Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்” உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதலாவது சுற்றின் நான்காவது நாள் ஆட்டங்கள் இன்றைய தினம் (18) அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.
பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்
யாழ் லீக்கினுடைய பலம் வாய்ந்த அணியான பாசையூர் சென். அன்ரனிஸ் அணியை எதிர்த்து தீவக லீக்கின் முன்னணி அணியான வேலணை ஐயனார் கழகம் மோதியது.
“வடக்கின் கில்லாடி யார்?” மூன்றாம் நாள் போட்டிகளின் முடிவுகள்
இரு அணியினரும் கோல் பெறுவதற்கு தொடர் முயற்சியை மேற்கொண்ட போதும், எதுவிதமான முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இறுதியில் கோல்கள் ஏதுமின்றி போட்டி நிறைவிற்கு வந்தது.
முழு நேரம்: பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்
ஆட்டநாயகன் – ஜெயந்தன் (கோல்காப்பாளர் – வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்)
தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் 6 – என்ற கோல்கள் கணக்கில் வேலணை ஐயனார் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த சுற்றில் ஐயனார் அணி நவிண்டில் கலைமதி அணியுடன் மோதவுள்ளது.
குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் எதிர் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழகம்
யாழின் கில்லாடி தொடரில் தொடர்ச்சியாக இரு ஆண்டுகளிலும் கிண்ணத்தை தமதாக்கி தொடரின் நடப்புச் சம்பியன்களாக களங்காணும் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து மற்றொரு யாழ் லீக்கின் பிரதிநிதியான கொட்டடி முத்தமிழ் அணி மோதியது.
போட்டியின் ஆரம்பத்தில் கோல் போடுவதற்கு தடுமாறிய பாடும்மீன் அணி இறுதியாக, 15 ஆவது நிமிடத்தில் சேயன் மூலம் கோல் பெற்றது. முதல் பாதியினுடைய இறுதி நிமிடத்தில் பற்றிக்ஸ் கல்லூரியினுடைய முன்கள வீரர் ரஜிக்குமார் சாந்தன் மேலும் ஒரு கோலைப் பெற்றுக்கொடுக்க முதல் பாதி நிறைவில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் பாடும்மீன் கழகம் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் மயூரன் ஒரு கோலையும், சேயன் போட்டியில் இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுக்க, ஆட்ட நேர நிறைவில் 4 – 0 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றிபெற்ற நடப்புச் சம்பியன்களான பாடும்மீன் அணியினர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
முழு நேரம்: குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 4 – 0 கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழகம்
ஆட்டநாயகன் – டெரின்சன்
கோல் பெற்றவர்கள்
குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் – சேயன் 15′ & 52’, சாந்தன் 28’, மயூரன் 44′
ஜோர்தானிடம் வீழ்ந்த இலங்கைக்கு தொடரில் இரண்டாவது தோல்வி
வடக்கின் கில்லாடி தொடரின் முதலாவது சுற்றின் பதினொராவது மற்றும் பன்னிரண்டாவது போட்டிகள் நாளைய தினம் (19) இடம்பெறவிருந்த இளவாலை யங் ஹென்றீசியன்ஸ், உரும்பிராய் திருக்குமரன் அணிகளுக்கிடையிலான போட்டியில் யங்ஹென்றீசியன்ஸ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஊரெழு றோயல் அணியை எதிர்த்து முல்லைத்தீவு சுப்பர் றாங் அணி மோதவுள்ளது. றோயல், சுப்பர் றாங் அணிகளுக்கு இடையிலான போட்டி இரண்டாவது சுற்றுப்போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4.45 மணியளவில் இடம்பெறவுள்ளள முதல் சுற்றின் 14 ஆவது போட்டியில் மன்னார் கில்லறி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.
”வடக்கின் கில்லாடி யார்” தொடரின் போட்டி முடிவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் புகைப்படங்களுக்கு Thepapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<