இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரில் மத்திய மாகாணத்திற்கு எதிரான போட்டியில் வட மாகாணம் இன்னிங்ஸ் மற்றும் 167 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.
அதே போன்று, வியாழக்கிழமை முடிவடைந்த மேல் மாகாண தெற்கு அணியுடனான ஆட்டத்தில் தென் மாகாண அணி 7 விக்கெட்டுகளால் வென்றது. கிழக்கு மாகாண மற்றும் ஊவா மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டியின் முதல் நாள் ஆட்டம் வியாழக்கிழமை (20) முடிவடைந்ததோடு அதில் கிழக்கு மாகாண அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது.
வட மாகாணம் எதிர் மத்திய மாகாணம்
கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மத்திய மாகாணம் 7 விக்கெட்டுகளை இழந்து 367 ஓட்டங்களை பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியதுடன், வட மாகாணத்திற்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது.
வட மாகாணத்திற்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய மாகாண அணி
வட மாகாண அணி முதல் இன்னிங்ஸில் 93 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 274 ஓட்டங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த வட மாகாண அணி அந்த இன்னிங்ஸிலும் சோபிக்கத் தவறியது. அந்த அணி 30.2 ஓவர்களில் 108 ஓட்டங்களுக்கே சுருண்டது. அணிக்காக யாழ் சென் ஜோன்ஸ் கல்லுரியின் சகலதுறை வீரர் வி. ஜதூசன் ஆட்டமிழக்காது பெற்ற 23 ஓட்டங்களுமே அதிகபட்சமாகும். லஹிரு சமரகோன் 22 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மத்திய மாகாண அணிக்காக ரொன் சந்திரகுப்தா முதல் இன்னிங்ஸில் 137 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண அணி முன்னதாக மேல் மாகாண மத்திய அணியுடனான போட்டியிலும் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
வட மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) 93 (25.4) – வை. கஜனாத் 28*, ரசித் உபமல் 22, முஹமட் ஷிராஸ் 6/40, லஹிரு சமரகோன் 6/22
மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) 368/7 d (49) – ரொன் சந்திரகுப்தா 137, வினிந்து ஹசரங்க 67, நுவன் பெர்னாண்டோ 53*, திலான் நிமேஷ் 2/75
வட மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 108 (30.2) – வி ஜதூசன் 23*, லஹிரு சமரகோன் 5/22, லக்ஷான் பெர்னாண்டோ 2/13
போட்டி முடிவு – மத்திய மாகாண அணி இன்னிங்ஸ் மற்றும் 167 ஓட்டங்களால் வெற்றி
கிழக்கு மாகாணம் எதிர் ஊவா மாகாணம்
மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் ஊவா மாகாணத்திற்கு எதிராக நாணய சுழற்சியில் வென்ற கிழக்கு மாகாணம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய கிழக்கு மாகாண அணி, சஞ்சிக்க ரித்ம சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வலுவான ஓட்டங்களை குவித்தது. கடைசிவரை களத்தில் இருந்த ரித்ம ஆட்டமிழக்காது 152 ஓட்டங்களை பெற்றார். அதேபோன்று, ரமின்து நிகேஷல 90 ஓட்டங்களைப் பெற்று சதத்தை எட்டும் வாய்ப்பை தவறவிட்டார். ஊவா மாகாண அணிக்காக ஹஷான் விமர்ஷன 61 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி, கிழக்கு மாகாண அணி 73 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 384 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஊவா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 25 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 105 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
கிழக்கு மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) 384/9 d (73) – சன்ஜிக ரித்ம 152*, ரமின்து நிகேஷல 90, ஹஷான் விமர்ஷன 5/61, ஹர்ஷ ராஜபக்ஷ 2/76
ஊவா மாகாணம் (முதல் இன்னிங்ஸ்)105/2 (25) – ஹர்ஷ ராஜபக்ஷ 43*, லிசுல லக்ஷான் 30, சமாஹி சல்ப்தீன் 29
நாளை போட்டியின் இரண்டாவது நாள்
இலங்கையுடன் போராடுவது சவாலானது என்கிறார் விராத் கோலி
மேல் மாகாணம் தெற்கு எதிர் தென் மாகாணம்
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் மேல் மாகாண தெற்கு அணி தென் மாகாணத்திற்கு 103 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆட்டத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை தென் மாகாணம் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அந்த வெற்றி இலக்கை எட்டியது. இதன்போது சரித் அசலங்க 55 ஓட்டங்களை பெற்றார்.
