ThePapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது சுற்றின் மூன்றாம் நாள் ஆட்டங்கள் இன்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.
மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் எதிர் குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகம்
யாழின் முன்னணி அணிகளுள் ஒன்றான மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து வடமராட்சி லீக்கின் வளர்ந்துவரும் அணியான குஞ்சர்கடை கொலின்ஸ் அணி மோதியது.
போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் பிரதாப் ஒரு கோலைப் போட்டு கொலின்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்தும் ஒரு கோலைப் பெறுவதற்கு இரு அணியினரும் முயற்சி செய்தபோதும், அம்முயற்சிகள் தோல்வியில் நிறைவடைய கொலின்ஸ் அணி முன்னிலையுடன் முதல் பாதி நிறைவிற்கு வந்தது.
>> ‘வடக்கின் கில்லாடி யார்?’ இரண்டாம் நாள் போட்டிகளின் முடிவுகள்
இரண்டாவது பாதியின் 7 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றினைப் பதிவு செய்த வகின்சன் கோல் கணக்கை சமன் செய்தார். இறுதியில் மேலதிக கோலேதுமின்றி போட்டி சமநிலையில் நிறைவிற்கு வந்தது.
முழு நேரம்: மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் 1 – 1 குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகம்
ஆட்டநாயகன் – வனஜன்
கோல் பெற்றவர்கள்
- குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் – பிரதாப் 12′
- மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் – வகின்சன் 37′
தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் 5 – 3 என்ற கோல்கள் கணக்கில் குஞ்சர்கடை கொலின்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற, அதிர்ச்சித் தோல்வியுடன் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து, கடந்த ஆண்டு யாழின் கில்லாடி தொடரின் இறுதிப்போட்டியாளர்களான மயிலங்காடு ஞானமுருகன் அணியினர் தொடரிலிருந்து வெளியேறுகின்றனர்.
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் எதிர் குப்பிளான் ஞானகலா விளையாட்டுக் கழகம்
யாழ்ப்பாணத்தின் பிரபல கழகமான ஊரெழு றோயல் அணியினை எதிர்த்து பல இளைய வீரர்களை உள்ளடக்கிய குப்பிளான் ஞானகலா அணி மோதியது.
போட்டியின் 6 ஆவது நிமிடத்தில் றோயல் அணியின் நிதர்சன் முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்து அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் கோல் பெறப்பட்டு சில நிமிடங்களிலேயே கானுஜன் மேலும் ஒரு கோலினைப் பதிவு செய்து றோயல் அணியின் முன்னிலையை உறுதி செய்தார்.
றோயல் அணியினர் பெற்றுக்கொண்ட இரண்டு கோல்களுடன் முதல் பாதி நிறைவிற்கு வந்தது.
>> ஜோர்தானிடம் வீழ்ந்த இலங்கைக்கு தொடரில் இரண்டாவது தோல்வி
போட்டியின் இரண்டாவது பாதியிலும் நிதர்சன் மேலும் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர நிறைவில் 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழக அணி இலகு வெற்றியைப் பதிவு செய்தது.
முழு நேரம்: ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் 3 – 0 குப்பிளான் ஞானகலா விளையாட்டுக் கழகம்
ஆட்டநாயகன் – எடிசன் பிகுராடோ
கோல் பெற்றவர்கள்
- ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் – நிதர்சன் 6’ & 46’, கானுஜன் 12′
வடக்கின் கில்லாடி தொடரின் முதலாவது சுற்றின் பதினொராவது மற்றும் பன்னிரண்டாவது போட்டிகள் நாளைய (18) தினம் இடம்பெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெவுள்ள முதலாவது போட்டியில் பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழக அணியும், அடுத்து 4.45 மணிக்கு இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழக அணியும் மோதவுள்ளது.
வடக்கின் கில்லாடி தொடரில் போட்டி முடிவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் புகைப்படங்களுக்கு Thepapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<