Thepapare.com ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்?” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் காலிறுதிப்போட்டி இன்றைய (27) தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றிருந்தது.
குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் எதிர் மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக் கழகம்
நடப்பு வருடத்தில் பிரிவு 2 உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள பாடும்மீன் அணியினை எதிர்த்து தீவக உதைப்பந்தாட்ட லீக்கின் முன்னணி அணியான இருதயராஜா அணி மோதியிருந்தது.
“வடக்கின் கில்லாடி யார்” இறுதிச்சுற்று மோதல்கள் வியாழக்கிழமை ஆரம்பம்
இரண்டாவது சுற்று ஆட்டத்தில் நடப்புச் சம்பியன் பாடும்மீன் இரணைமாதா நகர் சென். மேரிஸ் அணியை 4-0 என்ற கோல்கள் கணக்கிலும், இருதயராஜா அணி பலம் வாய்ந்த ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றி பெற்று காலிறுதியில் தடம்பதித்திருந்தன.
போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து சாந்தன் வழங்கிய மிகச் சிறந்த பந்துப் பரிம்மாற்றத்தை, இலகுவாகக் கோலாக்கும் சந்தர்ப்பத்தை பாடும்மீன் அணியின் விசோத் தவறவிட்டார்.
அடுத்த நிமிடத்திலேயே அதே பக்கத்திலிருந்து கீதன் கோலை நோக்கி உதைந்த பந்தை இருதஜராஜா அணியின் கோல் காப்பாளர் பிடித்துக்கொண்டார்.
அதேவேகத்தில் மறுபக்கத்திற்கு அனுப்பப்பட்ட பந்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கோணர் உதையினை இருதயராஜாவின் டெறன்ஸ் கோலை நோக்கி உதைய கோல்காப்பாளர் பிரதீபன் அதனை சிறப்பாகத் தடுத்தார்.
21 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையினுள் பாடும்மீன் வீரர் இருதயராஜா அணியின் பின்கள வீரரினால் வீழ்த்தப்பட பெனால்டி உதை வழங்கப்பட்டது. விசோத் உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.
35 ஆவது நிமிடத்தில் பாடும்மீன் அணியினருக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை கோல் கம்பத்தினை நோக்கி சாந்தன் உதைய ஹெடர் மூலம் கீதன் கோலாக்கினார்.
முதலாவது பாதி ஆட்டத்தின் மேலதிக நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியிலிருந்து ஜெரிங்சன் உதைந்த பந்து நேரடியாக கோலாக மாற போட்டியில் இரண்டாவது கோலை பாடும்மீன் கழகம் பதிவு செய்தது.
முதல் பாதி: பாடும்மீன் வி.க 2 – 0 இருதயராஜா வி.க
இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே விசோத் மேலும் ஒரு கோலைப்போட்டு பாடும்மீன் அணியின் முன்னிலையை மேலும் அதிகரித்தார்.
இம்முறை வர்த்தக நிறுவன எழுவர் கால்பந்து தொடரில் 34 அணிகள் மோதல்
இரண்டாவது பாதியின் 9 ஆவது நிமிடத்தில் லாவகமாக பாடும்மீன் அணியின் பின்கள வீரர்களைத் தாண்டி பந்தை எடுத்துச் சென்ற ஜெமிலியஸ் கோல்காப்பாளர் கைகளுக்கே பந்தை உதைந்தார்.
அடுத்த நிமிடத்திலேயே இருதயராஜா அணி வீரர் உதைந்த பந்தை அமுதன் சிறப்பாக தடுத்தார்.
40 ஆவது நிமிடத்தில் பாடும்மீனின் மயூரன் மேலும் ஒரு கோலைப் போட்டார்.
போட்டியின் இறுதி நிமிடத்தில் சிறந்த பந்துப்பரிமாற்றத்தின் மூலம் கிடைத்த பந்தை ஹெயின்ஸ் வலது பக்கத்திலிருந்து கோலாக்கினார். மற்றொரு இலகு வெற்றியுடன் நடப்பு சம்பியனான பாடும்மீன் விளையாட்டுக் கழகம் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முழு நேரம்: பாடும்மீன் வி.க 5 – 0 இருதயராஜா வி.க
- ஆட்டநாயகன் – ஹெயின்ஸ் (பாடும்மீன் வி.க)
கோல் பெற்றவர்கள்
பாடும்மீன் விளையாட்டுக் கழகம் – கீதன் 35′, ஜெரிங்சன் 45+1, விசோத் 48′, மயூரன் 85′, ஹெயின்ஸ் 90′
“வடக்கின் கில்லாடி யார்?” சுற்றுப் போட்டியில் நாளைய (28) தினம் இடம்பெறவுள்ள மற்றொரு காலிறுதிப் போட்டியில் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து அச்செழு வளர்மதி விளையாட்டுக் கழகம் போட்டியிடவுள்ளது.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க