” சுற்றுப்போட்டியில் இன்றைய (29) தினம் இடம்பெறவுள்ள மற்றொரு காலிறுதிப்போட்டியில் ஊரெளு றோயல் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து நவிண்டில் கலைமதி  விளையாட்டுக் கழகம் போட்டியிடவுள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<