உள்ளக உயரம் பாய்தலில் தேசிய சாதனை படைத்த உஷான் பெரேரா

356
Ushan Thiwanka
Photo Courtesy - lionathletics.com - Josh Manck

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலாத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இலங்கையின் இளம் மெய்வல்லுனரான உஷான் திவங்க பெரேரா, உள்ளக உயரம் பாய்தலில் இலங்கை சாதனையை இரண்டாவது தடவையாகவும் முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் கனிஷ் உயரம் பாய்தல் சம்பியனான ஷான் பெரேரா, தற்போது அமெரிக்காவில் உயரம் பாய்தல் பயிற்சிகளுடன் டெக்சாஸில் உள்ள .எண்ட்.எம் வணிக பல்கலைக்கழகத்தில் மேலதிக கல்வியை மேற்கொண்டு வருகின்றார்.

குறித்த பல்கலைக்கழகத்தினால் அண்மையில்  ஒழுங்கு செய்யப்பட்ட Lone Star Conference  உள்ளக மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட அவர், 2.25 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கம் வென்றதுடன், உள்ளக உயரம் பாய்தலில் புதிய இலங்கை சாதனை படைத்தார்.

>> அமெரிக்காவில் வைத்து இலங்கை சாதனை படைத்த உஷான்

இதனிடையே, ஐக்கிய அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான (2ஆவது பிரிவு) உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை பர்மிங்ஹமின் அலபாமாவில் (12) நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட ஷான், 2.26 மீற்றர் உயரத்தைத் தாவி இரண்டாவது தடவையாகவும் இலங்கை சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்

அத்துடன், இலங்கையின் மெய்வல்லுனர் வரலாற்றில் உயரம் பாய்தலில் பதிவாகிய இரண்டாவது அதிசிறந்த உயரமாகவும் இது இடம்பிடித்தது. இதற்குமுன் உயரம் பாய்தலில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான மஞ்சுள குமார, 2005ஆம் ஆண்டு 2.27 மீற்றர் உயரத்தைத் தாவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> கோலூன்றிப் பாய்தலில் ஒலிம்பிக் சம்பியனை வீழ்த்திய இலங்கை வம்சாவளி வீராங்கனை

இதன்படி, இலங்கையின் உயரம் பாய்தல் சம்பியனான மஞ்சுள குமாரவினால் 2016இல் டோஹாவில் நடைபெற்ற ஆசிய உள்ளக மெய்வல்லுனர் தொடரில் நிலைநாட்டப்பட்ட 2.24 மீற்றர் சாதனையை ஐந்து வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது தடவையாகவும் ஷான் திவங்க முறியடித்தார்

நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவரான 23 வயதுடைய ஷான் திவங்க, இறுதியாக 2019இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

>> 60 மீற்றரில் உலகின் 3ஆவது வேகமான வீரரான யுபுன் அபேகோன்

இதனையடுத்து, இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் சம்பியனும், உயரம் பாய்தலில் ஆசிய தங்கப் பதக்கம் வென்றவருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்தின் வழிகாட்டலினால் புலமைப்பரிசில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு கடந்த வருடம் முதல் அமெரிக்காவில் உயர் கல்வியை முன்னெடுத்துக் கொண்டு உயரம் பாய்தலுக்கான மேலதிக பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<