இலங்கை அணிக்காக தொடர்ந்து விளையாடுவதற்கும், சிறந்த முறையில் பந்துவீசுவதற்கும் சமிந்த வாஸ் முக்கிய காரணமாக இருந்தார் என இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீர தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியில் அண்மைக்காலமாக வேகப்பந்துவீச்சில் பிரகாசித்து வருகின்ற வீரர்களில் ஒருவராக துஷ்மன்த சமீர விளங்குகிறார்.
இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான தொடரிலும், தற்போது நடைபெற்று வருகின்ற இந்தியாவுடனான தொடரிலும் சிறப்பாகப் பந்துவீசி இலங்கை சார்பில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரராக இடம்பிடித்தார்.
அசலன்கவின் போராட்டம் வீண்: முதல் T20i இந்தியா வசம்
இந்த நிலையில், இந்தியாவுடனான முதலாவது டி-20 போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட துஷ்மன்த சமீர, அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்ற தனது திறமை பற்றியும், அதற்கான காரணத்தையும் கூறினார்.
கடந்த காலங்களில் நான் நிறைய உபாதைகளுக்கு முகங்கொடுத்தேன். எனவே உபாதையிலிருந்து மீ;ண்டு வந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களில் விளையாடி வருகிறேன்.
இலங்கை அணியில் இடம்பிடிக்க கடினமாக பயிற்சிகளை எடுத்தேன். குறிப்பாக உடற்குதி தொடர்பில் அதிக கவனம் செலுத்தினேன். இதன்காரணமாகத் தான் என்னால் தொடர்ந்து இலங்கை அணியில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைத்தது.
அதேபோல, எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் மிகச்சிறந்த காலப்பகுதியாக உள்ளது. எனவே அணிக்குத் தேவையான வெற்றியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து விளையாட ஆவலாக உள்ளேன்.
உண்மையில் இவையனைத்துக்கும் எமது வேகப்பபந்துவீச்சாளர் சமிந்த வாஸ் தான் எமக்கு மிகப் பெரிய உந்து சக்தியைக் கொடுத்தார். அவர் இலங்கைக்காக பல போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார்.
நாங்கள் இங்கிலாந்துக்கு முதல்தடவையாக சென்றபோது சமிந்த வாஸ் தான் நிறைய நுணுக்கங்களை எங்களுக்கு சொல்லித் தந்தார். இங்கிலாந்து ஆடுகளங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும் போன்ற பல விடயங்களை நாங்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டோம்.
குறிப்பாக, எவ்வாறு நேர்த்தியாக பந்துவீசுவது, விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவது போன்ற பல நுணுக்கங்களை நான் உள்ளிட்ட ஏனைய வீரர்கள் கற்றுக்கொண்டு வருகிறோம்.
எனவே அவரது பயிற்றுவிப்பு மாத்திரமல்லாது அனுபவங்களும் எதிர்காலத்திரல் என்னைப் போன்ற இலங்கை அணியில் உள்ள ஏனைய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் என அவர் தெரிவித்தார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…