லசித் உடஹகேவின் அபார பந்துவீச்சினால் புனித மேரிஸ் கல்லூரிக்கு 9 விக்கெட் வெற்றி

297
U19 Cricket Roundup

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுற்ற போட்டியொன்றில் பண்டாரநாயக்க கல்லூரியை தோற்கடித்த கேகாலை புனித மேரிஸ் கல்லூரி 9 விக்கெட்டுகளால் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இன்று ஆரம்பமான ஏனைய போட்டிகளின் முதல் நாள் நிறைவில் புனித அலோசியஸ் கல்லூரி மற்றும் தர்மாசோக கல்லூரி அணிகள் முன்னிலையில் உள்ளன.

பண்டாரநாயக்க கல்லூரி எதிர் புனித மேரிஸ் கல்லூரி

முதல் இன்னிங்சில் ஒரு ஓட்டத்தினால் முன்னிலை பெற்றுக் கொண்ட பண்டாரநாயக்க கல்லூரி இன்று தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. லசித் உடஹகேவின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய பண்டாரநாயக்க கல்லூரி 14.3 ஓவர்களில் 47 ஓட்டங்களுக்கே சுருண்டது.

ஹசித திமல் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டார். லசித் உடஹகே 31 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் திமிர சுபுன் 3 விக்கெட்களை சாய்த்தார்.

49 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய புனித மேரிஸ் கல்லூரி அணி, 8.4 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியைத் தனதாக்கியது. கஜித கொட்டுவகொட ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய பண்டாரநாயக்க கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. சாசிரி அதிகாரி அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் லசித் உடஹகே 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

புனித மேரிஸ் கல்லூரி அணியும் தமது முதல் இன்னிங்சிற்காக 137 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. ராஜித கொட்டுவகொட 39 ஓட்டங்களையும் மாஸ் ரஹீம் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பண்டாரநாயக்க கல்லூரி சார்பாகப் பந்து வீச்சில் தசுன் பண்டார 3 விக்கெட்டுகளையும், சிசித்த மதநாயக மற்றும் ஹிமத் ஜயவீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 138 (48.1) – சாசிரி அதிகாரி 39, கயாஷான் ஹெட்டியாராச்சி 25, லசித் உடஹகே 48/4, சஞ்சய் ரஞ்சித் 15/2, மாஸ் ரஹீம் 18/2

புனித மேரிஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 137 (35) – கஜித கொட்டுவகொட 39, மாஸ் ரஹீம் 28, தசுன் பண்டார 11/3, சிசித்த மதநாயக 22/2, ஹிமத் ஜயவீர 37/2

பண்டாரநாயக்க கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 47 (14.3) – ஹசித திமல் 29*, லசித் உடஹகே 31/5, திமிர சுபுன் 09/3

புனித மேரிஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 50/1 (8.4) – கஜித கொட்டுவகொட 31*

முடிவு: புனித மேரிஸ் கல்லூரி 9 விக்கெட்டுகளால் வெற்றி.


புனித அலோசியஸ் கல்லூரி எதிர் மொரட்டுவ மகா வித்தியாலயம்

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான போட்டியொன்றில் மொரட்டுவ மகா வித்தியாலய அணியும் புனித அலோசியஸ் கல்லூரிஅணியும் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற புனித அலோசியஸ் கல்லூரி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய மொரட்டுவ மகா வித்தியாலயம் 72.5 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 163 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நிஷான் மதுஷ்க 76 ஓட்டங்கள் குவித்தார். பந்துவீச்சில் ஹரின் வீரசிங்க 4 விக்கெட்டுகளையும் கவிஷ்க டில்ஷான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய புனித அலோசியஸ் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பேதுமின்றி 5 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

மொரட்டுவ மகா வித்தியாலயம் 163 (72.5) – நிஷான் மதுஷ்க 76, இசுரு உதயங்க 24, ஹரின் வீரசிங்க 4/48, கவிஷ்க டில்ஷான் 3/35

புனித அலோசியஸ் கல்லூரி 5/0 (2)

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


குருகுல கல்லூரி எதிர் தர்மாசோக கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான மற்றுமொரு போட்டியில் குருகுல கல்லூரியை எதிர்த்து தர்மாசோக கல்லூரி போட்டியிட்டது. நாணய சுழற்சியில் வென்ற தர்மாசோக கல்லூரி எதிரணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய குருகுல கல்லூரி 58.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அதிரடியாக ஆடிய உதார ரவிந்து 95 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் கலிந்து நதீஷான் 3 விக்கெட்டுகளையும் உஷான் இமந்த 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து களமிறங்கிய தர்மாசோக கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று முதல் இனிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது. ரவிந்து ரொஷாந்த 71 ஓட்டங்களையும் கசுன் மதுரங்க 43 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி 180 – (58.2) – உதார ரவிந்து 95, அசிந்த மல்ஷான் 21, கலிந்து நதீஷான் 3/13, உஷான் இமந்த 2/13

தர்மாசோக கல்லூரி – 183/4 (41) – ரவிந்து ரொஷாந்த 71, கசுன் மதுரங்க 43, கவீஷ் குமார 20*

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.