அபார சதம் கடந்த மதுரங்க; மஹாநாம கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

825
U19 School Cricket

19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரின், இன்று நிறைவடைந்த புனித பெனடிக்ட் கல்லூரிக்கு எதிரான போட்டியில் கொழும்பு மஹாநாம கல்லூரி அணியானது முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்துக்கொண்டது.

லசித் உடகேயின் அதிரடி பந்து வீச்சினால் புனித மரியார் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

புனித பெனடிக்ட் கல்லூரி எதிர் மஹாநாம கல்லூரி

புனித பெனடிக்ட் கல்லூரியின் சொந்த மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், நேற்றைய நாள் ஆட்ட நிறைவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 47 ஓட்டங்களை குவித்திருந்த புனித பெனடிக்ட் கல்லூரி அணி போட்டியின் இரண்டாம் நாளான இன்று தமது ஆட்டத்தினை தொடர்ந்தது, சமிந்து விஜயசிங்கவின் அரைச்சதத்துடன் (51) தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களைக் குவித்துக்கொண்டது.

மஹாநாம கல்லூரி சார்பாக பந்து வீச்சில் நேர்த்தியாக செயற்பட்ட ஹஷான் சந்தீப நான்கு விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

இதனையடுத்து, இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த மஹாநாம கல்லூரி அணியானது, 52 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் நிறைவுற்றது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. துடுப்பாட்டத்தில்  முன்னைய இன்னிங்ஸிலும் அசத்தியிருந்த மஹாநாம கல்லூரியின் மலிந்து மதுரங்க ஆட்டமிழக்காமல் இம்முறை 115 ஓட்டங்களைப் பெற்றதோடு மறுமுனையில் நிதுக வலிகல அரைச்சதம் கடந்து 60 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 227 (69) – மலிந்து மதுரங்க 51, ஹெஷான் ஹெட்டியராச்சி 43, நிதுக வலிகல 41, டிஷான் மெண்டிஸ் 31, மஹேஷ் தீக்ஷன 4/43, ப்ருத்திவி ஜெகராஜசிங்கம் 2/31

புனித பெனடிக்ட் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 159 (64.5) – சமிந்து விஜேசிங்க 51, ஹஷான் சந்தீப 4/47, மஹேல டி சில்வா 2/19

மஹாநாம கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 301/6 (52) – மலிந்து மதுரங்க 115*, நிதுக வலிகல 60, பவன் ரத்னநாயக்க 37

போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுற்றது. மஹாநாம கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித பேதுரு கல்லூரி எதிர் றோயல் கல்லூரி, கொழும்பு

பேதுரு கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், புனித பேதுரு கல்லூரி அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன் அடிப்படையில், தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த புனித பேதுரு கல்லூரியின் வினுல் குணவர்த்தன (81), லக்ஷின ரொட்ரிகோ (73) ஆகியோர் அரைச்சதங்களை குவித்தனர். இவர்களின் துடுப்பாட்ட உதவியுடன் 9 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை குவித்திருந்த புனித பேதுரு கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்கான ஆட்டத்தினை நிறுத்திக்கொண்டது. பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட றோயல் கல்லூரி பந்து வீச்சாளர்களான அபிஷேக் பெரேரா மற்றும் மனுல பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த றோயல் கல்லூரி அணியானது ஒரு விக்கெட்டினை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் போட்டியின் இன்றைய நாள் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி: 235/9d (65) – வினுல் குணவர்தன 81, லக்ஷின ரொட்ரிகோ 81, அபிஷேக் பெரேரா 3/38 , மனுல பெரேரா 3/68

றோயல் கல்லூரி: 72/1 (26) – ரோனுக ஜயவர்தன 44*, பசிந்து சூரியபண்டார 27*

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.