நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20i போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு இராச்சியம் அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து, 3 போட்டிகள் கொண்ட T20i தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது.
17 வயதான இளம் சுழல் பந்துவீச்சாளர் அயான் அப்சல் கானின் அபார பந்துவீச்சு, அணித்தலைவர் முஹம்மத் வசீம் மற்றும் ஆசிப் கான் ஆகியோரது துடுப்பாட்ட பங்களிப்பு என்பன ஐக்கிய அரபு இராச்சியம் அணியின் வெற்றியின் பிரதான பங்காற்றின.
இந்த வெற்றியானது நியூசிலாந்து அணிக்கெதிராக எந்தவொரு வகை கிரிக்கெட்டிலும் ஐக்கிய அரபு இராச்சியம் அணி ஈட்டிக் கொண்ட முதல் வெற்றியாகும். அதேபோல, ICC இன் டெஸ்ட் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொள்ளாத ஒரு அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி சந்தித்த முதல் தோல்வியும் இதுவாகும்.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது T20i போட்டியில் நியூசிலாந்து அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது T20i போட்டி நேற்று (19) டுபாயில் நடைபெற்றது. இதன் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு இராச்சியம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஒவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைக் குவித்தது.
அந்த அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக மார்க் செப்மன் 63 ஓட்டங்களை எடுக்க, ஐக்கிய அரபு இராச்சியம் அணியின் சார்பில் அதிகபட்சமாக அயான் அப்சல் கான் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், முஹம்மத் ஜவாதுல்லா 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- வனிந்துவின் சகலதுறை ஆட்டத்தோடு பி-லவ் கண்டி இறுதிப் போட்டியில்
- பென் ஸ்டோக்ஸால் வாய்ப்பை இழந்தமை தொடர்பில் கூறும் ஹெரி புரூக்!
- அவுஸ்திரேலிய அணியில் இருந்து வெளியேறும் பிரபல வீரர்கள்
இதனைத்தொடர்ந்து 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு இராச்சியம் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆர்யான்ஸ் சர்மா டக்அவுட் ஆகி வெளியேறினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த முஹம்மத் வசீம் – விருத்தியா அரவிந்த் ஜோடி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர். அரவிந்த் 25 ஓட்டங்களை எடுத்த நிலையில் வெளியேற மறுபக்கம் முஹம்மத் வசீம் அரைச் சதம் கடந்து 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஆசிப் கான் ஒரு சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 48 ஓட்டங்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் அணி வெறும் 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.
இதன்மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் அணி 1-1 என்ற கணக்கில் T20i தொடரை சமன்செய்தது. இரு அணிகளுக்கிடையேயான 3ஆவது மற்றும் கடைசி T20i போட்டி இன்று (20) நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<