இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாகாணங்களுக்கு இடையிலான இரண்டு நாள் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரின் மேலும் மூன்று போட்டிகள் புதன்கிழமை (19) ஆரம்பமாகின.

மத்திய மாகாண அணியுடனான போட்டியில் களமிறங்கிய வட மாகாண அணி முதல் இன்னிங்ஸில் மூன்று இலக்க ஓட்டங்களை பெறாமலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தடுமாறியது. மேல் மாகாண தெற்கு அணியுடனான ஆட்டத்தில் தென் மாகாண அணி ஆதிக்கம் செலுத்துவதோடு, வட மத்திய மாகாணத்துடனான போட்டியில் மேல் மாகாண மத்திய அணி முதல் இன்னிங்ஸில் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றது.

இதில் தென் மாகாணத்தின் இரு வீரர்கள் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணம் எதிர் மத்திய மாகாணம்

கொழும்பு BRC மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மத்திய மாகாணம், எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி களமிறங்கிய வட மாகாண துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டம் பெற தடுமாறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் அந்த அணி 25.4 ஓவர்களில் வெறும் 93 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகோடுத்தது.

முதல் போட்டியில் வட மாகாண, கிழக்கு மாகாண அணிகள் தோல்வி

தனித்துப் போராடிய ராஜு கஜனாத் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். ரிசித் உபமால் 22 ஓட்டங்களை பெற்று ஓரளவு பங்களிப்புச் செய்தார்.

இதன்போது மத்திய மாகாண அணிக்காக முஹமது ஷிராஸ் சிறப்பாகப் பந்துவீசி 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர்கள் வரிசையில் டிலன்க சதகன்னை பின்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் நாளின் பகல்போசன இடைவேளைக்கு முன்னரே தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மத்திய மாகாண அணி நிதானம் கலந்த அதிரடியுடன் துடுப்பாடி ஓட்டங்களை குவித்தது. அந்த அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 282 ஓட்டங்களை பெற்றது. ரொன் சந்திரகுப்தா 137 ஓட்டங்களை பெற்றார்.

இதனால் வட மாகாண அணி இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 189 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

வட மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 93 (25.4) – வை. கஜனாத் 28*, ரசித் உபமல் 22, முஹமட் ஷிராஸ் 6/40, லஹிரு சமரகோன் 3/22

மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 282/4 (49) – ரொன் சந்திரகுப்தா 137, டிலான் ஜயலத் 40, வனின்து ஹசரங்க 34*

நாளை போட்டியின் இரண்டாவது நாள்

ஷமிந்த எரங்க மீதான பந்துவீச்சுத் தடை நீக்கம்


மேல் மாகாண மத்திய எதிர் வட மத்திய மாகாணம்

கொழும்பு, புளும்பீல்ட் மைதானத்தில் மழை காரணமாக தாமதித்து ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற வட மத்திய மாகாண அணி மேல் மாகாண மத்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு அகீல் இன்ஹாம் கைகொடுத்தார். நிதானமாக ஓட்டங்களை பெற்ற அவர் அரைச் சதம் (73) கடந்தார். இதன்மூலம் மேல் மாகாண மத்திய அணி 55.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது.

கடைசி நேரத்தில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வட மத்திய மாகாண அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாண மத்திய (முதல் இன்னிங்ஸ்) – 204 (55.3) – அகீல் இன்ஹாம் 73, அனுக் பெர்னாண்டோ 37, சன்தீப நிசன்சல 3/09, சன்துல வீரரத்ன 2/21, சதுரங்க அபேசிங்க 2/32

வட மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 49/0 (10) – தெனெத் ஹேவாதன்திர 35*   

நாளை போட்டியின் இரண்டாவது நாள்


மேல் மாகாணம் தெற்கு எதிர் தென் மாகாணம்

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் மாகாண 23 வயதுக்கு உட்பட்ட அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இதன்படி களமிறங்கிய மேல் மாகாண தெற்கு அணி 41.4 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணிக்காக மின்ஹாஜ் ஜலீல் அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றதோடு மாதவ நிமேஷ் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களை குவித்தார். சிறப்பாக பந்துவீசிய அதீச திலன்சன 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென் மாகாண அணி விக்கெட்டுகளை காத்துக்கொண்டு வலுவான ஓட்டங்களை சேர்த்துள்ளது. முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது அந்த அணி 45 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 243 ஓட்டங்களை பெற்றுள்ளது. சிதார கிம்ஹான (101) மற்றும் சரித் அசலங்க (100) இருவரும் சதம் பெற்றனர். கிம்ஹான ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாண தெற்கு (முதல் இன்னிங்ஸ்) – 117 (41.1) – மின்ஹாஜ் ஜலீல் 36, மாதவ நிமேஷ் 27*, அதீஷ தின்சன 5/23, சரித் அசலன்க 5/29

தென் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 243/2 (45) – சிதார கிம்ஹான 101*, சரித் அசலங்க 100, மிஷேன் சில்வா 2/39

நாளை போட்டியின் இரண்டாவது நாள்