இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்பட்ட 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் மத்திய மாகாண அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
கொழும்பு CCC மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) முடிவடைந்த இறுதிப் போட்டியில் மேற்கு மாகாண வடக்கு அணியை எதிர்கொண்ட மத்திய மாகாண அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று அதற்கான புள்ளியை வென்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. இறுதிப் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்கள் கொண்ட போட்டியின் முதல் நாளான திங்கட்கிழமை மத்திய மாகாண அணி சிறப்பாக ஆடியதே அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மத்திய மாகாண அணி தனது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 293 ஓட்டங்களை பெற்றது.
குறிப்பாக மத்தியவரிசையில் ஆடிய நிமேஷ குணசிங்க (80), நுவனிது பெர்னாண்டோ (76) பெற்ற அரைச்சதங்கள் மத்திய மாகாண அணி வலுவான ஓட்டங்களை பெற காரணமாக இருந்தது.
இந்நிலையில் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையிலேயே மேல் மாகாண வடக்கு அணி தனது முதல் இன்னிங்ஸை இரண்டாவது நாளான இன்றைய தினத்தில் ஆரம்பித்தது. எனினும் அந்த அணி தனது விக்கெட்டுகளை காத்துக்கொள்ள தவறியது. அணி சார்பில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடாத நிலையில் மேல் மாகாண வடக்கு அணி 45.2 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் இணைக்கப்பட்ட திரிமான்ன, சந்தகன்
சம்மு அஷான் பெற்ற 33 ஓட்டங்களே மேல் மாகாண வடக்கு அணியின் அதிகூடிய ஓட்டங்களாகும். சஹான் ஆரச்சிகே மற்றும் சரன நாணயக்கார ஆகியோர் தலா 32 ஓட்டங்களைப் பெற்றனர்.
மத்திய மாகாண அணிக்காக அபாரமாக பந்துவீசிய முஹமது ஷிராஸ் 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சரித் சுதாரக 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். ஷிராஸ் மாகாண மட்ட தொடரில் மொத்தம் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் வட மாகாண வீரர் தரிந்து ரத்னாயக்கவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.
இதன்படி மேல் மாகாண வடக்கு அணி போட்டியில் முதல் இன்னிங்ஸில் 117 ஓட்டங்களால் பின்தங்கியது. இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்சுக்காக பலோ ஓன் (Follow on) செய்ய வேண்டி ஏற்பட்டது.
இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை சந்திக்கும் நெருக்கடியுடன் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மேல் மாகாண வடக்கு அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடி சிக்கலை தவிர்த்துக் கொண்டது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது மேல் மாகாண வடக்கு அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 208 ஓட்டங்களை எடுத்தது.
மேல் மாகாண வடக்கு அணி சார்பில் சலின்த உஷான் 87 ஓட்டங்களை பெற்றதோடு சம்மு அஷான் 60 ஓட்டங்களை பெற்றார். மத்திய மாகாணம் சார்பில் வனிந்து ஹஸரங்க 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பத்து மாகாண அணிகள் கடந்த 21 தினங்கள் விளையாடிய 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாகாணங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பினுர பெர்னாண்டோ தலைமையிலான மேல் மாகாண வடக்கு அணி குழுநிலை போட்டிகள் அனைத்திலும் வென்றே இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.
“எமது அணி நன்றாக விளையாடியபோதும், அணியில் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு இருந்த குறைபாடு எமக்கு பாதகமாக அமைந்தது. போட்டியின் முதல்நாளில் சிறப்பாக விளையாடாததே எமக்கு பின்னடைவாக இருந்தது” என்று பினுர குறிப்பிட்டார். இலங்கை தேசிய அணிக்காக இவர் இரண்டு T20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பினுர பெர்னாண்டோ இந்த தொடரில் மொத்தம் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
எனினும் மேல் மாகாண தெற்கு அணி வீரர் டி.எஸ். பதிரன போட்டியின் தொடர் நாயகன் விருதை வென்றார். அவர் பந்துவீச்சில் நான்கு போட்டிகளில் மொத்தம் 24 விக்கெட்டுகளை வீழ்த்தயுள்ளார்.
சிறந்த துடுப்பாட்ட வீரராக தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வட மத்திய மாகாண வீரர் தினெத் திமோத்யா தெரிவானார். அவர் தனது நான்கு போட்டிகளிலும் 2 சதம் 2 அரைச் சதங்களுடன் மொத்தம் 490 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
சிறந்த பந்துவீச்சாளர் விருது வட மாகாண வீரர் தரிந்து ரத்னாயக்கவுக்கு கிடைத்தது. ரத்னாயக்க தனது நான்கு போட்டிகளிலும் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 293 (76) – நிமேஷ குணசிங்க 80, நுவனிது பெர்னாண்டோ 76, லஹிரு சமரகோன் 38, லக்ஷான் பெர்னாண்டோ 35, ரவின் சாயர் 32, பினுர பெர்னாண்டோ 4/39, துவிந்து திலகரத்ன 4/39
மேல் மாகாணம் வடக்கு (முதல் இன்னிங்ஸ்) – 176 (45.2) – சம்மு அஷான் 33, சஹான் ஆரச்சிகே 32, சரன நாணயக்கார 32, பினுர பெர்னாண்டோ 24, முஹமது ஷிராஸ் 4/45, சரித் சுதாரக 2/18
மேல் மாகாணம் வடக்கு (இரண்டாவது இன்னிங்ஸ்) – F/O 208/4 (51.2) – சலிந்த உஷான் 87, சம்மு அஷான் 60, பதும் நிஸ்ஸங்க 25, வனிந்து ஹசரங்க 2/42
போட்டி முடிவு – போட்டி சமநிலையில் முடிவு (முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை வென்ற மத்திய மாகாணம் சம்பியன் பட்டத்தை வென்றது)