ஹரீன் 10 விக்கெட் வீழ்த்த புனித ஆலோசியஸ் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

219
Under 19 Division l - 25th of Oct

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 2 போட்டிகள் இன்று நிறைவடைந்தன.

இசிபதன கல்லூரி, கொழும்பு எதிர் புனித அலோசியஸ் கல்லூரி, காலி

கொழும்பு இசிபதன கல்லூரியை இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரட்டை இலக்கத்திற்கு சுருட்டிய புனித அலோசியஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டி கடைசி நாளான இன்று முன்கூட்டியே முடிவுற்றது. புனித அலோசியஸ் கல்லூரிக்காக ஹரீன் புத்தில இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இசிபதன கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் 98 ஓட்டங்களுக்கே சுருண்டது. தனித்து ஆடிய சன்ஜுல இலங்கதிலக்க 55 ஓட்டங்களை பெறும்போது ஏனைய 10 வீரர்களும் சேர்ந்து மொத்தம் 43 ஓட்டங்களையே பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் புத்தில 21 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

புனித அலோசியஸ் கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் 258 ஓட்டங்களை பெற்றது. ரவின்து சன்ஜன (67), சன்தீப சமோத் (55) மற்றும் லஹிரு தனன்ஜன (51) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர். பந்துவீச்சில் லஹிரு டில்ஷான் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 160 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இசிபதன கல்லூரி 33 ஓவர்களில் 77 ஓட்டங்களுக்கே சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக பந்துவீசிய புத்தில 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்  

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 98 (41.3) – சன்ஜுல இலங்கதிலக்க 55, ஹரீன் புத்தில 5/21, கவின்து மதுரங்க 2/09, ரவின்து சன்ஜன 2/11

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 258 (72) – ரவின்து சன்ஜன 67, சன்தீப சமோத் 55, லஹிரு தனன்ஜன 51, பசிது நாணயக்கார 36, லஹிரு டில்ஷான் 4/50, மதுஷிக சதருவன் 2/38

இசிபதன கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 77 (33) –  ஹரீன் புத்தில 5/28

முடிவு: புனித அலோசியஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் வெற்றி


புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் புனித பெனடிக்ட் கல்லூரி அணியை வெஸ்லி கல்லூரி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.

நேற்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய புனித பெனடிக்ட் கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களை பெற்றதோடு, வெஸ்லி கல்லூரி முதல் இன்னிங்ஸில் 130 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று ஒரு ஓட்டத்திற்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே புனித பெனடிக்ட் கல்லூரி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. எனினும் அந்த அணி முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 44.2 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கே சுருண்டது.

ஷெஹான் பெர்னாண்டோ சிறப்பாக ஆடி 67 ஓட்டங்களை  பெற்றபோதும் முவின் சுபசிங்கவின் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க பெனிடிக்ட் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினர். சுபசிங்க 85 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்படி வெஸ்லி கல்லூரி அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் ஹசித கீசர ஒருமுனையில் பொறுப்புடன் ஆடி 75 ஓட்டங்களை பெற்றதோடு ஷேனால் தங்கல்ல ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்மூலம் வெஸ்லி கல்லூரி 49.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 122 (42.1) – கவீஷ ஜயதிலக்க 26*, பிருதுவி கேதராமசிங்கம் 25, முவின் சுபசிங்க 3/46, சஹ்குன்த லியனகே 2/12, மொஹமட் உபைதுல்லா 2/16

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 130 (36.1) – ஹசித கீசர 28, திசுரக அக்மீமன 27, மஹீஷ் தீக்ஷன 5/31, சதுரங்க லக்மால் 2/15  

புனித பெனடிக்ட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 176 (44.2) – ஷெஹான் பெர்னாண்டோ 67, கவீஷ ஜயதிலக்க 48, மொவின் சுபசிங்க 5/85, சகுன்த லியனகே 2/21, ஷேனால் தங்கல்ல 2/22   

வெஸ்லி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 171/8 (49.3) – ஹசித கீசர 75, ஷெஹால் தங்கல்ல 47*, சஹில் டயஸ் 27, மஹீஷ் தீக்ஷன 3/67, பிருதுவி கேதராமசிங்கம் 2/25, கவீஷ ஜயதிலக்க 2/34

முடிவு: வெஸ்லி கல்லூரி 2 விக்கெட்டுகளால் வெற்றி