இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இலங்கை மற்றும் இந்தியாவின் இளம் வீரர்களை பாராட்டிய இலங்கை கிரிக்கெட் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான சமிந்த வாஸ், அவர்களது எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது தொடர்பிலும் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி சிறப்பாகச் செயற்பட்டது. குறித்த தொடரில் சிறப்பாகச் செயற்பட்ட வனிந்து ஹஸரங்க, துஷ்மந்த சமீர, பானுக ராஜபக்ஷ, மஹிஷ் தீக்ஷன ஆகிய வீரர்கள் தற்போது நடைபெற்று வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 15ஆவது அத்தியாயத்தில் தங்கள் அணிகளுக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
அது மாத்திரமின்றி, இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாகச் செயற்பட்ட மதீஷ பத்திரன, சென்னை சுபர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து, தனது அறிமுகப் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.
இந்த நிலையில், இம்முறை IPL தொடரில் இடம்பிடித்து திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இலங்கை வீரர்கள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான சமிந்த வாஸ் மும்பையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,
- குட்டி மாலிங்கவைப் புகழும் MS டோனி
- IPL தொடரிலிருந்து விலகி நாடு திரும்பும் வில்லியம்ஸன்
- IPL தொடரிலிருந்து விலகினார் ரஹானே
இந்த ஆண்டு IPL தொடரில் இலங்கை அணியில் உள்ள சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது மற்றும் IPL தொடரில் அவர்களால் திறமைகளை வெளிப்படுத்த முடிந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது, இதற்கு சிறந்த உதாரணம் வனிந்து ஹஸரங்க. அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற நட்சத்திர வீரர். வனிந்துவைப் போல இம்முறை IPL தொடரில் விளையாடி வருகின்ற ஏனைய வீரர்களும் தங்கள் பொறுப்புகளை சிறந்த முறையில் நிறைவேற்றி வருகிறார்கள். எனவே, இலங்கை அணியின் எதிர்கால நட்சத்திரங்கள் IPL தொடரில் விளையாடுவது மதிப்புக்குரியது என்று அவர் கூறினார்.
இதனிடையே, இம்முறை IPL தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய புதுமுக வீரர்களான திலக் வர்மா, அபிஷேக் சர்மா மற்றும் உம்ரான் மாலிக் தொடர்பிலும் சமிந்த வாஸ் கருத்து வெளியிட்டிருந்தார். இதில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயதான இளம் வேகப் பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக் இம்முறை IPL தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 157 கி.மீ வேகத்தில் பந்துவீசி IPL தொடரின் அதிவேகமான பந்துவீச்சை மேற்கொண்ட வீரராக சாதனை படைத்தார். இதுவரை 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி 2022 IPL இல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் நான்காவது இடத்தில் உள்ளார்.
எனவே, உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு திறமையை வெகுவாகப் பாராட்டிய சமிந்த வாஸ், அவர் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருவதாகவும், அவர் எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளராக இருப்பார் என்றும் சமிந்த வாஸ் கூறினார்.
‘அவர் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறார் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டும் IPL தொடரில் விளையாடியதைப் பார்த்தேன். அவர் தொடர்ந்து அதே இடத்தில் பந்துவீசுகிறார், T20 போட்டிகளில் குறிக்கோளுடன் விளையாடுவது மிகவும் முக்கியமானது. அவர் இந்தியாவுக்கு சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார். அவர் விரைவில் ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை நிரப்புவார். இந்திய தேர்வாளர்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால், நிச்சயம் அவர் நீண்ட தூரம் செல்வார் என்று நான் நினைக்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு IPL தொடரில் இளம் வீரர்களான முகேஷ் சௌத்ரி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், மொஹ்சின் கான் ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். இதுதொடர்பில் பேசிய சமிந்த வாஸ், இந்தியாவின் முதல்தரப் போட்டி மிகவும் சிறந்த நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
‘இந்தியாவில் முதல்தர தொடர்கள் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. பல முதல்தர விளையாட்டுக் கழகங்கள் திறமையான வீரர்களை உருவாக்குகின்றன. அதனால்தான் திறமையான பந்துவீச்சாளர்கள் உருவாகுவதாக’ அவர் மேலும் குறிப்பிட்டார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<