FA கிண்ணத்திற்கான 64 அணிகள் சுற்றில் மொரட்டுவ பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணியை 7-0 என அபாரமாக வென்ற நிவ் யங்ஸ் கால்பந்துக் கழக அணியினர் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
இளம் வீரர்களைக் கொண்ட நிவ் யங்ஸ் அணி, இந்தக் கிண்ணத்திற்கான தொடரில் போட்டியிடும் பலம் மிக்க அணியாகக் கருதப்படுகிறது. மறுபுறம் மொரட்டுவ பல்கலைக்கழக அணி பலம் மிக்க ஒரு அணியாகக் காணப்பட்டாலும் இப்போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது.
2018ஆம் ஆண்டிற்கான 23 வயதிற்கு உட்பட்ட ஆசிய கால்பந்து தகுதிகாண் போட்டித் தொடரிற்கு இலங்கை தகுதி
நிவ் யங்ஸ் அணியின் திறமையான ஆட்டம் முதல் நிமிடத்திலிருந்தே வெளிப்படுத்தப்பட்டது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய அவர்கள், தொடர்ந்து மொரட்டுவ பல்கலைக்கழகம் மீது அழுத்தம் செலுத்தி வந்தது.
எனினும் சில தவறுகளினாலும், மொரட்டுவ பல்கலைக்கழக அணியின் கோல் காப்பாளர் பண்டிதகேவின் சிறப்பான தடுப்புகளினாலும் நிவ் யங்ஸ் அணி கோல் அடிக்கத் தவறியது.
எனினும் நிவ் யங்ஸ் வீரர்கள் தொடர்ந்து தமது முதல் 3 கோல்களையும் சிறிய இடைவேளையில் அடித்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தை அதிர வைத்தது. மொஹமட் மூஷிகான் நியூ யங்ஸ் அணி சார்பாக முதல் கோலை அடித்து கோல் வேட்டையை ஆரம்பித்து வைத்தார்.
அவரை தொடர்ந்து ஹசித பிரியங்கர இரண்டாவது கோலை அடித்தார். மீண்டும் ஒரு முறை தனது திறமையை வெளிக்காட்டிய மொஹமட் முஷிகான் தனது 2ஆவது கோலையும் முதல் பாதியின்போதே பெற்றார்.
முதல் பாதி : நிவ் யங்ஸ் கால்பந்துக் கழம் 3-0 மொரட்டுவ பல்கலைக்கழகம்
இரண்டாவது பாதியிலும் தமது ஆதிக்கத்தை தொடர்ந்த நிவ் யங்ஸ் அணியானது அபாரமாக விளையாடி மேலும் 4 கோல்களை அடித்தது. திறமை மிக்க முஷிகான் தனது 3ஆவது கோலையும் அடித்து ஹட்ரிக் கோலினைப் பதிவு செய்தார். தொடர்ந்து தனது 2ஆவது கோலையும் ஹசித பிரியங்கர அடிக்க, நிவ் யங்ஸ் அணி 5 கோல்களால் முன்னிலை பெற்றது.
அதன் பின்னர் நிதானமான விளையாட்டை வெளிக்காட்டிய நிவ் யங்ஸ் அணி, பந்தை தமக்குள் பரிமாற்றம் செய்து பொறுமையாக விளையாடியது. மொரட்டுவ பல்கலைக்கழக வீரர்கள் சற்று சலிப்புத் தன்மையுடன் விளையாடியமையையும் காணக்கூடியதாக இருந்தது.
ரினௌன், கொழும்பு அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மொறகஸ்முல்ல மற்றும் ஜாவா லேன்
ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்த மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிலையானது, ராசா மொஹமட் சிவப்பு அட்டை பெற்றதன் பின்னர் மேலும் மோசமானது. தவறான மற்றும் அபாயமான முறையில் நிவ் யங்ஸ் வீரரை தடுத்ததற்காக ராசா சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட நிவ் யங்ஸ் அணியானது ஹசித மூலமாக மேலும் ஒரு கோல் அடித்தது.
ஹட்ரிக் கோலினைப் பதிவு செய்த ஹசித பிரியங்கர, மூன்று கோல்களுடன் ஓயாது எஞ்சியிருந்த நேரத்தில் மேலும் ஒரு கோல் அடித்து நிவ் யங்ஸ் அணியை உயரப் பறக்கச் செய்தார். இப்போட்டியில் ஹசித மொத்தமாக 4 கோல்கள் அடித்தமை சிறப்பம்சமாகும். இதனால் 7-0 என வெற்றி பெற்ற நிவ் யங்ஸ் அணி 32 அணிகள் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
முழு நேரம் : நிவ் யங்ஸ் விளையாட்டுக் கழம் 7-0 மொரட்டுவ பல்கலைக்கழகம்
இந்தப் போட்டியின் பின்னர் நிவ் யங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ரோஹித பெர்னாண்டோ thepapare.com இடம் கருத்து தெரிவிக்கும்பொழுது “இப்போட்டியில் எமது அணியின் அனுபவம் மிக்க 6 வீரர்களுக்கு ஓய்வு அளித்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினோம். இளம் வீரர்களின் இந்த முயற்சி மகிழ்ச்சியை தருகிறது. எனினும் இதை விட கடினமான போட்டிகளை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
கோல் பெற்றவர்கள்
நிவ் யங்ஸ் விளையாட்டுக் கழம் – மொஹமட் முஷிகாண் 30′, 42′, 58′ , ஹசித பிரியங்கர 36′, 61′, 81′ , 90′