இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில் நடைபெற்று வருகின்ற 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாகாண அணிகளுக்கிடையிலான இரண்டு நாட்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில், ஆரம்ப கட்டமாக இன்றைய தினம் நான்கு போட்டிகள் நிறைவுற்றன.
இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அணிகள் எதிரணியின் சிறந்த துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என்பவற்றுக்கு மத்தியில் போராடிய போதும் தோல்வியையே தழுவின.
மேல் மாகாணம் (தெற்கு) எதிர் மேல் மாகாணம் (வடக்கு)
கொழும்பு பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு நாட்களை கொண்ட இவ்விரு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில், சரண நாணயக்கார மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோரின் அபார பந்து வீச்சின் காரணமாக 9 விக்கெட்டுகளால், வெற்றி பெற்ற மேல் மாகாண வடக்கு அணி இத் தொடரின் முதலாவது வெற்றியினை பதிவு செய்தது.
ஏற்கனவே நேற்றைய தினம் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடியிருந்த மேல் மாகாண அணி சரண நாணயக்காரவின் நேர்த்தியான பந்து வீச்சின் காரணமாக வெறும் 39 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. பின்னர் துடுப்பாடிய மேல் மாகாண வடக்கு அணி சஹன் ஆராச்சிகேவின் 41 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை பெற்று, 116 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.
அந்த வகையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துக்கொள்ள 116 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய மேல் மாகாண தெற்கு அணியினர் நேற்றைய நாள் ஆட்ட நிறைவின் போது 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.
தொடர்ந்து, இரண்டாம் நாளாக துடுப்பாடிய அவ்வணி, மாதவ நிமேஷ்சின் அரைச் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களை பெற்று எதிரணிக்கு 72 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதன்போது அதிரடியாக பந்து வீசியிருந்த பினுர பெர்னாண்டோ 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனை தொடர்ந்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய மேல் மாகாணம் வடக்கு அணி, சலிந்த உஷான் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 32 ஓட்டங்கள் உதவியுடன், ஒரு விக்கெட் இழப்பிற்கு குறித்த வெற்றி இலக்கை 19.3 ஓவர்களில் அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
மேல் மாகாணம் தெற்கு (முதல் இன்னிங்ஸ்) – 39/10 (15.2) – சரண நாணயக்கார 7/22, பினுர பெர்னாண்டோ 3/17
மேல் மாகாணம் வடக்கு (முதல் இன்னிங்ஸ்) – 155/10 (53.3) – சஹன் ஆராச்சிகே 41, சலிந்த உஷான் 25, பினுர பெர்னாண்டோ 24, நிஷான் பீரிஸ் 22, மிஷென் சில்வா 4/41, சந்தகன் பத்திரண 3/54, லக்ஷித முனசிங்க 2/12
மேல் மாகாணம் தெற்கு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 188/10 (52.1) மாதவ நிமேஷ் 53, சண்டகன் பத்திரன 36, ரணித்த லியனாராச்சி 35*, ரஷ்மித ஓபாதா 20, பினுர பெர்னாண்டோ 14/3, நுவான் துஷார 31/2, துவிந்து திலக்கரத்ன 61/2
மேல் மாகாணம் வடக்கு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 74/1 (19.3) சலிந்த உஷான் 32*, கவின் பண்டார 27
போட்டியின் முடிவு : மேல் மாகாணம் வடக்கு அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி
வட மாகாணம் எதிர் மேல் மாகாணம் (மத்தி)
கொழும்பு சோனகர் கிரிக்கெட் மைதானத்தில், இரண்டாவது நாளாக நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், இமேஷ லியனகே பெற்ற 177 ஓட்டங்கள் மற்றும் ஜனித் லியனகேவின் அபார பந்து வீச்சு என்பவற்றின் மூலம், மேல் மாகாண மத்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ஓட்டங்களால் பாரிய வெற்றியினை பதிவு செய்தது.