மேல் மாகாண தெற்கு அணி தனது முதல் இன்னிங்ஸில் 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதோடு சிதாரா கிம்ஹான மற்றும் சரித் அசலங்கவின் சதத்துடன் தென் மாகாண அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழபந்து 248 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
மேல் மாகாண தெற்கு அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 228 ஓட்டங்களை பெற்றபோதும் அது தோல்வியை தவிர்க்க போதுமாக இருக்கவில்லை.
போட்டியின் சுருக்கம்
மேல் மாகாணம் தெற்கு (முதல் இன்னிங்ஸ்) 117 (41.1) – மின்ஹாஜ் ஜலீல் 36, மாதவ நிமேஷ் 27*, அதீஷ தின்சன 5/23, சரித் அசலன்க 5/29
தென் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 243/2d (45) – சிதார கிம்ஹான 101*, சரித் அசலங்க 100, மிஷேன் சில்வா 2/39
மேல் மாகாணம் தெற்கு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 228 (66.2) – மலின்து மதுரங்க 87, சன்தகன் பதிரன 43, மலித் மஹேல 4/61, பானுக மதுப்ரிய 2/44
தென் மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 103/3 (17.5) – சரித் அசலங்க 55, லசித் லக்ஷான் 21, மிஷேன் சில்வா 2/16
போட்டி முடிவு – தென் மாகாண அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி
மேல் மாகாண மத்திய எதிர் வட மத்திய மாகாணம்
கொழும்பு, புளும்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற மேல் மாகாண – வட மத்திய மாகாணங்களுக்கு இடையிலான ஆட்டம், இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் நிதானமாக ஆடிய காரணத்தினால் சமநிலையில் முடிந்தது. குறிப்பாக முதல் நாளில் பெய்த மழை ஆட்டத்தின் குறிப்பிடத்தக்க நேரத்தை தாமதிக்கத் செய்தது.
போட்டியில் மேல் மாகாண மத்திய அணி முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்று இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வட மத்திய மாகாணம் பெரும்பாலான நேரம் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று அதற்கான புள்ளிகளை அபகரித்துக் கொண்டது.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் வட மத்திய மாகாண அணி 98.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 339 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சிறப்பாக ஆடிய தினத் ஹேவாதன்திரி 136 ஓட்டங்களை பெற்றது.
ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேல் மாகாண மத்திய அணி 21.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்ட நேரம் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் பெற்ற அகீல் இன்ஹாம் இரண்டாவது இன்னிங்ஸில் 46 ஓட்டங்களை குவித்தார்.
போட்டியின் சுருக்கம்
மேல் மாகாண மத்திய (முதல் இன்னிங்ஸ்) – 204 (55.3) – அகீல் இன்ஹாம் 73, அனுக் பெர்னாண்டோ 37, சன்தீப நிசன்சல 3/09, சன்துல வீரரத்ன 2/21, சதுரங்க அபேசிங்க 2/32
வட மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 339 (98.4) – தெனெத் ஹேவாதன்திரி 136, கவின்து மதரசிங்க 51, ஜனித் லியனகே 3/44, சஹான் நாணயக்கார 3/50
மேல் மாகாண மத்திய (இரண்டாவது இன்னிங்ஸ்) – 102/5 (23.1) அகீல் இன்ஹாம் 46, ஹஷான் துமின்து 27
போட்டி முடிவு – சமநிலையில் முடிவு