இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதுக்கு உட்பட்ட FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடர் அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக 24 அணிகள் போட்டியிட்ட இத் தொடரில் கிண்ணத்தை வெல்லும் பயணத்தில் நாளை (25) நான்கு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கால்பந்து விளையாட்டில் எந்த நிலையிலும் பலம் கொண்ட அணியான பிரேசில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதியில் ஐரோப்பாவின் பலம்பெற்ற அணியான இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
2017ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தெரிவு
2017ஆம் ஆண்டுக்கான பிபாவின் (FIFA)
குழு நிலையில் நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற பிரேசில், நொக் அவுட் (knock out) சுற்றில் ஹொன்டுராஸ் அணியை 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. அதன் பின்னர் கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி நடைபெற்ற காலிறுதியில் பிரேசில் அணி ஜெர்மனியை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த தொடரில் அசைக்க முடியாத அணியாக நிரூபித்திருக்கும் பிரேசில் அதிக கோல்களை புகுத்தி இருப்பதோடு எதிரணிக்கு 2 கோல்களை மாத்திரமே விட்டுக் கொடுத்துள்ளது. குறிப்பாக அந்த அணியின் கோல் காப்பாளர் காப்ரியல் பிராசாவோ அரணாகவே செயற்பட்டு வருகிறார். அவரது கோல் காப்பு வீதம் 88.9 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அவர் இதுவரை எதிரணியின் 16 கோல் வாய்ப்புகளை தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணி அதிகம் சோபிக்காத நிலையில் அரங்கில் கூடும் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பிரேசிலுக்கே ஆதரவை வெளியிட்டு வருவது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
மறுபுறம் குழுநிலை போட்டிகள் மூன்றிலும் அதிக கோல்களை புகுத்தி வெற்றியீட்டிய இங்கிலாந்து, ஜப்பானுக்கு எதிரான நொக் அவுட் சுற்றை பெனால்டி உதை முறையில் 5-3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.
எனினும், இங்கிலாந்து கடந்த சனிக்கிழமை (21) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அமெரிக்காவை 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுத்திக்கு முன்னேறியுள்ளது.
இளம் இங்கிலாந்து அணியில் அனைத்து வீரர்களும் சரிசமமாக திறமையை வெளிப்படுத்தி வருவது அந்த அணிக்கு பலம் சேர்க்கும் ஒன்றாகும்.
17 வயதுக்கு உட்பட்ட FIFA உலகக் கிண்ண போட்டியில் பிரேசில் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துவது இது மூன்றாவது தடவையாகும். முன்னதாக 2007இல் தென் கொரியாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து வென்றதோடு 2015 சிலியில் நடந்த போட்டியில் பிரேசில் வென்றது.
சக வீரருடன் மோதி இந்தோனேஷிய கோல் காப்பாளர் திடீர் மரணம்
இந்த இரு அணிகளும் மோதும் நாளைய போட்டியை கௌஹாத்தி, இந்திரா காந்தி அரங்கில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் அங்கு கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக மைதானம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் போட்டியை கொல்கத்தா செல்ட் லேக் அரங்கிற்கு மாற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடைசி நேரத்தில் தீர்மானித்தது.
பரபரப்பான இந்த அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி நாளை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சர்வதேச கால்பந்து அரங்கில் ஆபிரிக்காவின் மாலி அணி பெரிதாக திறமையை காட்டாத போதும் அதன் இளம் கால்பந்து அணி சிறப்பாக ஆடி அரையிறுதிவரை முன்னேறியுள்ளது. நவி மும்பை, டொக்டர் டி.வை. பாடில் அரங்கில் நாளை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மாலி அணி ஐரோப்பாவின் மற்றொரு பலம்கொண்ட அணியான ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
மாலி தனது முதல் சுற்றில் மூன்றில் இரண்டு போட்டிகளை வென்று நொக் அவுட் சுற்றில் ஈராக் அணியை வீழ்த்தியே காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் சக ஆபிரிக்க அணியான கானாவை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியே மாலி அரையிறுதிக்கு தெரிவாகியது.
17 வயதுக்கு உட்பட்ட ஆபிரிக்க சம்பியனான மாலி அரையிறுதி வரை முன்னேறிய போதும், அது அதிக சவால்கொண்ட அணிகளை எதிர்கொள்ளவில்லை என்பது அந்த அணிக்கு சாதகமாக இருந்தபோது. எனினும் இந்த உலகக் கிண்ணத்தில் சரிசமமான அணியாக இருக்கும் ஸ்பெயினை எதிர்கொள்வதிலும் மாலிக்கு சாதகமான நிலை காணப்படுகிறது.
குறிப்பாக மும்பையின் உஷ்னமான காலநிலையில் ஸ்பெயின் அணி தாக்குப்பிடிப்பது சற்று கடினமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மாலி முன்கள வீரர் லசனா நிடியாயே இந்த உலகக் கிண்ண தொடரில் அதிக கோல் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்துகொள்கிறார். மறுபுறம் ஸ்பெயினின் அபெல் ருயிஸ் அந்த அணிக்காக 4 கோல்களை போட்டுள்ளார்.
சர்வதேச போட்டிகளுக்கு விடை கொடுக்கும் ஆயன் ரொபென்
ஸ்பெயின் முதல் சுற்றில் இரண்டு போட்டிகளில் வென்று, ஒன்றில் தோற்றே நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அந்த சுற்றில் பலம் கொண்ட பிரான்ஸை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வென்ற ஸ்பெயின் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த காலிறுதியில் ஈரானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஸ்பெயின் தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்தி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.
17 வயதுக்கு உட்பட்ட FIFA உலகக் கிண்ண போட்டியை நடத்துவதன் மூலம் இந்திய முதல் முறை FIFA தொடர் ஒன்றை நடத்துவது குறிப்பிடத்தக்கதாகும். போட்டியை நடாத்தும் அணி என்பதால் இந்திய இளம் கால்பந்து அணிக்கு இந்த உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தபோதும் அந்த அணி முதல் 3 போட்டிகளிலும் தோற்று முதல் சுற்றுடனேயே வெளியேறியது.
17 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டியில் ஆபிரிக்காவின் நைஜீரிய அணியே நடப்புச் சம்பியனாக உள்ளது. கடைசியான 2015 ஆம் ஆண்டு சிலியில் நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் மாலியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்து கிண்ணத்தை வென்றது.
17 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தை அதிக முறை வென்ற அணியாகவும் நைஜீரியாவே உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டித் தொடரில் நைஜீரியா ஐந்து தடவைகள் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
எனினும் இம்முறை உலகக் கிண்ணத்திற்கு நைஜீரியா தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.