நேற்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த மேல் மாகாண மத்திய அணி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது. அந்த வகையில், முதலில் துடுப்பாடிய வட மாகாண அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களைப் பதிவு செய்தது. அவ்வணி சார்பாக ரெவன் கெல்லி கூடிய ஓட்டங்களாக 39 ஓட்டங்களை பதிவு செய்திருந்தார். மேல் மாகாண மத்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஜனித் லியனகே 38 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிருந்தார்.
அதனையடுத்து, துடுப்பாடக் களமிறங்கிய மேல் மாகாண மத்திய அணி, நேற்றைய நாள் ஆட்ட நிறைவின் போது, இமாஷ லியனகே ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 120 ஓட்டங்களின் உதவியுடன் மூன்று விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று 39 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாளாக துடுப்பாட்டத்தை தொடர்ந்த அவ்வணி, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 400 ஓட்டங்களை பதிவு செய்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை இடை நிறுத்திக்கொண்டது. அந்த வகையில் 234 ஓட்டங்களால் பின்னிலை வகித்த நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த வட மாகாணம் 29.4 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்தது. அவ்வணி சார்பாக கூடிய ஓட்டங்களாக பராக்கிரம தென்னகோன் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
போட்டியின் சுருக்கம்
வட மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 166/10 (49.4) – ரெவன் கெல்லி 39, சலித் பெர்னாண்டோ 30, தருஷ பெர்னாண்டோ 30, ஜனித் லியனகே 3/38, சஹன் நாணயக்கார 2/15, மானெல்கர் டி சில்வா 2/15, லசித் எம்புல்தெனிய 2/38
மேல் மாகாணம் மத்திய (முதல் இன்னிங்ஸ்) – 400/7 (70) இமேஷ லியனகே 177, மானெல்கர் டி சில்வா 63*, விஷாட் ரந்திக்க 58, ஜனித் லியனகே 31, அகில் இனாம் 30, ரிஷித் உபமல் 62/2, சுஜான் மேயஸ் 73/2 சலித்த பெர்னாண்டோ 110/2
வட மாகாணம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 105/10 (29.4) பராக்கிரம தென்னகோன் 28*, ரிஷித் உபமல் 28, சலித்த பெர்னாண்டோ 24, ஜனித் லியனகே 18/4, அனுக் பெர்னாண்டோ 12/3, சஹான் நாணயக்கார 40/2
போட்டியின் முடிவு : இன்னிங்ஸ் மாற்றும் 129 ஓட்டங்களால் மேல் மாகாண மத்திய அணி வெற்றி
தென் மாகாணம் எதிர் கிழக்கு மாகாணம்
இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் மலித் மஹேலவின் அதிரடி பந்து வீச்சின் மூலம் தென் மாகாண அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் பாரியதொரு வெற்றியினை பெற்றுக்கொண்டது.
ஹம்பந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் மாகாண அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் அவ்வணி சார்பாக சரித் அசலங்க பெறுமதிமிக்க சதம் ஒன்றினை பதிவு செய்ய அவ்வணி 89 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ஓட்டங்களை பதிவு செய்திருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
பின்னர், தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய கிழக்கு மாகாண அணி நேற்றைய நாள் நிறைவின் போது ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 19 ஓட்டங்களைப் பதிவு செய்திருந்தது. தொடர்ந்து இரண்டாம் நாளாக கமிறங்கிய அவ்வணி, மலித் மஹேலவின் நேர்த்தியான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 43.5 ஒவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 208 ஓட்டங்களால் பின்னிலையுற்றதால் மீண்டும் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்டது.
இந்த இன்னிங்சில், நேர்த்தியாக பந்து வீசிய மலித் மஹேல 38 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து, இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய அவ்வணி, மலித் மஹேல மற்றும் சரித் அசலங்கவின் அதிரடி பந்து வீச்சில், 29 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 85 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்தது.
