இலங்கையின் உயரம் பாய்தல் தேசிய சம்பியனான உஷான் திவங்க பெரேரா, அமெரிக்காவில் நேற்றுமுன்தினம் (11) நடைபெற்ற Tiger Paw Invitational உள்ளக உயரம் பாய்தல் போட்டியில் சம்பியனாக மகுடம் சூடினார்.
டெக்சாஸில் உள்ள மேற்கு பல்கலைக்கழகத்தை முதல் முறையாக பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த போட்டியில் பங்குகொண்ட அவர், 2.25 மீட்டர் உயரத்தை தாவி முதலிடத்தைப் பிடித்தார். அத்துடன், இந்த ஆண்டில் உஷான் பங்கேற்ற முதலாவது போட்டித் தொடர் இதுவென்பதுடன், இந்த ஆண்டில் அமெரிக்காவின் பல்கலைக்கழக வீரர் ஒருவரினால் தாவிய 2ஆவது உயரமாகவும் இடம்பிடித்தது.
அதுமாத்திரமின்றி, 29 வீரர்கள் பங்குகொண்ட இப்போட்டியில் அமெரிக்காவின் உள்ளக உயரம் பாய்தலில் ட்ரே ஆலனை உஷான் வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
- ஹிமாஷ ஏஷானின் போட்டித் தடை மேலும் நீட்டிப்பு
- டாக்கா சர்வதேச மரதனில் பங்குபற்றும் சண்முகேஸ்வரன்
- டாக்கா மரதனில் இலங்கையின் மதுமாலிக்கு வெள்ளிப் பதக்கம்
ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 2.30 மீட்டர் உயரத்தைத் தாவி தெற்காசிய சாதனைக்கு சொந்தக்காரராக வலம் வருகின்ற உஷான், கடந்த ஆண்டு 2.27 மீட்டர் உயரத்தை தாவி உள்ளக உயரம் பாய்தலில் தேசிய சாதனையையும் முறியடித்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான இலங்கை மெய்வல்லுனர் அணியில் உஷான் திவங்க இடம்பிடித்த போதிலும், தனிப்பட்ட காரணங்களால் அதில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
எவ்வாறாயினும், உஷானின் தற்போதைய அடைவு மட்டத்தை ஒப்பிடும் போது ஆசிய பிராந்தியத்தில் முன்னணி உயரம் பாய்தல் வீரர்களில் ஒருவராக இருப்பதால், இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கமொன்றை வெல்கின்ற அரிய வாய்ப்பு அவருக்கு உள்ளது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<