நியூசிலாந்து நட்சத்திரத்துடன் T20 உலகக் கிண்ண குழாத்தை அறிவித்த அமெரிக்கா

187
USA pick Corey Anderson for Men's T20 World Cup 2024

அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கவிருக்ககும் ஐக்கிய அமெரிக்க (USA) அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>T20 உலகக்கிண்ணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு<<

T20 உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது. இந்த உலகக் கிண்ணத் தொடருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் அடங்கிய ஐக்கிய அமெரிக்க குழாத்தில் நியூசிலாந்தின் முன்னாள் அதிரடி சகலதுறைவீரரான கோரி அன்டர்சன் இடம்பெற்றுள்ளார்.

கோரி அன்டர்சன் ஐக்கிய அமெரிக்க அணிக்காக ஆடும் வாய்ப்பினை அண்மையில் பெற்ற நிலையில் அவர் ஐக்கிய அமெரிக்க அணி விளையாடும் முதல் T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.

ஐக்கிய அமெரிக்க அணியின் தலைவராக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான மோனான்க் பட்டேல் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

அதேவேளை பாகிஸ்தான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சயான் ஜஹாங்கிரும் ஐக்கிய அமெரிக்காவின் T20 உலகக் கிண்ண அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். சயான் ஜஹாங்கிர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் அமெரிக்க அணிக்காக கூடுதல் ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான வேகப்பந்துவீச்சாளர் அலி கானுக்கும் அமெரிக்க அணியில் உபாதைக்கு

பின்னர் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அணியின் முன்னணி சுழல்வீரர்களில் ஒருவராக உஸ்மான் ரபீக் செயற்படுவார் என நம்பப்படுகின்றது.

அமெரிக்க அணியானது T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தயராகும் விதத்தில் பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடுவதோடு, குறிப்பிட்ட தொடர் இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க T20 குழாம்

மோனான்க் பட்டேல் (தலைவர்), ஆரோன் ஜோன்ஸ், அன்ட்ரீஸ் கோஸ், ஸ்டீவன் டெய்லர், கோரி அன்டர்சன், நிதிஷ் குமார், சயான் ஜஹாங்கீர், மிலின்த் குமார், அலி கான், சௌராப் நெத்ராவால்கர், ஜெஸ்ஸி சிங், சாட்லே வான் ஸ்சால்விக், ஹார்மீட் சிங், நொஷ்டுஷ் கென்சிக்கே, நிசார்க் பட்டேல்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<