சிறப்பாக பந்து வீசிய மலித் மஹேல இரண்டாம் இன்னிங்சுக்காக 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், சரித் அசலங்க 38 ஓட்டங்ளுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
தென் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 350/5d (89) – சரித் அசலங்க 113, பசிந்து இசிர 56, ரமேஷ் மெண்டிஸ் 54, சிதார கிம்ஹான 50, அதீஷ திலஞ்சன 43*
கிழக்கு மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) –142/10 (43.5) வசந்த டி சில்வா 46, நிப்புன் கமகே 20, மலித் மஹேல 38/7
கிழக்கு மாகாணம் (இரண்டாம் இன்னிங்ஸ்) (F/O) – 85/10 நிப்புன் கமகே 22, மலித் மஹேல 25/5, சரித் அசலாங்க 38/3
போட்டியின் முடிவு : தென் மாகாண அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி
மத்திய மாகாணம் எதிர் வடமேல் மாகாணம்
கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டியில், லியோ பிரான்சிக்கோ ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அபார சதத்தின் மூலம் 8 விக்கெட்டுகளால் வடமேல் மாகாணம் வெற்றியீட்டியது.
ந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வடமேல் மாகாண அணி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது. அந்த வகையில், முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மத்திய மாகாண அணி 33.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களைப் பதிவு செய்தது. சிறப்பாக துடுப்பாடிய சனோகித் சண்முகநாதன் ஆகக்கூடிய ஓட்டங்களாக 36 ஓட்டங்களைப் பதிவு செய்தார். அதேநேரம், மத்திய மாகாண அணியின் ஓட்டங்களைக் கட்டுப்படுத்திய தரிந்து ரத்னாயக்க 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய வடமேல் மாகாண அணி 34.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை பதிவு செய்ததுடன் 25 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
வடமேல் மாகாண அணி சார்பாக சிறப்பாகத் துடுப்பாடிய மினோத் பானுக்க 72 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாகப் பதிவு செய்தார். அதேநேரம், மத்திய மாகாண அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய மொஹமட் ஷிராஸ் 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனையடுத்து இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய மத்திய மாகாண அணி நேற்றைய நாள் ஆட்ட நிறைவின் போது, நான்கு விக்கெட் இழப்பிற்கு, 112 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை 97 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து இரண்டாம் நாளாக களமிறங்கிய அவ்வணி மேலும் 101 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, மொத்தமாக 213 ஓட்டங்களை பதிவு செய்தது. சிறப்பாக துடுப்பாடி அரை சதம் கடந்த டிலான் ஜயலத் 63 ஓட்டங்களை பெற்றார். நேர்த்தியாக பந்து வீசிய தரிந்து ரத்னாயக்க 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 188 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய வடமேல் மாகாண அணி 53 ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. நிதானமாக துடுப்பாடிய லியோ பிரான்சிக்கோ ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
போட்டியின் சுருக்கம்
மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 114/10 (33.2) – சனோகித் சண்முகநாதன் 36, ரொன் சந்திரகுப்தா 32, தரிந்து ரத்னாயக்க 4/23, செஹான் மதுஷங்க 3/41, அரவிந்த அக்குருகொட 2/12
வடமேல் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 139/10 (34.5) – மினோத் பானுக்க 72, அரவிந்த அக்குருகொட 23, மொஹமட் ஷிராஸ் 6/45, பிரமோதய அபயகோன் 3/12
மத்திய மாகாணம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 213 (45.4) – டிலான் ஜயலத் 63, ரவீன் செயர் 40, லஹிரு சமரகோன் 23, தரிந்து ரத்னாயக்க 64/3, செஹான் மதுஷங்க 2/44
வடமேல் மாகாணம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 189/2 (52.3) லியோ பிரான்சிக்கோ 104*, தமித் பெரேரா 40, சாஷின் தில்ராங்க 37*
போட்டியின் முடிவு : வடமேல் மாகாணம் 8 விக்கெட்டுகளால் வெற்றி