உபுல் தரங்கவுக்கு தடை விதிக்கப்பட்டமையினால் இலங்கை அணிக்கு புதிய தலைவர்

2809
upul tharanga

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், மந்த கதியில் ஓவர்களை வீச அணியினை வழிநடாத்தியிருந்தார் என்னும் குற்றச்சாட்டின் பேரில் இலங்கையின் ஒரு நாள் மற்றும் T-20 அணியின் தலைவர் உபுல் தரங்கவிற்கு ஐ.சி.சி இரண்டு போட்டிகளில் விளையாடத் தடைவிதித்துள்ளது.

இதனால், வரும் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான சாமர கபுகெதர செயற்படவுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அதோடு, இந்திய அணியுடனான எஞ்சியிருக்கும் மூன்றுபோட்டிகளுக்குமான இலங்கை குழாத்திற்கு, இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும்லஹிரு திரிமான்ன ஆகியோரும் உள்வாங்கப்படவுள்ளனர்.

சாதனை இணைப்பாட்டத்துடன் இலங்கையை வீழ்த்திய இந்தியா

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது…

ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரின் பின்னர் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்  அஞ்செலோ மெதிவ்ஸ் பதவி விலகியிருந்ததை அடுத்து, உபுல் தரங்க இலங்கை அணிக்கு 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை ஒரு நாள் மற்றும் T-20 குழாத்தின் தலைவராக செயற்பட நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்திய அணியுடனான போட்டியின் போது, இலங்கை அணியானது அனைத்து ஓவர்களையும் வீசுவதற்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள் மூன்று ஓவர்கள் குறைவாக வீசியிருந்ததாக போட்டி மத்தியஸ்தர் என்டி பைக்ரொப்ட் குற்றம் சாட்டியிருந்தார். இதனாலேயே இலங்கை அணியின் தற்போதைய தலைவர் போட்டித்தடையினைப் பெறுகின்றார்.

உபுல் தரங்க தலைமை தாங்கிய இலங்கை அணி ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இவ்வாறானதொரு தவறினை இழைத்திருந்தது. இதனாலும் தரங்க அப்போது போட்டித் தடையினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, அழைக்கப்பட்டிருக்கும் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் முறையே உபுல் தரங்கவின் இடத்தினையும், உபாதைக்கு உள்ளாகியிருக்கும் தனுஷ்க குணத்திலக்கவின் இடத்தினையும் நிரப்பவுள்ளனர்.  

இந்திய அணியுடனான நேற்றைய போட்டியில் தோற்பட்டை உபாதைக்கு ஆளாகியிருக்கும் தனுஷ்க குணத்திலக்க இந்திய அணியுடன் அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகின்றது. இதனால், அடுத்த போட்டியில் நிரோஷன் திக்வெல்லவுடன் சேர்ந்து லஹிரு திரிமான்ன ஆரம்ப வீரராக துடுப்பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, தரங்கவிற்குப் பதிலாக அணியில் உள்வாங்கப்பட்டுள்ள தினேஷ் சந்திமால் நான்காம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்குப் பின்னராக இலங்கையின் ஒரு நாள் குழாத்தில் இருந்து சந்திமால் நீக்கப்பட்டிருந்ததுடன், லஹிரு திரிமான்ன இறுதியாக 2016ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டியொன்றில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலிங்கவின் ஆட்டம் குறித்து நிக் போத்தாஸ் மற்றும் கோஹ்லி ஆகியோரின் கருத்து

அண்மைய காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருக்கும்…

இதுவரையில் 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 34.48 என்கிற சராசரியோடு 2,586 ஓட்டங்களினை திரிமான்ன குவித்துள்ளார். அதேபோன்று சந்திமால் 128 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 33.44 என்கிற ஒட்ட சராசரியோடு 3,211 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இந்த ஒரு நாள் தொடரினை கைப்பற்ற வரும் மூன்று போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற வேண்டும் என்பதால் அனுபவமிக்க இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்டம்  இலங்கை அணியின் மத்திய வரிசையினை பலப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று, இலங்கை அணிக்கு அடுத்த போட்டியில் தலைவராகும் வாய்ப்பினை பெற்றிருப்பதாக கூறப்படும் கபுகெதர இதுவரையில் 100 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 21.22 என்கிற ஓட்ட சராசரியுடன் 1,592 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருக்கின்றார். இதுவரை ஒரு நாள் போட்டிகளில் சதம் எதனையும் பெறாத கபுகெதர, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக தனது சிறப்பான ஒரு நாள் ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமை (95) குறிப்பிடத்தக்கது.