ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் சுற்றில் விளையாடும் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் ஜிம்பாப்வேயில் ஐ.சி.சி. இன் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் சுற்றுத் தொடர் நடைபெறுகின்றது. இலங்கை உட்பட மொத்தம் 10 நாடுகள் பங்கெடுக்கும் இந்த தொடரில் ஐக்கிய அமெரிக்க அணியும் மோதவிருக்கின்றது.
>> உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான நெதர்லாந்து குழாம் அறிவிப்பு
ஐக்கிய அமெரிக்க அணி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் குழு A இல் போட்டியிடவுள்ள நிலையில் அதற்காக தமது பலம் பொருந்திய 14 வீரர்கள் கொண்ட குழாத்தினையும் அறிவித்திருக்கின்றது.
கடந்த மார்ச் மாதம் நமீபியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்க அணியின் வீரர்களே உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காகவும் தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதேவேளை அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதற்கு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தகுதி பெற்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் கோரி அன்டர்சன், அமெரிக்காவின் உலகக் கிண்ண தகுதிகாண் குழாத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருக்க, அமெரிக்க அணிக்காக விளையாடும் வாய்ப்பினைப் பெற்ற முன்னாள் இந்திய A விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் ஸ்மித் பட்டேலுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் ஐக்கிய அமெரிக்க மோனான்க் பட்டேல் மூலம் வழிநடாத்தப்படவுள்ளதோடு, அணியின் பிரதி தலைவராக ஆரோன் ஜோன்ஸ் செயற்படவிருக்கின்றார்.
இதேநேரம் இளம் துடுப்பாட்டவீரரான சாய் தேஜா முக்காமல்லாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவின் உலகக் கிண்ண குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அணியின் வேகப்பந்துவீச்சுத் துறைக்கு சௌராப் நெட்ராவல்க்கர், கைல் பிலிப் மற்றும் ஜஸ்தீப் ஆகியோர் பலமளிக்க, அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளராக உஸ்மான் ரபீக் காணப்படுகின்றார்.
>> உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான அயர்லாந்து குழாம் அறிவிப்பு
ஐக்கிய அமெரிக்க உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்காக ஜூன் மாதம் 03ஆம் ஜிம்பாப்வே செல்லவிருப்பதோடு தமது முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினை ஜூன் மாதம் 18ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அமெரிக்க குழாம்
மோனான்க் பட்டேல் (தலைவர்), ஆரோன் ஜோன்ஸ் (பிரதி தலைவர்), ஸ்டீவன் டெய்லர், கஜநான்த் சிங், சாய் தேஜா முக்கமல்லா, சௌரப் நெத்திரவால்கர், நிசார்க் பட்டேல், கைல் பிலிப், ஜஸ்தீப் சிங், நோஷ்துஷ் கென்ஜிங்கே, உஸ்மான் ரபீக், அபிஷேக் பராத்கர், அலி கான், ஷயான் ஜஹாங்கீர், சுஷாந்த் மோதானி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<