தொடையில் சவ்வு கிழிந்து உபாதைக்குள்ளானார் உசைன் போல்ட்

332
Usain Bolt

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என்று அழைக்கப்படுபவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட். இவர் 2008ஆம் ஆண்டு  பீஜிங் மற்றும் 2012ஆம் ஆண்டு  லண்டன் ஒலிம்பிக்கி்ல் பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அடுத்த மாதம் 5ஆம் திகதி ரியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரிலும் நான்கு போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் நோக்கத்தில் உள்ளார். இதற்கு ஏற்ப தன்னை தயார் செய்து வருகிறார். அவ்வப்போது காயம் அவரைத் தொந்தரவு செய்தாலும் அதை சமாளித்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி மாலை சூடினார்.

நேற்று ஜமைக்காவில் ஒலிம்பிக் போட்டிக்கான பரீட்சாத்த ஓட்டம் நடைபெற்றது. அப்போது அரையிறுதிப் போட்டியுடன் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதில் யோஹன் பிளேக் 9.95 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார்.

அரையிறுதியோடு விலகியதற்கு தொடைப் பகுதியில் சவ்வு கிழிந்ததே காரணம் என்று கூறப்பட்டது. தற்போது இதை உறுதி செய்த போல்ட், இந்த மாத இறுதியில் லண்டனில் நடைபெற இருக்கும் லண்டன் ஆண்டுவிழா போட்டியில் கலந்து கொண்டு எனது உடற்திறனை நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து உசைன் போல்ட் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘வியாழக்கிழமை இரவு நடைபெற்ற முதல் சுற்றிற்குப் பிறகு எனது தொடைப்பகுதி அசௌகரியமாக இருந்ததாக உணர்ந்தேன். நேற்று இரவு அரையிறுதி முடிந்த பின்னரும் இதுபோன்ற உணர்வு இருந்தது. இதனால், டாக்டரிடம் பரிசோதனை செய்தேன். அப்போது தொடைப்பகுதி சவ்வின் கிழிவுத் தன்மை 1ஆம் நிலையில் இருப்பதாகக் கூறினார்கள். இதனால் இறுதிப் போட்டிக்கும், அதன்பின் நடக்கும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது என்று மருத்துவ சான்றிதள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

எனக்கு விரைவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. லண்டனில் ஜூலை 22ஆம் திகதி நடைபெற இருக்கும் லண்டன் ஆண்டுவிழா போட்டியில் கலந்து கொள்வதற்கு வசதியாக உடற்தகுதியை நிரூபிப்பேன்” என்றார்.

அரையிறுதியில் 100 மீட்டர் தூரத்தை 10.04 வினாடிகளில்தான் உசைன் போல்ட் கடந்தார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்