இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (19) நடைபெற்றன.
மேல் மாகாணம் தெற்கு எதிர் மேல் மாகாணம் மத்தி
பசிந்து சூரியபண்டாரவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் மேல் மாகாணம் மத்திய அணி, மேல் மாகாண தெற்கை 6 விக்கெட்டுகளால் வென்றது.
கிழக்கு மாகாண அணிக்கு மீண்டும் தோல்வி
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட…
கொழும்பு, பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேல் மாகாண மத்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேல் மாகாண தெற்கு அணியின் துடுப்பாட்ட வீரர்களை மத்திய அணியின் பந்துவீச்சாளர்களால் மட்டுப்படுத்த முடிந்தது.
கலன பெரேரா மற்றும் துனித் வெல்லகே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த மேல் மாகாண தெற்கு அணி 50 ஓவர்களுக்கும் 182 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும் அந்த அணியின் சுவத் மெண்டிஸ் (53) அரைச்சதம் ஒன்றை பெற்றார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய மேல் மாகாண மத்திய அணி சார்பில் கொழும்பு ரோயல் கல்லூரியின் சூரியபண்டார அபாரமாக துடுப்பெடுத்தாடினார். அவர் ஆட்டமிக்காது 81 ஓட்டங்களை பெற மேல் மாகாண மத்திய அணியால் இலகு வெற்றியை பெற முடிந்தது.
இதன்மூலம் அந்த அணி 44.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
போட்டியின் சுருக்கம்
மேல் மாகாணம் தெற்கு – 182 (50) – சுவத் மெண்டிஸ் 53, நுவனிது பெர்னாண்டோ 42, நிஷான் பெர்னாண்டோ 21, கலன பெரேரா 3/39, துனித் வெல்லகே 3/24, சன்தூஷ் குணதிலக்க 2/12
மேல் மாகாணம் மத்தி – 186/4 (44.5) – பசிந்து சூரியபண்டார 81*, கமில் மிஷாரா 32, சன்தூஷ் குணதிலக்க 28
முடிவு – மேல் மாகாணம் மத்திய 6 விக்கெட்டுகளால் வெற்றி
கிழக்கு மாகாணம் எதிர் தென் மாகாணம்
19 வயதுக்கு உட்பட்ட மாகாண மட்ட தொடரில் சோபிக்கத் தவறிவரும் கிழக்கு மாகாண அணி தென் மாகாணத்துடனான போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கிழக்கு மாகாண அணி 35.1 ஓவர்களில் 81 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தேவ திலுக்ஷன் 20 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். தென் மாகாண அணிக்காக நான்கு வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.
இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய தென் மாகாண அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 11.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கான 82 ஓட்டங்களை எட்டியது.
இந்த தொடரில் B குழுவில் ஆடும் கிழக்கு மாகாண அணி அந்த குழுவில் கடைசி இடத்துடன் வரும் சனிக்கிழமை (23) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
கிழக்கு மாகாணம் – 81 (35.1) – தேவ திலுக்ஷன் 20, சதுன் மெண்டிஸ் 2/10, சசித் மதுசங்க 2/10, கவிந்து ராஜபக்ஷ 2/15, திலும் சதீர 2/21
தென் மாகாணம் – 82/3 (11.4) – மிஹிசல் அமோத 38, வினுர துல்சர 30*, தேவ திருக்ஷன் 2/47
முடிவு – தென் மாகாணம் 7 விக்கெட்டுகளால் வெற்றி