குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட ஸாஹிரா எதிரணிக்கு சவால்

275

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

ஸாஹிரா கல்லூரி, மருதானை எதிர் லும்பினி கல்லூரி, கொழும்பு

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லும்பினி கல்லூரியுடனான போட்டியில் ஸாஹிரா கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் இரட்டை இலக்க ஓட்டத்துடன் சுருண்டபோதும், அந்த அணி பந்துவீச்சில் எதிரணிக்கு சவாலாக செயற்பட்டது.

முதல் சுற்றின் D குழுவில் இன்று ஆரம்பமான போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற ஸாஹிரா கல்லூரி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. வேகமாக விக்கெட்டுகளை பறிகொடுத்து 31.2 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு தமது முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது. ஸாஹிரா கல்லூரி சார்பாக யசித் நிர்மல பெற்ற 21 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும்.

லும்பினி கல்லூரி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அமித் தாபரே 4 விக்கெட்டுகளையும் விமுக்தி குலதுங்க 3 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த லும்பினி கல்லூரி ஸாஹிரா கல்லூரி பெற்ற முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை இலகுவாக கடந்த போதும் அந்த அணியும் சவாலான ஓட்டங்களைப் பெறாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லும்பினி கல்லூரி சார்பாக கவீன் தெமித (56) மற்றும் விமுக்தி குலதுங்க (43) தவிர்த்து எஞ்சிய துடுப்பாட்ட வீரர்கள் மொத்தமாக 29 ஓட்டங்களையே பெற்றனர்.

இதனால் லும்பினி கல்லூரி 45.1 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஸாஹிரா கல்லூரி சார்பில் அபாரமாக பந்துவீசிய மொஹமட் டில்ஹான் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் முதல் இன்னிங்சில் 61 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் ஸாஹிரா கல்லூரி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 67 (31.2) – யசித் நிர்மல 21, அமித் தாபரே 4/13, விமுக்தி குலதுங்க 3/16, ஷஷித் ரவிந்து 2/12

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 128 (45.1) – கவீன் தெமித 56, விமுக்தி குலதுங்க 43, மொஹமட் டில்ஹான் 4/22, ரித்மிக நிமேஷ் 2/21

ஸாஹிரா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 21/2 (15)


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் புனித அலோசியஸ் கல்லூரி, காலி

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் புனித பேதுரு மற்றும் புனித அலோசியஸ் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் இரு அணிகளாலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியவில்லை.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித அலோசியஸ் கல்லூரி, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை புனித பேதுரு கல்லூரிக்கு வழங்கியது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி 78 ஓட்டங்களுக்கே சுருண்டது. புனித அலோசியஸ் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் தினுக்க லக்மால் வெறுமனே 5 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இவர் தவிர ரவிந்து சன்ஜன 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டெஸ்ட் சம்பியன்ஷிப், ஒரு நாள் லீக் என்பவற்றுக்கு ICC ஒப்புதல்

டெஸ்ட் சம்பியன்ஷிப், ஒரு நாள் லீக் என்பவற்றுக்கு ICC ஒப்புதல்

டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் சர்வதேச லீக் கிரிக்கெட் போட்டிகளை நடாத்தும் திட்டத்திற்கு  …

பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த புனித அலோசியஸ் கல்லூரி துடுப்பாட்ட வீரர்களாலும் புனித பேதுரு கல்லூரி பந்துவீச்சாளர்களை நின்றுபிடித்து ஆட முடியவில்லை. முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது புனித அலோசியஸ் கல்லூரி 88 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எதிரணி பந்துவீச்சாளரான சந்துஷ் குணதிலக்க 3 விக்கெட்டுகளையும் மொஹமட் அமீன் 2 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

எனினும் மேலும் இரண்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்க புனித அலோசியஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

 

போட்டியின் சுருக்கம்   

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 78 (42.5) – தினுக்க லக்மால் 4/05, ரவிந்து சன்ஜன 3/28, ஹரின் புத்தில 2/21

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 88/8 (52) – சந்துஷ் குணதிலக்க 3/18, மொஹமட் அமீன் 2/22

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி

காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் சீரற்ற காலநிலையால் அதிகமான நேரம் வீணானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ரிச்மண்ட் கல்லூரி, தர்மபால கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிங்கிய தர்மபால கல்லூரி சதுன் மெண்டிஸின் பந்துக்கு முகம்கொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் முதல்நாள் ஆட்ட நேர முடிவின் போது தர்மபால கல்லூரி 59.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

தர்மபால கல்லூரி சார்பாக குஷன்க பீரிஸ் சிறப்பாக ஆடி அரைச்சதம் ஒன்றை பெற்றதோடு அவிஷ்க ஹசரிந்த 40 ஓட்டங்களை பெற்றார்.

ரிச்மண்ட் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் சதுன் மெண்டிஸ் 50 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 144/8 (59.3) – குஷன்க பீரிஸ் 50, அவிஷ்ய ஹசரிந்த 40, மலிந்த சதகலும் 31, சதுன் மெண்டிஸ் 5/50

நாளை போட்டிகளின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.