ஸாஹிரா – பேதுரு கல்லூரிகளுக்கு இடையிலான மோதல் சமநிலையில்

149

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – I பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுக்கு வந்த கொழும்பு ஸாஹிரா கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை அடைந்தது.

நேற்று (23) ஸாஹிரா கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மைதான சொந்தக்காரர்களான ஸாஹிரா அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தனர்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸாஹிரா கல்லூரி தமது முதல் இன்னிங்ஸில் 91 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 194 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகளை சுழலால் சுருட்டிய பங்களாதேஷ்

ஸாஹிரா அணியின் துடுப்பாட்டத்தில் மொஹமட் டில்ஹான் அரைச்சதம் ஒன்றினை தாண்டி 51 ஓட்டங்களுடன் வலுச்சேர்க்க, தில்சார சமிந்த ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களுடனும் இம்தியாஸ் ஸ்லாசா 41 ஓட்டங்களுடனும் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இதேநேரம் புனித பேதுரு கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக சந்துஷ் குணத்திலக்க 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ருவின் செனவிரத்ன மற்றும் ஷிவான் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய புனித பேதுரு கல்லூரி, ஸாஹிரா வீரர் மொஹமட் றிபாத்தின் அதிரடி பந்துவீச்சினால் முதல் இன்னிங்ஸில் 122 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

பேதுரு கல்லூரியின் துடுப்பாட்டத்தில் சந்துஷ் குணத்திலக்க 41 ஓட்டங்கள் பெற்றிருக்க, பந்துவீச்சில் ஜொலித்த மொஹமட் றிபாத் ஸாஹிரா கல்லூரிக்காக 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், ஸாஹிரா கல்லூரிக்காக ஏற்கனவே துடுப்பாட்டத்தில் ஜொலித்த இம்தியாஸ் ஸ்லாசா மூன்று விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

தொடர்ந்து 72 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த ஸாஹிரா கல்லூரி அணி 50.1 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்டம் சமநிலை அடைந்தது.

ஸாஹிரா கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் மொஹமட் சமாஸ் 41 ஓட்டங்களை குவித்திருந்ததோடு, கனிஷ்க மதுவந்த பேதுரு கல்லூரியின் பந்துவீச்சில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 194 (91) – மொஹமட் டில்ஹான் 51, தில்சார சமிந்த 47*, இமதியாஸ் ஸ்லாசா 41, சந்துஷ் குணத்திலக்க 3/24

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 122 (43.3) –  சந்துஷ் குணத்திலக்க 41, மொஹமட் றிபாத் 5/28, இம்தியாஸ் ஸ்லாசா 3/45

ஸாஹிரா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 101/9 (50.1) – மொஹமட் சமாஸ் 41, கனிஷ்க மதுவந்த 6/29

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (ஸாஹிரா கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க