இலங்கையின் உயரம் பாய்தல் வீரரான உஷான் திவங்க பெரேரா, டெக்சாஸில் நடைபெற்ற ஸ்டார் கன்பிரன்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில் 2.30 மீற்றர் உயரத்தைத் தாவி தெற்காசிய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
டெக்சாஸில் நேற்று நடைபெற்ற ஸ்டார் கன்பிரன்ஸ் சம்பியன்ஷிப் (Lone Star Conference Championship-2021) போட்டியில் பங்குகொண்ட அவர், 2.30 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய இலங்கை சாதனையும் படைத்தார்.
இதன்மூலம், இலங்கையின் உயரம் பாய்தல் சாதனையை இரண்டாவது தடவையாகவும் அவர் முறியடித்துள்ளார்.
உள்ளக உயரம் பாய்தலில் தேசிய சாதனை படைத்த உஷான் பெரேரா
அத்துடன், இந்த வருடத்தில் உயரம் பாய்தல் வீரரொருவரினால் தாவப்பட்ட உலகின் அதிசிறந்த 3ஆவது உயரமாகவும் இது இடம்பிடித்தது.
அதுமாத்திரமின்றி, 2018இல் இந்திய வீரர் தேஜாஸ்வின் சங்கர் 2.29 மீற்றர் உயரம் தாவி நிலைநாட்டிய தெற்காசிய சாதனையையும் உஷான் திவங்க முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவரான 23 வயதுடைய உஷான் திவங்க, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் வழங்கப்பட்ட விசேட புலமைப்பரிசிலின் கீழ் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஏஎண்ட்எம் வணிக பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியுடன், உயரம் பாய்தலுக்கான மேலதிக பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் நடைபெறுகின்ற மெய்வல்லுனர் போட்டிகளில் உஷான் திவங்க பங்கேற்று வருவதுடன், அடுத்தடுத்து சாதனைகளை முறியடித்து வெற்றிகளையும் ஈட்டி வருகின்றார்.
அமெரிக்காவில் சிறந்த வீரருக்கான விருதை வென்ற உஷான்
இறுதியாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டெக்சாஸ் ரிலேஸ் சம்பியன்ஷிப் போட்டிகளில் களமிறங்கிய அவர், A பிரிவு உயரம் பாய்தலில் பங்குகொண்டு 2.28 மீற்றர் உயரதத்தைத் தாவி, இலங்கையின் பதினாறு வருடங்கள் பழமையான உயரம் பாய்தல் சாதனையை முறியடித்தார்.
இலங்கையின் உயரம் பாய்தல் தேசிய சம்பியனான மஞ்சுள குமார, 2004ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் மற்றும் 2005 தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் உள்ளிட்ட இரண்டு போட்டிகளிலும் 2.27 மீற்றர் உயரம் தாவி நிலைநாட்டிய சாதனையை அவர் முறிடியத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வைத்து இலங்கை சாதனை படைத்த உஷான்
இதனிடையே, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் பாய்தல் நிகழ்ச்சிக்கு தகுதிபெறுவதற்கான அடைவுமட்டம் 2.33 மீற்றர் ஆகும். இதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜுன் மாதம் 29ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அடுத்து வரும் மாதங்களில் உஷான் திவங்க, ஒலிம்பிக் அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்து டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க…