இரண்டாவது முறையாக அமெரிக்காவின் உயரம் பாய்தல் தேசிய சம்பியனானார் உஷான்

308

இலங்கையின் உயரம் பாய்தல் சாதனைக்கு சொந்தக்காரராகத் திகழும் உஷான் திவங்க பெரேரா, அமெரிக்காவின் பல்கலைக்கழக உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டு விழாவின் இரண்டாவது அத்தியாயத்தில் வெற்றியீட்டி உயரம் பாய்தல் சம்பியனாக மகுடம் சூடினார்.

குறித்த போட்டியில் 2.17 மீட்டர் உயரத்தைத் தாவியதன் மூலம் இரண்டாவது பிரிவில் தேசிய சம்பியனாகவும் உஷான் பெரேரா தெரிவானார்.

ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் A&M (Texas A&M University) பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் இவர், இரண்டாவது பிரிவு உயரம் பாய்தலில் சம்பியன் பட்டம் வென்ற 2 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த ஆண்டும் குறித்த பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல வெற்றிகளை ஈட்டிய உஷான் திவங்க, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் 2.25 மீட்டர் உயரத்தைத் தாவியிருந்ததுடன், அதன் பிறகு நடைபெற்ற லோன் ஸ்டார் கொன்பெரன்ஸ் உள்ளக சுவட்டு மற்றும் கள சம்பியன்ஷிப் தொடரில் பங்குகொண்டு 2.27 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கம் வென்றதுடன், உள்ளக உயரம் பாய்தலுக்கான தேசிய சாதனையும் படைத்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் லோன் ஸ்டார் கொன்பெரன்ஸ் (Lone Star Conference) விருது விழாவில் சிறந்த கள மெய்வல்லுனர் வீரருக்குரிய விருதையும் (Outstanding Male Field Athlete) அவர் வென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<